தயங்காமல் கேளுங்கள்! - 1: இரவு வராத தூக்கம் விடியற்காலை நல்லா வருதே!?

தயங்காமல் கேளுங்கள்! - 1: இரவு வராத தூக்கம் விடியற்காலை நல்லா வருதே!?
Updated on
2 min read

வளரிளம் பருவம் என்பது ஒரு குழப்பமான பருவம். இந்த அறியாப் பருவத்தில் உடல் மற்றும் மன மாற்றங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.

ஒருபக்கம் இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருத்தல், வெளியில் சொல்ல வெட்கப்படுதல், பெற்றோரிடம் பேசக் கூச்சம் போன்றவையும், இன்னொரு பக்கம் சரியான வழிகாட்டுதல்களின்றி தேடும் வலைத்தளங்களோ, நூல்களோ தவறான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் வாய்ப்புகளும் இதில் உள்ளது.

இவற்றைத் தாண்டி நாம் ஒரு நல்ல மருத்துவரையோ அல்லது ஒரு நல்ல வழிகாட்டியையோ சந்திக்க நேர்ந்தால்கூட, அவர் எதுவும் தவறாக நினைத்து விடுவாரோ என்று கேட்க வேண்டியவற்றை கேட்காமலேயே மாணவ-மாணவியர் கடந்துசெல்வதையும் காணமுடிகிறது.

உடலும் உள்ளமும் நலம்தானா?

மாணவர்களாகிய உங்களுடைய கூச்சத்தைத் தவிர்த்து சந்தேகங்களைக் கேட்டுத் தெளிய வைக்கும் சிறுமுயற்சிதான் இந்தக் கேள்வி பதில் பகுதி.

இந்தப் பகுதியில் உடல், மனம், பாலியல் குழப்பங்கள், உடல்ரீதியான மாற்றங்களால் வரும் மன உளைச்சல்கள் என அனைத்து விதமான உங்கள் சந்தேகங்களுக்கும் மருத்துவம் பயின்ற ஒரு தோழியாகப் பதிலளிக்கக் காத்திருக்கிறேன்.

சித்ராவின் கேள்வியிலிருந்து தொடங்கலாமா..?

"டாக்டர்.. எனக்கு நைட்ல தூக்கமே வர்றதில்ல.. ஆனா விடியக்காலைல நல்லா தூக்கம் வருது.. அப்ப பாத்து அம்மா எழுப்பிவிட்டுடறாங்க.. இதனால ஸ்கூல்ல எதையும் கவனிக்கவே முடியல.. என்ன செய்யட்டும்..?"

ப்ளஸ் 2 படிக்கும் சித்ராவின் கேள்வி இது... சித்ரா மட்டுமல்ல உலகெங்கும் உள்ள 69 சதவீத ‘டீன் ஏஜ்’ குழந்தைகள் தூக்கப் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. இவர்களில் 24 சதவீதத்தினருக்கு மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படுகிறது என்கிறது புள்ளிவிவரம்.

தூக்கம் எங்கிருந்து வருது?

தூக்கத்திற்கான மருத்துவ ஆலோசனைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், தூக்கமின்மை ஏன் ஏற்படுகிறது, அதன் பாதிப்புகள் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.

கிட்டத்தட்ட ஒரு தூக்கமருந்தைப் போல பணிசெய்து நம்மை ஒவ்வொரு நாளும் உறங்க வைப்பது, நமது மூளையிலுள்ள பினியல் சுரப்பியில் சுரக்கும் மெலடோனின் என்ற ஹார்மோனாகும். இந்த மெலடோனின் இருளான சூழலில் அதிகம் சுரந்து நல்லுறக்கத்தை அளிப்பதுபோலவே, வெளிச்சத்தில் தனது உற்பத்தியைக் குறைத்துக்கொண்டு நம் உடலுக்கு விழித்திருப்பதற்கான செய்தியையும் அனுப்புகிறது.

நம் உடலுக்குள்ளேயே ஒரு கடிகாரம் போல இயங்கும் ‘பயலாஜிகல் க்ளாக்கை' நிர்வகிக்கும் நமது மூளையானது காலை, பகல், மதியம், மாலை, இரவு என்று சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது உடலை ஒத்திசையச் செய்யும் ‘சர்காடியன் ரிதம்' என்ற ஒத்திசைவையும் கட்டுப்படுத்துகிறது.

ஆனால், வலுக்கட்டாயமாக நாம் இந்த ஒத்திசைவை குலைக்கும்போது மெலடோனின் சுரப்பது குறைந்து, தூக்கமின்மையும் அதனால் பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. தலைவலி, சோர்வு, பசியின்மை, உற்சாகமின்மை, பாடங்களில் கவனம் செலுத்த இயலாமை, ஞாபக மறதி ஆகியனவும், இவற்றின் காரணமாகத் தேர்வுகளில் தோல்வி,பதற்றநிலை, மன அழுத்தம், சிலரில் தற்கொலை எண்ணங்கள், விபத்துகள் போன்ற குறுகியகால பாதிப்புகளை உண்டாக்கும் அபாயம் உள்ளது.

இந்த தூக்கமின்மை நாள்பட நீடிக்கும்போது உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்திறன்களும் பாதிப்படைந்து குடல் அல்சர், உடல்பருமன், பிசிஓடி மற்றும் ஹார்மோன் பிரச்சினைகள், சில சமயம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், ஏன் இறுதியாகப் புற்றுநோய் வரை பல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

8 மணிநேரம் தூங்குங்க!

நல்உறக்கம் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அதிலும் நாளைய சமுதாயத்தின் தூண்களாக உள்ள ‘டீன் ஏஜ்’ குழந்தைகளுக்குக் குறைந்தது 8-10 மணிநேர உறக்கம் மிகவும் அவசியம் என்று அறிவியல் வலியுறுத்துகிறது. இந்நிலையில், இந்த வயதில் தூக்கப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் நமது சமுதாயக் கட்டமைப்பே கைகாட்டுகிறது.

சித்ராவை ஒட்டிய குழந்தைகளின் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புகளில் காணப்படும் அதிகப்படியான வீட்டுப்பாடங்கள், அடுத்தடுத்த தேர்வுகள், அதிகாலை டியூஷன்கள், பள்ளியிலும் சிறப்பு வகுப்பு வார இறுதியில் நீட் கோச்சிங் என கல்வியின் தேவை ஒருபக்கம் கூடிக்கொண்டிருக்க, மறுபக்கம் ஸ்மார்ட்போன், இணையம், சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி ஆகியன வெகு எளிதாக டீன் ஏஜின் இரவுப் பொழுதுகளை முழுமையாக ஆக்கிரமித்து கொள்கின்றன என்பதுதான் வேதனை.

இத்துடன், இந்த வயதில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால் அதுநாள்வரை இரவு 9 மணிக்கெல்லாம் சுரக்கத் துவங்கிய மெலடோனின் ஹார்மோன் இப்போது இரவு 11 மணிக்கு மேல் தான் சுரக்கத் தொடங்குகிறது என்பதால் தூக்கமின்மை டீன் ஏஜில் வெகு எளிதாக ஏற்படுகிறது.

ஆனால் இதற்கான எளிய தீர்வுகளும் நம்மிடமே உள்ளன

# மாலையில் சிறிதளவாவது உடற்பயிற்சி மேற்கொண்டு வெதுவெதுப்பான நீரில் குளிப்பது.

# இரவில் எளிதில் செரிமானமாகும் உணவையும், உறக்கத்தைத் தரும் பால்-பழத்தை உட்கொள்வது.

# தூக்கத்தைக் கெடுக்கும் காஃபி, டீ போன்றவற்றை இரவுப் பொழுதுகளில் தவிர்ப்பது.

# படுக்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமில்லாமலும், படுக்கைகள் சற்று வசதியாகவும் இருப்பது.

# முக்கியமாக, ஸ்மார்ட்போனுடன் உறங்குவதைத் தவிர்ப்பது.

இந்த எளிய வழிமுறைகள் பயனளிக்காதபோது மருத்துவஉதவியைப் பெறுவதும் அவசியமாகிறது. இதில் பெற்றோர்களின் பங்கும், ஆசிரியர்களின் பங்கும் அதிகம் என்பதையும் மனதில் கொள்க.

(ஆலோசனைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in