

விலங்குகளுக்கு வியர்க்குமா, டிங்கு?
- ஆர். விக்னேஸ்வரன், 8-ம் வகுப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.
பாலூட்டிகள் வெப்ப ரத்தப் பிராணிகள். தங்கள் உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக் கொள்ளக்கூடிய தகவமைப்பைப் பெற்றுள்ளன. வெளிப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது வியர்வைச் சுரப்பிகள் வேலை செய்து, வியர்வையை வெளியேற்றி, வெப்பநிலை உயராமல் பார்த்துக்கொள்ளும்.
பாலூட்டிகளில் நாய், பூனை, யானை, வெளவால், குரங்குகள் போன்றவை எக்கிரின் அல்லது அபோகிரின் அல்லது இரண்டு சுரப்பிகளையும் சேர்த்துப் பெற்றுள்ளன. எக்கிரின் சுரப்பிகள் (Eccrine glands) உடல் முழுவதும் இருக்கக்கூடியவை.
மனிதர், வால் இல்லாக் குரங்கு கள் போன்றவை எக்கிரின் சுரப்பிகளைப் பெற்றுள்ளன.
நாய்களும் பூனைகளும் அபோகிரின் சுரப்பிகளைப் (Apocrine Glands) பெற்றுள்ளன. இவை பாதங்களில் இருக்கும்.
பன்றி, காண்டாமிருகம், நீர்யானை போன்றவை வெப்ப ரத்தப் பிராணிகளாக இருந்தாலும் அவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லை. அதனால்தான் பெரும்பாலான நேரம் தண்ணீரிலும் சகதியிலும் உடலை அமிழ்த்தி, உடலின் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கின்றன, விக்னேஸ்வரன்.
‘குடல்வால்' மூலம் நமக்கு எந்தப் பயனும் இல்லை என்கிறார்களே, உண்மையா டிங்கு?
- என். கனகா, 8-ம் வகுப்பு,அரசு மேல்நிலைப் பள்ளி,கிருஷ்ணகிரி.
பெருங்குடலின் முனையில் மிளகாய் போல் நீட்டிக் கொண்டிருக்கும் உறுப்புதான் ‘குடல்வால்’. முன்னொரு காலத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கும் உறுப்பாக இது செயல்பட்டது. காலப்போக்கில் குடல் வாலின் பணியை மற்ற நிணநீர் உறுப்புகள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. அதனால் குடல் வாலுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது.
பயன்படாத உறுப்பு காலப் போக்கில் மறையும் என்பார்கள். இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு குடல்வால் மறைந்து போக வாய்ப்பு இருக்கிறது, கனகா.