

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், உலக மக்களின் பொதுக்குரல், சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் முக்கிய பங்காற்றுபவர், உலக நாடுகளின் மரியாதைக்குப் பாத்திரமானவர். தீவிரமாக முயன்றால் நீங்களும் அத்தகைய ஐநா பொதுச்செயலாளர் ஆகலாம்.
ஐநா சபையின் நோக்கங்களில், கொள்கைகளில் திட நம்பிக்கையுள்ள, நேர்மையும், ஆற்றலும் திறமையும் உள்ளவரே பொதுச்செயலாளர் பதவிக்குத் தகுதியுள்ளவர். பிற பதவிகளைப் போல கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற தகுதிகள் இதற்குக்குறிப்பிடப்படவில்லை. ஆனால், தலைமைப்பண்பு, நிர்வாகத்திறமை, சர்வதேச உறவுகளில் ஆழ்ந்த அனுபவம் ஆகியவை தேவை. மேலும் பேச்சிலும் எழுத்திலும் வல்லவராக, பல மொழிகள் அறிந்தவராகவும் உள்ளவரே இதற்குத் தகுதியானவர்.
நான் என்ன செய்ய?
நாடுகளின் வெளியுறவுத்துறை, ஐநா சபை ஆகியற்றில் பணியாற்றிய அதிகாரிகளே (Diplomats) பெரும்பாலும் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்று இந்திய வெளியுறவுப் பணியில் (Indian Foreign Service-IFS) இணைவது, ஐநா பொதுச்செயலாளர் கனவை அடையும் முதல் படி எனலாம். பிறகு மொழியறிவு உள்ளிட்ட பிற திறன்களை வளர்த்து, பிற நாடுகளின் நம்பிக்கையைப் பெற்ற சர்வதேச ஆளுமையாக மிளிர்ந்தால் கனவு வசப்படும். யூபிஎஸ்சி தேர்வை எழுதுவதற்குப் பட்டப்படிப்பு அவசியம்.
பொதுச்செயலாளர் தேர்வாவது எப்படி?
ஐநா சபையின் உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டிலிருந்து ஒருவரை இந்த பதவிக்கு முன்மொழியலாம். அப்படி முன்மொழியப்படும் பெயர்களை பரிசீலித்து, ஐநா சபையின் பாதுகாப்புக்குழு (Security Council) ஒரு பெயரைஇறுதி செய்து, ஐநா பொது சபைக்கு (General Assembly) பரிந்துரை செய்யும். ஐநாபொதுச்சபையின் ஒப்புதலைப் பெற்றவரே பொதுச்செயலாளராகப் பதவி ஏற்பார். அவரின்பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். பொதுச்செயலாளர் மறுபடியும் அதே பதவிக்குப் போட்டியிடலாம். அப்படி இரண்டாம் முறை வென்று பதவியில் தொடர்ந்தவர்களும் உண்டு.
ஐநா சபையின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களான சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றுக்கு தடுப்பதிகாரம் (Veto Power)உண்டு. எனவே, பொதுச்செயலாளர் பதவிக்கு முன்மொழியப்படுபவர் அந்த நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றவராக இருப்பது முக்கியம். இந்த ஐந்து நாடுகளை சாராதவரே, பொதுச்செயலாளர் பதவிக்கு முன்மொழியப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, பாதுகாப்புக் குழுவில் இந்தியா தற்காலிக உறுப்பினராக இருப்பதால், இந்தியரின் பெயர்பொதுச்செயலாளர் பதவிக்குமுன்மொழியப்படலாம். இந்தியாவின் சசிதரூர்2006-ல் இப்பதவிக்கு போட்டியிட்டார். பல்வேறு காரணங்களால் அப்போது வெற்றி வசப்படவில்லை.
கனவு மெய்ப்படட்டும்
இந்தியர் ஒருவர் இதுவரை ஐநா பொதுச்செயலாளர் ஆனதில்லை. அந்த சரித்திரத்தை நீங்கள் படைக்கலாம். இதுவரை பெண் ஒருவர் பொதுச்செயலாளர் பதவியை அலங்கரித்ததில்லை. இதை வாசித்துக் கொண்டிருக்கும் மாணவி அந்த புதிய வரலாற்றை தமிழில் எழுதலாம்.
கனவுகள் மெய்ப்படும் முயன்றால்!
உங்களின் கனவை ‘கையருகே கிரீடம்’ பகுதியில் தெரிவியுங்கள். வரும் வாரங்களில் அவற்றுக்கான வழிகாட்டப்படும்.
(கனவுகள் தொடரும்…)
கட்டுரையாளர், ‘அடுத்த கலாம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: dilli.drdo@gmail.com