

நிதி மேலாண்மையின் முதல் படியே பணத்தை சரியாக புரிந்துக்கொள்வது தான். அதனை ஒழுங்காக புரிந்துக்கொண்டால் மட்டுமே சரியாக கையாள முடியும்.
நமக்கு தேவையான பொருட்களைவாங்குவதற்கும், சேவைகளை பெறுவதற்கும் பரிமாற்றத்துக்கான கருவியாக ‘பணம்' பயன்படுத்தப்படுகிறது. உப்பு, புளி, நெல் என பண்டமாற்று வடிவத்தில் தொடங்கிய பணத்தின் பயணம் செப்பு, வெள்ளி, தங்கம் என உருமாறியது.
தற்போது காகிதம், நாணயம், பத்திரம், காசோலை, கிரிப்டோ கரன்சி (டிஜிட்டல்) என வடிவம் மாறினாலும் பணம் மதிப்பும் முக்கியத்துவமும் இன்னமும் குறையவே இல்லை. ஏனெனில் வாழ்க்கைக்கு பணம் அவ்வளவு முக்கியம்!
‘அனைவரும் சமம்' என ஏட்டில் எழுதி வைத்திருந்தாலும், நாட்டில் அனைவரும் சமம் இல்லை. பணத்தை வைத்தே மனிதனை எடைப்போடுகிறார்கள். பணம் வைத்திருப்பவர்களே அதிகம் மதிக்கப்படுகிறார்கள். மனிதன் மட்டுமில்லை, ஒருநாடும் அதன் பண மதிப்பை வைத்தே மதிக்கப்படுகிறது.
நேர்மறையாக பாருங்கள்
பெரும்பாலானோர் பணத்தை நேர்மறையாக புரிந்துக்கொள்வதற்கு பதிலாக எதிர்மறையாக புரிந்து வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், ‘பணம் என்பது சாதாரண காகிதம். பசித்தால் அதை சாப்பிட முடியுமா? சாகும் போது அதைஎடுத்துக்கொண்டுபோக முடியுமா? மனிதனை விட பணம் முக்கியம் அல்ல.
பணம் வந்தால் மனசு கெட்டு போய்விடும். காசு வந்தால் நிம்மதி போய்விடும். பணம் வைத்திருப்பவர்கள் கெட்டவர்கள். பிள்ளைகளிடம் பணம்கொடுத்தால் கெட்டுப்போய் விடுவார்கள். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல' என காலங்காலமாக எதிர்மறையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் எதிர்மறையாகவே யோசிக்கும் ஒரு பொருள் எப்படி நம்மிடம் தேடி வரும்?
ஆனால், பணத்தில் புரளும் கோடீஸ்வரர்கள் ஒருநாளும் அதனை திட்டுவதில்லை. பணத்தை சபித்துக் கொட்டுவதில்லை. அதனை சாப்பிட முடியாது, போகும்போது கொண்டு போக முடியாது என தெரிந்தாலும் அவர்கள் பணத்தை தூக்கி எறிவதில்லை. ஒருபோதும் வீணாக்குவதில்லை.
ஏனென்றால் பணத்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். மனிதத்தின் மீது பற்றுக்கொண்ட வாரன் பஃபெட், ரத்தன் டாடா போன்ற கோடீஸ்வரர்கள், ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் தங்களிடம் இருக்கும் பணத்திற்கு உண்மையான மதிப்பை சேர்த்துக்கொள்கிறார்கள்.
பணம் மனிதர்களை விட முக்கியம்இல்லை என்பது உண்மை தான். ஆனால் இன்றைய உலகில் அந்த பணம்இருந்தால் தானே நம் பெற்றோரை, உடன்பிறந்தோரை, உறவினரை கவனித்துக்கொள்ள முடியும். அன்புக்குரியவர்களுக்கு உதவ முடியும். அவர்களுக்கு பிடித்தமான உணவை, உடையை வாங்கி தர முடியும்.
அவர்களுக்கு இறுதி காலம் வரை நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கையை பரிசளிக்க முடியும். பணம் இருந்தால் அடுத்த சந்ததியும் கஷ்டப்படாமல் வசதியாக வாழ வழிவகை செய்ய முடியும். பணம் ஒருவருக்கு சொகுசான வாழ்க்கையை மட்டுமல்ல சுதந்திரமான எண்ணத்தை, தன்னம்பிக்கையை, உளவியல் பலத்தை, மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை உணர வேண்டும்.
நீண்ட ஆயுளை தருகிறது
சில ஆண்டுகளுக்கு முன் லண்டனில்உள்ள கல்வி நிறுவனம் 1972 முதல் 2016 வரை பிறந்த, பல்துறைகளை சேர்ந்த30 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. பணம் சம்பாதிப்பவர், பணம் சம்பாதிக்காதவர் ஆகிய இரு தரப்பினரின் மனநிலையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
இதில் பணம் இல்லாதவர்கள் பொதுவெளியில் பணத்தை பற்றி எதிர்மறையாக பேசினாலும், பணம் சம்பாதிக்கமுடியவில்லையே என வாழ்க்கையை நொந்து கொண்டு வாழ்கின்றனர். எப்போதும் வாழ்வில் தோற்றுப்போனவர்களாக உணர்கிறார்கள். இந்த வெறுப்பில் உள்ளுக்குள் மரணத்தை யாசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் என தெரியவந்தது.
வாழ்க்கையில் நிறைய சம்பாதிப்பவர்களுக்கு பணம் ஒருவிதநம்பிக்கையை அளிக்கிறது. மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வைக்கிறது. ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என வாழ்க்கை மீது பற்றை ஏற்படுத்துவது தெரியவந்தது.
இந்த ஆய்வில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சற்று கூடுதலாக பணம் சம்பாதித்தாலே, வாழ்க்கையின் மீது பற்று ஏற்பட்டு நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை பணம் ஏற்படுத்தி, நீண்ட ஆயுளை தருவது உறுதியாகிறது.
எனவே பணத்தை நேசியுங்கள். அதை சம்பாதித்த பின் சக மனிதரை அதைவிட நேசியுங்கள்.
(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in