

இன்றைய சூழலில் எந்த ஒரு தனி மனிதனும் ஊடகத்தை தவிர்த்துப் போய்விட முடியாது. அப்படிப்பட்ட ஊடகத்திற்கு தொடக்கக் காலத்தில் தனியான படிப்பு இருந்ததில்லை. இன்று ஊடகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் தனித்தனியான படிப்புகள் வந்துவிட்டன.
நம் முன் இருக்கும் சவாலே, எந்த படிப்பை எடுத்தால், எந்த வேலைக்குச் செல்லலாம் என்ற குழப்பம்தான். ஊடகப் பணியை முதன்மையானதாக எடுத்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மொழி.
எழுத்து நடையை பள்ளியில் படிக்கும்போதே செம்மையாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம். இன்றைய இளைஞர்கள் பலருக்கும் தமிழில் எழுத்துப்பிழையின்றி எழுதத் தெரிவதில்லை. தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலமும் தட்டுத்தடுமாறுகிறது.
ஒரு சில மாணவர்கள் கேட்கலாம், "நான் எழுத்து சார்ந்த ஊடகப் பணிக்கு போகப்போவதில்லை. நான் ஏன் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்?” என்று. தமிழக ஊடகங்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டுமானால், உங்களுக்கு ஆங்கிலம் எந்த அளவிற்குத் தெரியுமோ, அதே அளவிற்குத் தமிழிலும் பயிற்சி இருந்தே ஆகவேண்டும்.
யூடியூப் மட்டுமல்ல...
ஒரு சில மாணவர்கள் ஊடகம், என்பது ஏதோ யூடியூப் மட்டுமே என்று நினைத்துள்ளனர். இன்னும் ஒரு சிலர் சமூக ஊடகங்கள் மட்டுமே என்று நினைக்கின்றனர். ஊடகம் என்பது ஒரு பெரு வெளி. பிளஸ் 2 படித்துவிட்டு நேரடியாக ஊடகம் தொடர்பான படிப்புகளுக்கு வந்துவிடலாம்.
அதற்கு முன்பே ஊடகம் குறித்த வழிகாட்டல் கிடைத்தால் மாணவர்கள் பயன்பெறலாம். இந்தத் தேவையை நிறைவு செய்கிறது கேரள அரசின் மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டம்.
தொடக்கக் காலத்தில் ஊடகம் என்பது அச்சு ஊடகமாக மட்டுமே இருந்தது. அதன் பின் வானொலி / ஒலி ஊடகம் வந்தது. பிற்பாடு காட்சி ஊடகம் வந்தது. இன்று எல்லா ஊடகங்களும் ஒன்றோடு ஒன்றாக இணைந்துவிட்டன. இன்றைய நாளிதழ்கள் அனைத்துமே ஒலி மற்றும் ஒளி வடிவில் செய்திகளை இணையம் மற்றும் கைப்பேசி ஊடாக கொடுத்துவருகின்றன.
ஆக, இன்று ஊடகவியாலர் என்பவர் எழுத மட்டும் தெரிந்தவராக இல்லாமல், அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தத் தெரிந்த சகலகலா வல்லவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகப்பட்டு வருகிறது.
வரும் வாரங்களில் ஊடகங்களில் நல்லதொரு வேலை வாய்ப்பினைப் பெற, எந்த வகையான படிப்புகள், எங்கு படிக்கலாம். எத்தனை வகையான ஊடகங்கள் உள்ளன, அவற்றில் நுழைய, எந்த வகையான படிப்பை படிக்கலாம், தமிழகத்தில் எந்தெந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் என்னென்ன படிப்புகள் உள்ளன, போன்றவற்றை விரிவாகக் காணலாம்.
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com