

ஊடக படிப்புகளில் சேர்வதற்குத் தகுதி என்பது படிப்பிற்குத் தகுந்தாற்போல் மாறும். ஆனால், பொதுவான தகுதி ’ஆர்வம்’. ஊடகம் சார்ந்த எந்த துறைக்குள் நுழைய வேண்டுமானாலும் முதலில் ஆர்வம் மிக முக்கியமானது.
பள்ளியில் படிக்கும் போதே இதற்கான தகுதிகளையும், ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்வது அவசியம். தினமும் நாளிதழ்களை வாசிப்பது அவசியம். பள்ளிப் பருவத்திலேயே பாடப்புத்தகங்கள் தவிர்த்து பொதுவான புத்தகங்களையும் படிக்கத் தொடங்குதல் நலம். இதன் மூலம் எழுத்துப் பயிற்சி செம்மையாகும்.
ஊடகத்தில் முதன்மைத் தகுதியாகப் பார்க்கப்படுவது சொல்ல வந்த செய்தியை எளிமையாகவும் தெளிவாகவும் எழுதுதல் ஆகும். இதழியல் என்றுதான் இல்லை காட்சி ஊடகத்தில் பணிபுரிய விரும்பினாலும் எழுத்து ஆற்றல் கட்டாயம்.
வாய்ப்பை அள்ளித்தரும் வானொலி!
மேல்நிலை வகுப்புகளைப் படிக்கும்போதே இங்கிலாந்தில் மாணவர்களுக்கு பிபிசி போன்ற பெரு ஊடகங்கள் ‘BBC School Report’ எனும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் துணை கொண்டு மாணவர்கள் தங்களின் பள்ளி மற்றும் பள்ளியைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைச் செய்தியாக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தியாவின் பொதுத் துறை வானொலியான அகில இந்திய வானொலியும் இது போன்றதொரு வாய்ப்பை பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறது. ‘இளையபாரதம்’ என்ற இந்த நிகழ்ச்சியை முழுமையாக எழுதித் தொகுத்து வழங்கும் வாய்ப்பினை அகில இந்திய வானொலி வழங்குகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களின் அகில இந்திய வானொலிகளில் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது தவிரக் கொடைக்கானல், தர்மபுரி, ஊட்டி, தூத்துக்குடி ஆகிய ஊர்களின் எப்.எம். ரெயின்போ நிலையங்களிலும் மாணவர்களே நிகழ்ச்சிகளைத் தயாரிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அந்தந்தப் பகுதியில் உள்ள பள்ளிகள், அந்த நிலையத்தைத் தொடர்பு கொண்டு, யார் அந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர் என்பதை அறிந்து வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவெனில், மாணவர்கள் தயாரிக்கும் நிகழ்ச்சிக்குச் சன்மானமும் வழங்கப்படும்.
இதுபோன்ற நிலையங்களில் பங்கு பெறுவதன்ஊடாக உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நலம். ஊடகப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது இது போன்றவற்றையும் இணைக்கலாம், அது கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
‘ஸ்கிரிப்ட’ எழுதப் பழங்குங்க!
பல்கலைக்கழகங்களில் இதழியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் இது போன்று, ஏதாவது தகுதி இருக்கிறதா என நேர்முகத் தேர்வின் போது கேட்போம். வானொலி மட்டுமல்லாது, ஏதேனும் நாளிதழ், வார இதழ், இணைய இதழ்களில் எழுதிய படைப்புகள் இருந்தால் கொண்டுவரச் சொல்வோம். ஏன், ‘ஆசிரியருக்கு கடிதம்’ பகுதிக்குக் கடிதம் எழுதியிருந்தால்கூட போதும். அதையாவது காண்பிக்கச் சொல்வோம். வருத்தம் என்னவெனில், எந்த ஒரு மாணவரிடமும் இது போன்ற படைப்புகள் கைவசம் இருந்ததில்லை.
அதுவே சமீப காலமாக ஊடக படிப்பின் மீது ஆர்வம் கொண்ட பெரும்பான்மையான மாணவர்கள் யூடியுப் சேனல்கள் நடத்துவதாகக் கூறுகின்றனர். காலத்திற்குத் தகுந்தவாறு ஊடகத்தின் தன்மையும் மாற்றம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு உதாரணம் இந்த யூடியுப். ஆனால், எல்லாவற்றுக்கும் அடிப்படை ‘எழுத்து’. எனவே, யூடியுப்பாக இருந்தாலும் ஸ்கிரிப்ட் என்பது முக்கியம். அனைத்து விதமான ஊடக படிப்புகளுக்கும் எழுத்துப் பயிற்சி தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com