

பத்து வாழ்க்கைத் திறன்களையும் ஆசிரியர் எழில் பட்டியலிட்டதும் “இவை மட்டும்தான் வாழ்க்கைத் திறன்களா?” என்று இளவேனில் கேட்டாள்.
“வாழ்க்கைத் திறன்கள் பல இருக்கின்றன. ஆனால், ஒருவரின் மனநலத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்த இந்தப் பத்து திறன்கள் முதன்மையானவை என்கிறது உலக சுகாதார அமைப்பு” என்றார் எழில்.
ஏன் தேவை?
ஏன் இந்தத் திறன்கள் ஒருவருக்குத் தேவை என்று மணிமேகலை கேட்க, எழில் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.முதல் வகுப்பில் நன்மாறன் மதிவாணன் கதையைப் பேசினோமே. நினைவிருக்கிறதா? அதில் நன்மாறனுக்கு இருந்த சவால் என்ன? அவருக்குப் புதிய ஊரான புதுடெல்லியின் மொழியும் பழக்க வழக்கங்களும் தெரியவில்லை.அவற்றைக் கற்றுக்கொண்டாரா?
ஆம்! தன்னால் அவற்றைக் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். அதற்கான முயற்சியை மேற்கொண்டார். அந்த நம்பிக்கைக்கும் முயற்சிக்கும் பெயர் ‘உடன்பாட்டு நடத்தை’ (Positive Behaviour). அதனால் அவருக்கு அவ்வூரோடு ‘ஒன்றும் வல்லமை’ (Ability for Adaptive) கிடைத்தது. அவற்றின் துணையோடு அவரால் தனது அன்றாட வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு தேவைகளை (Demands) நிறைவுசெய்ய முடிந்தது. எனவேதான் வாழ்க்கைத்திறன்கள் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கிறது. என்று ஆசிரியர் எழில் விளக்கம் அளித்தார்.
எது தேவை?
“நான் கோலம் வரையக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அதனைத் தொடரவே இயலவில்லை” என்று ஆதங்கப்பட்ட சாமுவேல், “ஆனால், நன்மாறனால் மட்டும் எப்படி அவர் நினைத்ததைச் சாதிக்க முடிந்தது?” என்றான். புன்னகைத்த ஆசிரியர், “எல்லாருக்கும் பல்துலக்கத் தெரியுமா?” என்று வினவினார். வகுப்பே ‘கொல்’லென்று சிரித்தது.
“யாருக்காவது பல்துலக்கத் தெரியாம இருக்குமா!” என்றாள் கண்மணி சற்று எரிச்சலோடு. “எப்படித் துலக்க வேண்டும்?” ‘இதெல்லாம் ஒரு வினாவா?’ என்பதைப்போல முகத்தை வைத்துக்கொண்டு, “இப்படித்தான்” என்று தனது ஆள்காட்டி விரலை முகத்திற்கு நேரே வைத்து மேலும் கீழும் இடமும் வலமும் உள்ளும் புறமும் சிறுசிறு வட்டங்களாக அசைத்து காற்றிலேயே பல்துலக்கிக் காட்டினாள் நன்மொழி.
“ஒரு நாளைக்கு எத்தனை தடவை பல்துலக்க வேண்டும்?” “இரண்டு தடவை. காலையிலும் இரவிலும்.” “எத்தனை பேர் அப்படித் துலக்குகிறீர்கள்?” என்று எழில் வினவியதும் வகுப்புறை அமைதியானது. வெட்கச் சிரிப்போடு ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒரு நிமிடம் கழித்து, “ஒருவருமில்லை” என்று தானே விடையும் கூறினார் ஆசிரியர்.
பல்துலக்க இயலாதது ஏன்?
“இதற்கும் நான் கேட்ட வினாவிற்கும் என்ன ஐயா தொடர்பு?” சலித்துக்கொண்டான் சாமுவேல்.“பொறு தம்பி!” என்ற ஆசிரியர், ‘ஒரு நாளில் இரண்டு வேளை பல்துலக்க வேண்டும் என அறிந்திருப்பது அறிவு (Knowledge).
எப்படித் துலக்க வேண்டும் என்று தெரிந்திருப்பது திறன் (Skill). அறிவையும் திறனையும் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யத் தூண்டுவது ‘மனப்பாங்கு’ (Attitude). அந்த மனப்பாங்கு இல்லாததால்தான் பலரால் இருவேளையும் பல்துலக்க இயலவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.
எழில் கூறிமுடிப்பதற்கு முன்னரே, “ஓ! எனக்குக் கோலம் வரையக் கற்க ஆர்வம் இருந்தும் அதனைத் தொடர்ந்து கற்காததற்குக் காரணம் எனக்கு அதற்கான ‘மனப்பாங்கு’ இல்லாததுதான் போல” என்றான் சாமுவேல், “ஆம்” என்று தலையசைத்தார் எழில். “அந்த மனப்பாங்கை எப்படி வளர்த்து கொள்வது?” ஆர்வத்தோடு வினவினான் காதர். “வாழ்க்கைத்திறன்கள் பத்தையும் கற்றுக் கொள்வதன் வழியாக...”
“அவற்றை எங்களுக்குக் கற்றுக் கொடுப்பீர்களா?” என்று வேண்டினாள் அருட்செல்வி.
“அடுத்த வகுப்பிலிருந்து கற்கத் தொடங்கலாம்” என்றார் எழில்.
(தொடரும்)
கட்டுரையாளர்:
வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்