

நுழைவுத் தேர்வு என்றதும் நீட், ஜெஇஇ ஆகிய இரண்டு மட்டுமே நமக்கு உடனடியாக நினைவுக்கு வரும். ஆனால், ஐம்பதுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் இந்தியாவில் நடத்தப்படுகின்றன.
அதுக்காக இத்தனை நுழைவுத் தேர்வுகளா, இவை எல்லாவற்றுக்கும் தனித்தனியாகத் தயாராவதா என்றெல்லாம் மாணவர்கள் மலைக்க வேண்டியதில்லை. பல்வேறு நுழைவுத் தேர்வுகள் குறித்துத் தெளிவாக அறிந்துகொள்வதும், அதன் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை உள்வாங்கிக்கொள்வதும் இந்த தேர்வுகளில் வெற்றிபெற முதல்படியாகும்.
முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பிரத்தியேகமாய் நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. தங்களது தரத்தை தக்கவைத்துக் கொள்ளவும், விண்ணப்பதாரர்களை வடிகட்டவும் நுழைவுத் தேர்வு நடைமுறைகள் தீவிரமாகப் பின்பற்றுகின்றன. நுழைவுத் தேர்வுகளை வகைபிரித்து புரிந்துகொள்வது, ஒருசேர அவற்றுக்குத் தயாராவதற்கு உதவும். உதாரணமாக, பொறியியல் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் வெவ்வேறாக இருந்தாலும், அவற்றுக்கு அடிப்படையான தயாரிப்பும் உழைப்பும் ஒன்றுதான்.
இந்த வகையில் தொகுத்தால், பத்துக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை ஒருசில தேர்வுகளாக எண்ணிக்கையில் சுருக்கிவிட முடியும். சர்வதேச அளவிலான பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களை குறிவைப்பவர்கள், அதற்கான சேர்க்கைக்கு ஒரேமூச்சில் தயாராகவும் முடியும். உதாரணமாக, என்ஐடி மற்றும் ஐஐடி நிறுவனங்களில் சேர்வதற்கான JEE (Joint Entrance Examination) தேர்வுகளை பரவலாக அறிந்திருப்போம். இந்த நுழைவுத் தேர்வுக்கான உழைப்பை, இதற்கு நிகரான இதர உயர்கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளிலும் பகிர்ந்துகொள்ளலாம்.
கல்விக் கடன் எளிது!
கட்டிக்கலை வடிவமைப்பு பொறியியலான பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கான NATA (National Aptitude Test in Architecture), மத்திய மீன்வள கப்பல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கான CIFNET(Central Institute of Fisheries, Nautical and Engineering Training), பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான BITSAT(Birla Institute of Technology and Science Admission Test) உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் இந்த வகையில் சேரும். எனவே கூடுதல் நுழைவுத் தேர்வுகள் குறித்து அறிந்துகொள்வது, உயர்கல்விக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க உதவும்.
நுழைவுத் தேர்வின் வாயிலாக முன்னணிஉயர்கல்வி நிறுவனங்களில் சேரும்போது தரமான கல்வியை மாணவர்கள் பெற முடிவதோடு, திடமான வேலை வாய்ப்பும் உறுதியாகிறது. இந்த கல்வி நிறுவனங்களில் சேர்வதில் கல்விச் செலவு கூடுதலாக வாய்ப்பிருந்தாலும், கல்வி நிறுவனத்தின் பின்னணி காரணமாக வங்கிகள் கல்விக்கடன் வழங்கத் தயங்குவதில்லை.
இப்போதே தயாராகலாம்!
மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகே பெரும்பாலான மாணவர்கள் நுழைவுத் தேர்வுகள் குறித்து அறிந்துகொள்ளவும், அவற்றுக்குத் தயாராகவும் துணிகிறார்கள். மாறாக பலதரப்பட்ட நுழைவுத் தேர்வுகள் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்வது, உயர்நிலைப்பள்ளி காலம் தொட்டே அவற்றுக்குத் தயாராவதற்கு உதவும். இதன் மூலம் கூடுதல் உழைப்பு மற்றும் சிரத்தையை கோரும் இந்த நுழைவுத் தேர்வுகளுக்கான தயாரிப்பு முழுமையடைவதுடன், மாணவர்களின் ஈடுபாடும் கூடும்.
எனவே நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் அறிந்துகொள்வோம். நமக்கானதை குறித்து வைத்துக்கொண்டு உரிய முறையில் திட்டமிட்டு தயாராவோம். அவற்றின்அங்கமாக விண்ணப்பித்தல், தேர்வு எழுதுதல் ஆகியவற்றுக்கான நடைமுறைகளையும் தெளிவாகப் பின்பற்றுவோம். நுழைவுத் தேர்வுகள் மீது வெளிச்சமடிக்கும் இந்த தொடர் வாயிலாக பல்வேறு நுழைவுத்தேர்வுகள், அவற்றின் நோக்கம், விண்ணப்பித்தலுக்கான தகுதி, தேர்வு கட்டணம், சலுகை விபரங்கள், கடைசி நாள், நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் விதம் உள்ளிட்ட நடைமுறைகள் அனைத்தையும் அறிந்து தெளிவு பெறலாம். (தொடரும்)