

உங்களிடம்,‘மனிதன் உயிர் வாழ என்னென்ன தேவை?' என்ற கேள்வியை கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள். ‘நீர், காற்று, உணவு' என்ற பதிலை சொன்னால், அது 100 சதவீதம் சரி இல்லை.
ஏனென்றால் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்த கற்காலத்தில் அவர்களின் வாழ்க்கைக்கு ‘நீர், காற்று, உணவு' போதுமானதாக இருந்தது. அதன் பிறகான பழங்காலத்தில் ‘உணவு, உடை, உறைவிடம்' ஆகியவை மட்டுமே மனிதனுக்கு போதுமானதாக இருந்தது.
தொழில்நுட்பம் வளர்ந்த தற்காலத்தில் ‘மனிதன் ஆரோக்கியமாக, நிம்மதியாக, சந்தோஷமாக வாழ என்னென்ன தேவை?' என்று கேட்டால், பெரிய பட்டியலை வாசிக்கிறார்கள்.
நல்ல சத்தான சுவையான உணவு, தூய்மையான குடிநீர், தூய்மையான காற்று, அழகான உடைகள், வசதியான வீடு, கொஞ்சம் நிலம், கைநிறைய பணம், அணிவதற்குத் தங்க நகைகள், அவசரத்துக்கு பைக், குடும்பத்துக்கு கார், நல்ல கல்வி, ஆண்டுக்கொரு முறையேனும் சுற்றுலா, சினிமா, கேளிக்கை கொண்டாட்டங்கள்...என பதில் நீண்டுகொண்டே போகிறது. அதிலும் கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் மனிதனுக்கான தேவை இன்னும் அதிகரித்திருக்கிறது.
பொருள் முக்கியம்!
இந்த புதுயுகத்தில் நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், உடலையும் மனதையும் ஆரோக்கியமாகக் கவனித்துக் கொள்வதற்கும் பணம் மிகவும் முக்கியம். அதனால்தான் ஒப்பற்ற இலக்கியமான திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் அதனை அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துபால் எனமூன்றாகப் பிரித்தார். ‘‘பொருள் இல்லார்க்குஇவ்வுலகம் இல்லை'' என்றே அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டார். உலகில் எந்த நாட்டை, மொழியை, மதத்தை, சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் வாழ்க்கையை சிறப்பாக வாழ இந்த மூன்றும் மிக அவசியம்.
பொருள் நிறைந்த இவ்வுலகை கட்டமைக்க நிதி ஆதாரம் முக்கியம். பணம், செல்வம், பொருட்கள், தங்க வைர அணிகலன்கள், சொத்து, வீடு, நிலம், மெய்நிகர் பணம் ஆகிய அனைத்து வகையான நிதிஆதாரங்களையும் கையாள நிதி மேலாண்மை அவசியம்.
எனவே நிதி மேலாண்மையை இளையோருக்குச் சிறுவயதிலே சொல்லித் தர வேண்டும்.
இப்போதே தெரிந்து கொள்வோம்!
குடும்பத்திலும் கல்வி நிலையத்திலும் சிறுவயதில் நிதி மேலாண்மைக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. நிதியை எவ்வாறு கையாள்வது, பணத்தை ஈர்க்கும் வழி என்ன, வருமானத்தை எப்படி பெருக்குவது, எது வீண் செலவு, எது தேவையான செலவு, ஏன் சேமிக்க வேண்டும், எப்படி சேமிப்பது, எதில் முதலீடு செய்வது போன்றவை பெரும்பாலும் சொல்லித் தரப்படுவதில்லை.
இதன் விளைவாகவே இன்றைய இளைய சமூகம் கடனில் சிக்கித் தவிக்கிறது. நிதி நெருக்கடிகளில் மாட்டிக்கொள்கிறது.
நிதி மேலாண்மையை கற்பதற்குள் வருமானம் குறைந்து முதுமை வந்துவிடுகிறது. எனவேதான், “ஒருவர் 40 வயதில் கற்ற விஷயத்தை இன்னொருவருக்கு 10 வயதில் சொல்லித்தர வேண்டும்” என்கிறது ஒரு ஜப்பானிய பழமொழி.
தேர்வில் ‘பாஸ்' ஆவதற்கு நிறைய வழிகாட்டிகள் இருக்கிறார்கள். இந்த தொடர் நீங்கள் வாழ்க்கையில் ‘பாஸ்' ஆக எளிமையான வழி காட்டும். எதிர்காலத்தில் நீங்கள் ‘பாஸ்' ஆக வலம் வருவதற்கு ஒளிகாட்டும்.
நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!
(தொடரும் )
- இரா.வினோத்
தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in