

இந்த வாரம் அதிசயமாய் பிளஸ் 2 முடித்த மாணவர்களும் கூடியிருந்தனர். அவர்களில் செல்வன் என்ற முன்னாள் மாணவர், உயர்கல்வி தொடர்பான முக்கிய ஐயம் ஒன்றை எழுப்பத் தயாராக இருந்தார். செல்வன் படிப்பில் சூரப்புலி என்பதால் மாணவர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
பேராசிரியர் விஜயராகவன் கையசைத்ததும், செல்வன் தனது கேள்வியை விரிவாக முன்வைத்தார். “எனக்கு சிறு வயதிலிருந்தே பொறியியல் படிப்பில் ஆர்வம் அதிகம். அதிலும் கட்டடம் கட்டும் துறையான சிவில் எஞ்சினியரிங் பிரிவில் சேர்ந்து படிக்க விரும்பினேன்.
ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகளுக்கே தற்போது வேலைவாய்ப்பு அதிகம் என்பதால் அதையே எடுத்து படிக்குமாறு வீட்டில் வற்புறுத்துகிறார்கள். இன்னும் சிலர் இப்போதெல்லாம் பொறியியல் படிப்புக்கே மவுசு இல்லை; வேறு ஏதாவது படிக்கலாமே என்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?” என்ற செல்வனின் முகத்தில் குழப்பம் வெளிப்படையாகப் புலப்பட்டது.
வேலையா, ஆர்வமா?
தொண்டையை செருமியபடி பேராசிரியர் விஜயராகவன் எழ, மாணவர்கள் காதை தீட்டிக்கொண்டனர். “ஜூலை 19 அன்றுடன் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பித்தல் நிறைவடைகிறது. இதன் மத்தியில் செல்வன் எழுப்பியிருக்கும் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது.
எதைப் படித்தால் உடனே வேலை கிடைக்கும், அதிக ஊதியம் கிடைக்கும் என்பதெல்லாம் பிறகு யோசிக்கலாம். முதலில், தனக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறது என்பதை மாணவர்கள் ஓரளவுக்கேனும் அடையாளம் கண்டாக வேண்டும்.பிளஸ் 1 படிப்பில் சேர்ந்தது முதலே இது குறித்த தேடலை ஆரம்பிக்கலாம். இந்த தேடல் படிப்பிலும் ஈடுபாட்டை அதிகரிக்கும். தனக்கு விருப்பமான துறையை அடையாளம் கண்டதும், அது தொடர்பான உயர்கல்வியை வழங்கும் கல்லூரிகளில் சிறப்பானதை விசாரித்து அறிய வேண்டும்.
வதந்திகளை நம்பாதீர்!
அடுத்து ஒட்டுமொத்தமாக பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு குறைவு என்பதும், பொறியியல் படிப்புகளுக்கு மவுசு இல்லை என்பதும் வெற்று வதந்திகளில் சேரும். தனியார் கல்லூரிகளின் பெருக்கத்தாலும், பெற்றோரின் வற்புறுத்தலுக்காக அவற்றில் சேரும் மாணவர்களாலும் அங்கிருந்து வெளியேறும் தேர்ச்சியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையை தரமான கல்லூரியில் சேர்ந்து படிக்கும்போது சிறப்பான பொறியியல் பட்டதாரியாக வெளியில் வருவார்கள்.
அடுத்து, “சிவில் படிப்புக்கு வரவேற்பு உண்டா?” என்ற செல்வனின் இரண்டாவது கேள்விக்கு வருவோம். பொறியியல் படிப்புகளில் மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றஆதாரமான துறைகளுக்கு என்றுமே வரவேற்பு உண்டு.
இவை உட்பட தங்களுக்கு விருப்பமான துறைகளை பெற்றோருடன் கலந்துபேசி மாணவர்கள் தேர்வு செய்யலாம். வருடந்தோறும் சிலதுறைகளுக்கு மாணவர்கள் முன் னுரிமை தருவது நடக்கும். ஐடி துறை எழுச்சி காரணமாக கம்ப்யூட்டர்சயின்ஸ் பிரிவுக்கு கடந்த சில வருடங்களாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தீர விசாரிப்பது நலம்!
அப்படியெனில் சிவில் போன்றதுறைகளுக்கு வரவேற்பு குறைவு என்றுஅர்த்தமில்லை. மனிதர்களின் அடிப்படைத்தேவையான வீடு கட்டுதலும், நகரமயமாதலும், தொழில் வளர்ச்சி மற்றும் அதுசார்ந்த கட்டுமானங்களும் என்றைக்கும் குறையப் போவதில்லை.
எனவே நல்ல கல்லூரிகளை அடையாளம் கண்டு அதில் சேர்வது நமது பொறுப்பு. இதற்கு நீங்கள் சேர முயலும் கல்லூரியில் தேவையான ஆய்வக வசதி, கடந்தாண்டுகளின் தேர்ச்சி விகிதம்மற்றும் வளாக நேர்காணல் உள்ளிட்ட விபரங்களை கலந்தாய்வுக்கு முன்னரே விசாரித்துத் தெளிவு பெறுவதும் நல்லது.
பி.இ. சிவில் எனும் பொறியியல் பட்டப்படிப்பாக மட்டுமன்றி, அதே துறையின் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பை பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெறலாம். வரைதிறன் மற்றும் படைப்பாற்றல் கொண்ட மாணவர்கள் பி.ஆர்க்., பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
இதில் சேர்வதற்கு ஆண்டில் இருமுறை நடைபெறும் `நாட்டா’ (NATA) எனப்படும் தேசிய திறனாய்வு தேர்வு எழுதுவது அவசியம்” என்று பேராசிரியர் முடித்தபோது செல்வன் உட்பட பல்வேறு மாணவர்களின் முகத்தில் தெளிவு பளிச்சிட்டது.
(தொடரும்)