

கையில் இருக்கும் ஸ்மார்ட்போனுக்கு ஒரு டேட்டா பேக் போட்டதும் அல்லது ப்ராட்பேண்ட் கொண்டு கணினியுடன் இணைத்ததும் இணைய உலகத்துக்குள் வந்துவிடுவீர்கள்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ், டிக்டாக், வாட்ஸ்அப், டிவிட்டர் என பல சமூக வலைத்தளங்களில் இன்று இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இணையத்தின் மூலம் புழங்குகிறார்கள்.
இணையத்தில் மக்களுக்கு என்னவேலை? தகவல் பெற, ஆன்லைனில்கட்டணம் செலுத்த, டிக்கெட் ‘புக்’ செய்ய,பொழுது போக்க, மற்றவர்களுடன் இணைந்திருக்க என பல காரணங்களுக்காக மக்கள் இணையத்தில் உலவுகிறார்கள். இணையம் என்பதை ஆயிரக்கணக்கான மக்கள் பரபரப்பாகக் கூடும் கடைசந்தை என கற்பனை செய்துகொள்ளுங்கள்.
இங்கு முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது, இணையத்தில் அனைத்து விதமான மக்களும் புழங்குவார்கள். நல்லவர்கள், உதவிசெய்பவர்கள், அறிஞர்கள், நிபுணர்கள், போலீஸ், வக்கீல், மாணவர்கள், இவர்களுடன், தீயவர்கள், பாலியல் கொடுமை செய்பவர்கள், கேலி கிண்டல் செய்பவர்கள், சைபர் கிரிமினல்கள் இவர்களும் உலவுவார்கள். நல்லவர்கள் கெட்டவர்கள் சேர்ந்ததுதானே சமூகம். சைபர் சமூகமும் அவ்வாறுதான்.
இணைய ஒழுங்கு தெரியுமா?
சமூகத்தில் உலாவ சில நடைமுறைகள், சட்டதிட்டங்கள் உள்ளதல்லவா அதேபோல இணையத்திலும், இணைய பயனாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சட்ட திட்டங்கள் உள்ளன. இணையத்தில் பாதுகாப்பாக நீங்கள் முன்னேற ‘நெட்டிகேட்’ (Netiquette) எனப்படும் இணைய ஒழுங்கு முறைகளை தெரிந்துகொள்வது அவசியம்.
1. கேலி கிண்டல் செய்வது, இழிவுபடுத்துவது யாரையும் புண்படுத்தும் இல்லையா? ஆகையால் இணைய உலகத்திலும் தீச்சொல் சொல்ல வேண்டாம்.
2. நீங்கள் பதிவிடும் சொற்கள், படங்கள், வீடியோக்களை ஸ்க்ரீன்ஷாட், டவுன்லோட், ரெக்கார்ட் செய்துவிட்டால் இணையத்தில் எங்கு அழித்தாலும் இன்னொரு வலைதளத்தில் அது மீண்டும் முளைக்க வாய்ப்பிருக்கிறது.
3. இணையம் என்பது உலகளவிலான ஒரு நெட்வொர்க். அதனால் நீங்கள் தவறாக பதிவிடும் ஒரு விஷயம் வேகமாக உலகம் முழுவதும் பரவிவிட வாய்ப்பிருக்கிறது.
4. இணையம் தொடர்ந்து மாறி வரும் உலகம், அதனால் சைபர் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வும் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். சைபர் பாதுகாப்பு விஷயத்தில் பின்தங்குவது, வீட்டில் பணம், நகைகளை வைத்துவிட்டு பலவீனமான பூட்டை பூட்டுவது போன்றது.
5. சமூகத்தை பாதுகாக்க அரசு எவ்வாறு சட்டங்கள் பிறப்பித்துள்ளதோ அதேபோல சைபர் உலகை பாதுகாக்கவும் சைபர் சட்டங்கள் உள்ளன. மிகப்பெரிய பிரச்சினை என்றால் நிச்சயமாக சைபர் போலீஸை நாடலாம்.
6. இணையத்தில் கிடைக்கும் தகவல், கட்டுரைகள், படங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். அவை அனைத்தும் காப்பிரைட் சட்டம் எனும் பதிப்புரிமை, காப்புரிமை சட்டங்களுக்குக் கீழ் வருவதால் சட்ட சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
7. உங்களைப் பற்றிய தகவலை எவ்வளவு, யாருக்குக் கொடுக்கிறோம் என்பதில் கவனம் வேண்டும். அந்தரங்க தகவல்களை அள்ளிக்கொடுத்துவிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com