மகத்தான மருத்துவர்கள்-2: தள்ளாத வயதிலும் மாணவர்களிடம் அன்பு செலுத்திய மருத்துவர்!

மகத்தான மருத்துவர்கள்-2: தள்ளாத வயதிலும் மாணவர்களிடம் அன்பு செலுத்திய மருத்துவர்!
Updated on
2 min read

மருத்துவத்துறையின் விடிவெள்ளி டாக்டர் ஏ.எல். முதலியார் குறித்து கடந்த வாரம் பேசினோம். அவர் மேலும் பல சாதனைகளை புரிந்தவர். அவற்றை இன்று தெரிந்து கொள்வோம் வாருங்கள் மாணவர்களே!

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் நீண்ட பிரசவ வலியில் அவதிப்பட்டபோது, இங்கிலாந்தின் அரச மருத்துவர்களே தொலைபேசியில் ஆலோசனை கேட்டது டாக்டர் ஏ.எல். முதலியாரிடம்தான். அப்படி அவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் ராணிக்கு சுகப்பிரசவம் நடக்க, அவரது பணியைப் பாராட்டி ‘Safest Midwife' என்ற உலகளவில் சிறந்த பட்டத்தை அவருக்கு வழங்கினார்களாம். இந்த சமயத்தில்தான் ஆஸ்துமா காரணமாக மிகவும் உடல் நலிந்த நிலையிலிருந்த கர்ப்பிணியான தமிழகத்தின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் பிரசவம் பார்த்திருக்கிறார் ஏ.எல். முதலியார்.

பல்கலை துணைவேந்தராக...

ஆரம்பத்தில் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் தலைவராகவும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பொறுப்பு வகித்தார். பிறகு1942-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் (Madras University) துணைவேந்தராகவும் முக்கியப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 27 வருடங்கள் துணைவேந்தராக நீண்ட பொறுப்பு வகித்தவர் மருத்துவத்துறை மேம்பட அரும்பாடுபட்டார்.

அதேசமயம் உலக சுகாதார அமைப்பின் நிறுவன உறுப்பினர், யுனெஸ்கோவின் செயற்குழு தலைவர், எட்டாவது மற்றும் ஒன்பதாவது உலக சுகாதார சபைத்தலைவர் எனஉலகளவில் பெரும் பொறுப்புகளை வகித்தார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் கௌரவ முனைவர் பட்டங்களையும் பெற்றார். அத்துடன் இங்கிலாந்தின் மிகவும் பெருமை வாய்ந்த ‘தி ராயல் சொசைட்டி' உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

‘முதலியார் கமிஷன்’

உண்மையில் மருத்துவத்தை எளிமையாக்கி, அனைவருக்கும் எட்டச்செய்த டாக்டர்ஏ.எல். முதலியார் தனது பணிகளை மருத்துவத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், பொறுப்பு வகித்த அவரை ‘முதலியார் கமிட்டி' எனும் சுகாதாரக் குழுவிற்கும், ‘முதலியார் கமிஷன்' எனும் கல்விக்குழுவிற்கும் தலைவராக்கியது அரசு.

கல்விக்குழுவில் அவர் தலைவராக இருந்தபோது மருத்துவம் தாண்டி மற்ற கல்விகளுக்கும் வளர்ச்சிக்கான வழிமுறைகளை வடிவமைத்தார். இன்று நாம் படிக்கும் உயர்நிலைக்கல்வி (higher secondary education) என்பதே அவரது குழு பரிந்துரைத்ததுதான். மேலும் பெண் கல்வி மேம்பாடு, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழியைப் பயிற்று மொழியாக்குதல், ஊனமுற்றோருக்கான சிறப்புக்கல்வி, ஆசிரியர்களுக்கான சிறப்புத் தேர்வுகள், அதற்கேற்ற ஊதியங்கள், தொழில்நுட்ப கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் வேளாண்கல்விக்கு முக்கியத்துவம், மருத்துவ மேற்படிப்புக்கான சிறப்பு சலுகைகள் என்று அவர் தலைமையிலான கல்விக்குழு பரிந்துரைத்ததுதான் நமது தேசத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியது என்றே கூறப்படுகிறது.

அதேசமயம், ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகளை வலிமைப்படுத்தி, மாவட்ட மருத்துவமனைகளில் அனைத்து துறையிலும் மருத்துவர்களை பணியமர்த்தி, மாநில மருத்துவ அமைப்புகளை இந்திய அளவில் மதிப்பீடு செய்யவும் வலியுறுத்தி மக்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்தினார் டாக்டர் முதலியார்.

தேடி வந்த பட்டங்கள்

மேலும் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணிபுரிந்து வந்ததனது சகோதரர் இராமசுவாமி முதலியாருடன் இணைந்து லட்சத்தீவுகளை இந்தியாவிற்குத் திரும்பப் பெறச் செய்ததில் இவர் பங்கு பெரிது. ஆகவேதான் ஆற்காடு சகோதரர்கள் என்று பெருமையுடன் இருவரையும் இன்றும் குறிப்பிடுகிறது இந்திய அரசு.

அத்துடன் நில்லாமல், சென்னையில் இலவச பள்ளிக்கூடம், சென்னை ஐ.ஐ.டி திறந்து வைத்தது என மக்களுக்காகத் தொடர்ந்து இயங்கி வந்த அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷண், பத்மவிபூஷனுடன், இங்கிலாந்து அரசு சர் பட்டமும் வழங்கி கவுரவித்தது.

அதன் பிறகும் தனது தள்ளாத வயதிலும் மருத்துவ பட்டமளிப்பு விழாவில் தவறாமல் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்துவதையே தனக்கான விருதாக கருதினார் டாக்டர் முதலியார். 1974 -ல், 86 வயதில் இயற்கை எய்திய சர் ஏ.எல். முதலியாரை லட்சுமணனைத் தொடர்ந்த ராமனாக மரணத்திலும் பின்பற்றினார் மூத்தவரான சர். ஏ.எம். முதலியார்.

உண்மையில், தனக்கு எல்லா வசதிகளும் இருந்தபோதிலும் எளியவர்களுக்கும் எல்லாம் சேரவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டார் டாக்டர் இலட்சுமணசுவாமி முதலியார். தனது அறிவு, முயற்சி, படிப்பு, அரசியல் செல்வாக்கு எல்லாவற்றையும் மக்களுக்காகவே செலவழித்த அவர் நல்லமருத்துவருக்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல

மாணவர்களுக்கு எப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டும் நல்வழிகாட்டியும்கூட!

(மகிமை தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர்,

சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in