சின்னச் சின்ன மாற்றங்கள் - 2: றெக்கை முளைக்க சைக்கிள் எடு கொண்டாடு!

சின்னச் சின்ன மாற்றங்கள் - 2: றெக்கை முளைக்க சைக்கிள் எடு கொண்டாடு!
Updated on
2 min read

எடக்குமடக்கான கற்பனைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. திடீரென சூரியன் மறைந்துவிட்டால், நட்சத்திரங்கள் பூமிக்கு மிக அருகில் வந்துவிட்டால், புவியீர்ப்பு விசை பாதியாகிவிட்டால்... இப்படி ஒவ்வொருவரும் கற்பனை செய்துகொண்டே போகலாம்.

இம்மாதிரியான கற்பனைகளிலிருந்து தொடங்கித்தான் நிறைய உண்மைகளை விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும் கண்டுபிடித்தார்கள். அதுவே மனிதன் தோற்றுவித்ததில் ஏதேனும் ஒன்றினை காணாமல் செய்துவிட்டால்? புத்தகங்கள் இல்லாமல் போய்விட்டால், பள்ளிகள் காணாமல் போய்விட்டால் (மைண்ட் வாய்ஸை பிடிச்சிட்டேனா?) இப்படி ஒவ்வொரு கற்பனையுமே நகைப்பினையும் சுவாரஸ்யத்தையும் கொடுக்கும்.

காலில் சக்கரம்

மனிதனின் அதி அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று சக்கரம். அது மட்டும் இல்லாமல்போனால் என்னாகும்? அதை கண்டுபிடிக்காமல் இருந்தால் அறிவியல் முன்னேற்றம் நடந்திருக்குமா? பயணங்கள் சாத்தியமாகி இருக்குமா? வானில் இருக்கும் அநேக பொருட்கள் வட்ட வடிவிலே இருக்கின்றன.

அதன் ஒரு நீட்சியாகவும் சக்கரத்தை கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், கண்டுபிடித்த நாள் முதலேஅது சுழன்று கொண்டே இருக்கிறது. மனிதனை நகர்த்திக் கொண்டே இருக்கின்றது.

பிறந்த குழந்தை முதலே சுற்றும் விளையாட்டுப் பொருட்கள் மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். மெல்ல வளரத் துவங்கியதுமே சக்கரம் வைத்த பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். நடை வண்டிகளை பிடிக்காத குழந்தை இருக்குமா என்ன? இடையில் ஒரு பெரிய தடை வந்துவிடுகின்றது. தனியாக செல்லாதே.

அப்படியே செல்வது என்றாலும் சைக்கிள் ஓட்டப்பழகத் தெரிந்திருக்காது. தெரிந்தாலும் அனுப்பமாட்டார்கள். அல்லது பள்ளி அனுமதிக்காது. ஒரு வழியாக இப்போது பதின்மவயதில் எல்லாம் கை கூடி வந்துவிட்டது. சைக்கிளும் ஓட்டலாம், பள்ளிக்கும் வெளி இடங்களுக்கும் எடுத்துச் செல்லலாம்.

சுதந்திர காற்று சுவாசிக்க...

சைக்கிள் ஒரு பெரிய சுதந்திரம். முதல் பெடலை மிதித்து இரண்டு கால்களையும் பெடலில் வைத்த பின்னாடி சைக்கிள் சக்கரம் சுழல ஆரம்பித்ததும் முகத்தில் அடிக்கும் அந்தகாற்று கொடுக்கும் சுகத்திற்கு ஈடு இணையில்லை. சைக்கிள் கற்றுக்கொள்வதும் ஒரு அருமையான அனுபவம்.

சிலர் இரண்டாம் நாளே கற்றுக்கொள்வார்கள். சிலருக்கு சில வாரங்கள் பிடிக்கும். முதல் நாளே கற்றுக்கொண்டவர்கள் திறமையானவர்கள், இரண்டு வாரம் கழித்து கற்றுக்கொண்டவர்கள் திறமையில்லாதவர்கள் என்றில்லை. இது ஒரு முக்கியமான திறன். வாழ்க்கைக்கான திறன். எல்லாருக்கும் எல்லா திறனும் உடனே வாய்க்காது. ஆனால், முயற்சி முக்கியம் அமைச்சரே.

அதேபோல சைக்கிள் ஓட்டப்போகிறோம் என்றால் அதனைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதன் இயக்கம். அதன் அறிவியல்.அதை பராமரிப்பது, காற்று அடிப்பது, சுத்தம்செய்வது, எண்ணெய் ஊற்றுவது. செயின் கழன்றால் மாட்டுவது. ப்ரேக் சரிசெய்வது. ஒரு சைக்கிள் ஏராளமான விஷயங்களை நமக்கே தெரியாமல் நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கும்.

சைக்கிளில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் விடாமல் பயன்படுத்திக்கொள்ளவும். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால்? சூழலை புரிந்துகொண்டு வாய்ப்பினை ஏற்படுத்த முயலுங்கள். இதில் ஆண்/பெண் என்று பேதமில்லை. குறிப்பாகப் பெண்களுக்கு சைக்கிள்கள் றெக்கைகளை முளைக்கச் செய்யும். அது பேரனுபவம்.

(தொடரும்)

கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.

‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’

ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்

தொடர்புக்கு: umanaths@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in