வாழ்ந்து பார்! - 2: நால்வரின் மதிப்பு மூன்று!

வாழ்ந்து பார்! - 2: நால்வரின் மதிப்பு மூன்று!
Updated on
2 min read

வாழ்க்கைத் திறன்கள் என்றால் என்ன என்ற கேள்வியோடு கடந்த வகுப்பு நிறைவடைந்ததை ஆசிரியர் எழிலுக்கு நினைவூட்டினாள் நன்மொழி. ‘எனக்கும் நினைவிருக்கிறது!’ என்று புன்னகைத்த ஆசிரியர் எழில், “எல்லாரும் எழுந்து, வெளியே போய் விளையாட்டுத்திடலில் வட்டமாய் நில்லுங்கள்” என்றார். ஓடிச்சென்று மாணவர்கள் வட்டமாக நின்றனர். எழில், வட்டத்தின் நடுவில் சென்று நின்றார்.

“‘கடலிலே அலையடிக்குது’ என்று பாடுவேன்.நீங்கள் ‘ஓடி வா!’ என்று பாடிக்கொண்டே வட்டத்தில் ஓட வேண்டும். இடையில் பாட்டைநிறுத்திவிட்டு ஓர் எண்ணைச் சொல்வேன்.உடனே அந்த எண்ணிற்குரிய ஆட்களைக்கொண்ட குழுக்களாக நீங்கள் பிரிந்துநிற்க வேண்டும். அப்படிப் பிரிந்து நிற்கிறபோதுயாருக்கு இணை கிடைக்கவில்லையோஅவர்கள் விளையாட்டில் இருந்து விலகிவிடவேண்டும்” என்று விளையாட்டின் விதிகளை விளக்கிய எழில், மாணவர்களை ஐந்து நிமிடங்கள் விளையாடச் செய்தார்.

ஓடி வா! ஓடி வா!

பின்னர், அனைவரும் மரத்தடி நிழலில் வட்டமாய் அமர்ந்தனர். “நான் ‘மூன்று’ என்று கூறியதும் காதர், அருட்செல்வி, முகில், மதி ஆகிய நால்வரும் ஒரு குழுவாக இருந்தனர். ஆனாலும் விளையாட்டில் தொடர்ந்தனர். அதெப்படி என்று நினைவிருக்கிறதா…?” என்று கலந்துரையாடலைத் தொடங்கினார் எழில்.

“காதரும் அருட்செல்வியும் நின்னாங்க... முகிலும் மதியும் மண்டியிட்டு நின்னு ‘நாங்கநாலுபேரு… ஆனா எங்க குழுவின் எண் மூன்றுன்னு சொன்னாங்க…” என்று தேவநேயன் அந்தச் சூழலை நினைவுகூர்ந்தான். “அதற்கு அவங்க ஒரு விளக்கம் சொன்னாங்க...” என்று கலந்துரையாடலில் இணைந்தான் அருளினியன்.

“என்ன விளக்கம்?”

“நிற்பவர்கள் ஒவ்வொருவரின் மதிப்பும் ஒன்று. மண்டியிட்டு இருப்பவர்கள் ஒவ்வொருவரின் மதிப்பும் அரை. எனவே 2 ஒன்று 2 அரை = மூன்று” என்றனர்.

“விளக்கம் சரிதானே” “விளக்கம் சரிதான், ஆனா, அவங்க நாலு பேரு இல்லையா?” என்றாள் தங்கம், வேகமாக.

யோசனை உதித்தது எப்படி?

“நால்வர்தான். ஆனால் அவர்களில் இருவர்மண்டியிட்டதால், அவர்களின் மதிப்புப் பாதியாகக் குறைந்துவிட்டது.” என்றான் அருளினியன்.

“மண்டியிடலாம்னு தொடக்கத்துல சொல்லலையே…” என்ற தங்கத்தை, “மண்டியிடக்கூடாதுன்னும் சொல்லலையே….” என்று மடக்கினான் காதர்.

“தங்கம். கொஞ்சம் பொறு” என்று அவளை அமைதிபடுத்திய எழில், “மண்டியிட்டு நிற்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?” என்று அந்த நால்வரையும் பார்த்து வினவினார்.

“நீங்கள் மூன்று என்று சொன்னதும் யாரோடு நான் சேர்ந்து நிற்கலாம் என்பதை முடிவுசெய்வதற்குள் எல்லாரும் மூன்று மூன்று பேராக நிற்கத் தொடங்கிவிட்டார்கள். எங்காவது இடம் கிடைக்குமா என்றுதேடினேன். கிடைக்கவில்லை. எனக்குஅழுகையே வந்துவிட்டது. வேறுவழியில்லாமல் விளையாட்டிலிருந்து வெளியேறினேன். அப்பொழுதுதான் மதி என்னைக் கூப்பிட்டாள்” என்று விளக்கத்தைத் தொடங்கினான் முகில்.

“கண்ணீரோடு முகிலைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. அவன் வருந்துவதை உணர்ந்தேன். அவனிடத்தில் நானிருந்தாலும் அப்படித்தானே வருந்துவேன் என்று நினைத்தேன். ஏதாவது ஒரு குழுவில் மூன்றைவிடக் குறைவாக ஆளிருந்தால் அவனையும் சேர்க்கலாம் என்பது புரிந்தது. ஆனால் யாரும் வெளியேறாமல் ஆளை எப்படிக் குறைப்பது என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்குத் தோன்றிய எண்ணத்தைக் காதரிடமும் அருட்செல்வியிடமும் கூறினேன்” என்று விளக்கத்தைத் தொடர்ந்தாள் மதி.

“மதி சொன்னவுடனேயே, ஒரு கோட்டை அழிக்காமல் சிறிதாக்க அதற்குப் பக்கத்தில் பெரிய கோட்டைப் போட்டும் ஒரு கோட்டைப் பெரிதாக்க அதற்குப் பக்கத்தில் சிறியகோட்டைப் போட்டும் விளையாடியது நினைவிற்கு வந்தது. அந்த விளையாட்டை இங்கே எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்தேன். ஒன்றில் பாதி அரை என்ற கணிதப்படி, நாங்கள் நின்றால் ஒன்று; மண்டியிட்டால் அரை என்று எண்ணம் தோன்றியது. அதைச் சொன்னேன்.” என்று தெளிவுபடுத்தினான் காதர்.

“உடனே மதி தானும் முகிலும் மண்டியிட்டு நிற்பதாகச் சொல்லி, முகிலை அழைத்தாள். அவனும் வந்து மண்டியிட்டு நின்றான்.” என்று நடந்ததை நவின்றாள் அருட்செல்வி.

“நீங்க சரின்னு சொன்னதும் முகில் முகத்தப் பார்க்கணுமே … வாயெல்லாம் பல்… கண்ணிரண்டும் விரிஞ்சிருச்சு… முகமே மலர்ந்திருச்சு…” என்ற தங்கத்திடம் எழில், “அவங்க அழுகுணி ஆட்டம் ஆடலைன்னு இப்பப் புரிஞ்சிருச்சா..” என்றார். தங்கம் புன்னகையோடு தலையாட்டினாள்.

சிக்கலுக்குத் தீர்வு!

இறுதியாக ஆசிரியர் எழில், “முகிலுக்கு ஏற்பட்டது விளையாட முடியாது என்ற ‘சிக்கல்’.அதனால் எப்படியாவது விளையாட்டில் தொடர வேண்டும் என்ற ‘மனவழுத்தம்’ ஏற்படவருத்தம் என்னும் ‘உணர்வெழுச்சி’ உண்டானது.

அதற்கும் ஈடுகொடுக்க முடியாமல் அழுதான். அதைக் கண்ட மதிக்கு அவனதுமனவுணர்வோடு ‘ஒத்த உணர்வு’ ஏற்பட ‘சிக்கலைத் தீர்க்க’ விரும்பினாள். அத்தகவலை தன் நண்பர்களிடம் தெரிவித்தார்.

அவர்கள் மூவரிடமும் ‘பிறரிடம் பழகுந்திறன்’ இருத்ததால் ‘தகவல் தொடர்பு’ நிகழ்ந்தது. சிக்கலுக்கான காரணத்தை ஆய்வுநோக்கில் சிந்தித்தனர்.

தமது ஆக்கச்சிந்தனையால் இருவர் நிற்பது இருவர் மண்டியிடுவது என முடிவெடுத்துச் செயற்படுத்தினர். அதற்குதங்களைப் பற்றிய ‘விழிப்புணர்வு’ அவர்களுக்கு இருந்தது. அதனால் முகிலின் சிக்கலைத் தீர்த்து அவனை விளையாடச் செய்தனர்” என்று அங்கு நிகழ்ந்தைத் தொகுத்தார்.

இதன்மூலம், தன்னையறிதல், ஒத்துணர்தல், தகவல் தொடர்பு, பிறரிடம் பழகுதல், ஆய்வுச்சிந்தனை, ஆக்கச் சிந்தனை,முடிவெடுத்தல், சிக்கலைத் தீர்த்தல், மனவழுத்தத்துக்கு ஈடுகொடுத்தல், உணர்வெழுச்சி ஈடுகொடுத்தல் என்னும் 10 வாழ்க்கைத் திறன்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர் என்றும் தெளிவுபடுத்தினார்.

(தொடரும்)

கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in