

ஆற்காடு நவாப் குடும்பத்தில் இரட்டையர்களில் ஒருவராகப் பிறந்து, தமிழகத்தின் மிகச்சிறந்த மருத்துவராகவும், சிறந்ததொரு நிர்வாகியாகவும் செயல்புரிந்த டாக்டர் ஏ.எல். முதலியார் என்ற ஆண் மருத்துவரைப் பற்றி கடந்த வாரங்களில் தெரிந்து கொண்டோம்.
இப்போது கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் பெண் மருத்துவரைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்!
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் பெண் மருத்துவர் மட்டுமல்ல கேரளாவின் முதல் பெண் பட்டதாரி, முதல் சட்டமன்ற உறுப்பினர், உலகின் முதல் பெண் சர்ஜன் ஜெனரல் என பலவற்றுக்கும் முதலாவதாகத் திகழ்ந்தவர் டாக்டர் மேரி பூனன் லூகோஸ். இவருக்கும் தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் வெறும் மூன்று நாட்கள்தான் வயது வித்தியாசம்.
கேரளாவின் கோட்டயம் அருகிலுள்ள ஐமணம் கிராமத்தில் சிரியன் கிறிஸ்தவ குடும்பத்தில், 1886 ஆகஸ்ட் 1-ம் தேதி மேரி பூனன் பிறந்தார். தாய்க்கு மனநலம் பாதிக்க மேற்கொண்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. பிறந்த ஊரில் மனைவியை பெரியவர்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டு மகளை மட்டும் தூக்கிச் சென்றார் மருத்துவரான தந்தை டாக்டர் டி.ஈ. பூனன்.
அப்பாபோல டாக்டராகணும்!
திருவனந்தபுர சுகாதாரத்துறை மருத்துவராக இருந்த தந்தையுடன் தனியாக வசித்த மேரி பூனனுக்கு, குழந்தையிலிருந்தே தந்தையைப் போலவே மருத்துவம் பிடித்தமான துறையாகிப்போனது. "பெரியவளானதும் அப்பா போலவே நல்ல டாக்டராகணும்" என்று எப்போதும் கூறிக்கொண்டிருந்தார். ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி படிப்பை முடித்து, கல்லூரியில் பட்டப்படிப்பு சேர முயன்றார்.
பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு மறுக்கப்பட்ட காலம் அது. சென்னை பல்கலைக்கழகத்துக்கு கீழ்வரும் திருவனந்தபுரத்தின் மகாராஜா கல்லூரியில் பெரும் பிரயத்தனத்துக்குப் பிறகு பி.ஏ. சேர்ந்தார். 1909-ல் அவர் பி.ஏ. தேறியபோது மாநிலத்தின் முதல் பெண் பட்டதாரி என்று ஊரே பாராட்டினாலும், அது வெறும் பெருமை மட்டுமே என்பதை உணர்ந்தார்.
ஏனென்றால் மருத்துவம் பயில்வதற்கு 2வில் முதல் குரூப் இப்போது தேவை என்பது போலவே, அன்று அறிவியலில் இளநிலை பட்டம் தேவையாயிருந்தது. தனது பி.ஏ. பட்டம் தனது மருத்துவக் கனவுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. மருத்துவ கனவை நிஜமாக்க தந்தையின் ஆலோசனைப்படி இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலச் சென்றார்.
காத்திருந்த அதிர்ச்சி
மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து டப்ளின் பல்கலைக்கழகத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனில் மேற்படிப்பு பயின்று தந்தையின் விருப்பப்படி நாடு திரும்ப எத்தனித்தார். ஆனால், முதலாம் உலகப்போர் உச்சக்கட்டதில் இருந்தது. தனக்கு கல்வியளித்த நாட்டின்காயம்பட்ட வீரர்களுக்கு ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சையளித்த மேரி, சமயத்தில் செவிலியப் பணியையும் சேர்த்தேமேற்கொண்டார்.
அதேசமயம் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதைத் தெரிந்து தாய்நாட்டிற்குத் திரும்பினார். வீடு வந்துசேரும் முன்பே தந்தை இறந்துவிட்டதையும், யாருமில்லாத தனது வீடுசூறையாடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியுற்றார். தனிமரமாக நின்ற மேரியைத் தேற்றியது திருவிதாங்கூர் சமஸ்தானம்.
எம்எல்ஏ ஆக்கிய பிரசவம்!
தொடர்ந்து தைக்காடு அரசுமருத்துவமனையின் பொறுப்பு மருத்துவரானார். தந்தையின் சொற்களை நனவாக்கினார். கேரளாவில் சிசேரியன் உட்பட சிறப்பு அறுவைசிகிச்சை முறைகள் அறிமுகம், செவிலியர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் பணி நியமனம், மருத்துவமனை படுக்கை வசதிகள் அதிகரிப்பு என இயங்கினார். அடுத்தடுத்து கருச்சிதைவு ஏற்பட்ட ராணி சேதுலட்சுமிக்கு வெற்றிகரமாகப் பிரசவம் பார்த்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான மருத்துவராகவும் பொறுப்பேற்றார்.
அதைத் தொடர்ந்து இவரை சட்டமன்ற உறுப்பினராகவும், சர்ஜன் ஜெனரலாகவும் சமஸ்தானத்தின் ராணி அறிவித்தார். ஆணாதிக்கம் நிறைந்த அன்றைய சட்டமன்றத்தில், தனது ஒவ்வொரு நகர்வுக்கும் மேரிக்கு பெரும் சிரமமிருந்தாலும், ராணி சேதுலட்சுமியின் ஆதரவுடன் பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி, அதை செயல்படுத்தினார்.
‘கேரளா மாடல்’ உருவாக்கியவர்
சின்ன அம்மைக்கான தடுப்பூசியை நமது தேசத்திற்கு வரவழைத்ததில் இருந்து, நாகர்கோவிலில் டிபி சானடோரியம் (இன்றைய கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி), திருவனந்தபுரத்தில் கதிரியக்க சிகிச்சை பிரிவு, மாநிலமெங்கும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகள் என தனது துறையை வலுப்படுத்திய மேரி, தொடர்ந்து பெண் கல்வி, பெண்கள் நலம், பால்ய விவாக மறுப்பு, பள்ளி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு, கட்டாயத் தடுப்பூசிகள் என தனது மாநிலத்தையே தேசத்தின் முன்மாதிரியாக, ‘கேரளா மாடல்' என்று கொண்டு வந்தார்.
அதேசமயம் ஒய்.டபிள்யூ.சி.ஏ., சாரண சாரணியர் அமைப்பு, இந்திய மருத்துவ சங்கம் ஆகியவற்றையும், பல்வேறு சேவை அமைப்புகளையும் மாநிலத்தில் அமைக்க வழிவகுத்தார். இன்றளவும் நாம் அனைவரும் வியக்கும் வண்ணம், அனைத்து துறைகளிலும் கேரளா சிறந்து நிற்பதற்கு மேரி பூனனின் வழிகாட்டுதல்கள் முக்கியக் காரணம்.
வழக்கறிஞர் கே.பி. லூகோஸுக்கு சிறந்த மனைவியாகவும், தனது குழந்தைகளுக்கு சிறந்த தாயாகவும் குடும்பத்தையும் சிறப்பாக நிர்வகித்தார். ஒருசமயத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த தனது குடும்பத்தினரின் அகால மரணங்களால் மனம் கலங்கிப்போனார் மேரி பூனன்.
"மகளே...உனக்கு எளிதில் கிடைத்த இந்த வாய்ப்புகள் மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டவை என்பதை நினைவில் கொண்டு மருத்துவம் படி. மற்றவர்களுக்கு அது பயனளிக்கும்படி வாழ்ந்து காட்டு" என்று தந்தை கூறிய வார்த்தைகளை இறுதிவரைக் காப்பாற்றினார். வைத்திய சாஸ்திர குசல விருது மற்றும் பத்ம விருதினை தனது தந்தைக்கு அர்ப்பணித்தார். ஒய்.டபிள்யூ.சி.ஏ.வில் தங்கி மக்கள் சேவையை செய்தபடியே 1976 அக்டோபர் 2ம் தேதி ஒரு காந்தி ஜெயந்தியன்று இயற்கை எய்தினார்.
(மகிமை தொடரும்)
கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர்,
சமூக ஆர்வலர். தொடர்புக்கு:
savidhasasi@gmail.com