சைபர் புத்தர் சொல்கிறேன்-1: கண்முன்னே விரியும் மாபெரும் கனவு!

சைபர் புத்தர் சொல்கிறேன்-1: கண்முன்னே விரியும் மாபெரும் கனவு!
Updated on
2 min read

மாணவர்களே! உங்களுக்கே தெரியும், ஸ்மார்ட்போன் என்ற ஒரு வஸ்து இல்லை என்றால் இனி உலகமே இயங்காது. இணையம் இல்லாமல் இனி வாழ்க்கை சாத்தியமில்லை. மிகக்கொடுமையான கரோனா காலத்தை நாம் வெற்றிகரமாக மீண்டுவர முக்கிய காரணம் ஸ்மார்ட்போனும், இணையமும் தான்.

இவை இல்லாமல் போயிருந்தால் பல குழந்தைகளின் கல்வியே தடைப்பட்டிருக்கும். அதேநேரத்தில் எல்லோருக்கும் ஆன்லைன் கல்வி முழுமையாகச் சென்றடையவில்லை என்பதும் உண்மை.

நான் உங்களுக்கு ஸ்மார்ட்போன் பற்றியும் இணையம் பற்றியும் அறிமுகம் கொடுக்க தேவை இல்லை. ஆனால், இதன் எதிர்கால வளர்ச்சியைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.

இனி வருங்காலத்தில் கல்வி என்பது ஸ்மார்ட் கல்வியாகத்தான் இருக்கும். வெறும்எழுத்துக்கள் படங்கள் என்றில்லாமல், முப்பரிமாண வடிவில் இனி அனைத்தையும் கற்பீர்கள். பார்ப்பீர்கள். இது கல்வியின் அடுத்த கட்டம். சில பாடங்கள் EDUGames எனும் வடிவில் வீடியோ கேம்களாக கூட சொல்லிக் கொடுக்கப்படும். தொழில்நுட்பம் பல விதத்தில் கல்வியை மாற்றிவிடும்.

எங்கிருந்தும் எளிதில் கற்கலாம்!

அதுமட்டுமா அறிவின் தேடல் இனி உலகம் முழுவதும் சமமாகிவிடும். ஒரு இணையத் தொடர்பு இருந்தால்போதும் தமிழ்நாட்டின் மூலையில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் மாணவர்கூட உலக அளவில் மாணவர்கள் கற்கும் கல்வியை எளிதாக கற்கலாம். வாழ்நாள் முழுவதும்கற்றுக்கொண்டே இருக்கலாம்.

கல்வி என்பது வெறும் பரிட்சைஎன்றில்லாமல் அது திறன் மேம்பாடு, அறிவுப்பெருக்கம் என விரிவடையும். இந்த சைபர் வெளியின் வாழ்வியல் மாற்றங்களைச் சொல்ல ஒரு ஆயிரம் பக்கம் புத்தகம் போதாது; ஓட்டுநர் இல்லா கார்களை ஏற்கெனவே அமெரிக்கச் சாலைகளில் பார்க்கலாம்.

விரைவில் இந்தியாவிலும் தானியங்கி வாகனங்கள், பறக்கும் ட்ரோன்கள் வந்துவிடும். இனி ரோபோக்கள் நமக்குச் சேவகனாக மாறிவிடும். ரோபோக்கள் வீட்டைச் சுத்தம் செய்வது முதல் மருத்துவருக்கு உதவியாக அறுவை சிகிச்சை செய்வது வரை வளர்ந்துவிடும். விவசாயம் டிஜிட்டல் மயமாகிவிடும். இனி க்வாண்டம் கணினிகள் இன்னும் வேகமாக இயங்கும். நம் கைகளுக்கு க்வாண்டம் கணினிகள் வந்துவிடும்.

வருங்காலத்தில் ஸ்மார்ட்போன், இணையம் மற்றும் சைபர் துறை நாலுகால் பாய்ச்சலில் வளர்ந்துவிடும். இனி நாமே நினைத்தாலும் இதைத் தடுக்க முடியாது; தவிர்க்க முடியாது. வருங்கால தொழில்நுட்பத்துடன் இணைந்துதான் வாழ வேண்டும்.

எச்சரிக்கை அவசியம்!

ஆனால், இந்த சைபர் தொழில்நுட்பம் அப்படியே நன்மைகளை மட்டும் தருவதில்லை தீயவற்றையும் சேர்ந்தே தருகிறது. சைபர் குற்றங்கள் அதிகமாகிவிட்டன. அதனால் சைபர் குற்றவாளிகளும் அதிகம். சைபரால் வரும் தொல்லைகளும் பெருகிவிட்டன.

பயப்பட வேண்டாம், இங்கேதான் சைபர் புத்தராக நான் வருகிறேன். நம் தமிழ் பிள்ளைகளை வருங்கால தொழில்நுட்பத்தின் மிகச் சிறந்த அறிவாளிகளாக உருவாக்குவதுதான் என் கனவு அல்ல பெருங்கனவு. அப்படி உருவாக்க சைபர் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்குத் தேவை.

சைபர் தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பெறவும், தீமைகளிலிருந்து உங்களைத் தற்காத்துக்கொள்ளச் செய்வதுதான் என் கடமை. இனி வாரம் வாரம் பல தொழில்நுட்பங்களைத் தெரிந்து வளமான தொழில்நுட்ப திறனை மேம்படுத்தவும், அதே நேரம் தொழில்நுட்ப குற்றங்களை எதிர்த்துப் போராடும் சைபர் வீரர்களாக உங்களை உருவாக்குவதுதான் இந்த சைபர் புத்தரின் நோக்கம்.

வருங்கால தமிழ் சமுதாயமாகப் போகும் நீங்கள் சைபர் துறையில் உலகின் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாக, நிபுணர்களாக, ஆய்வு அறிஞர்களாக, பயனாளர்களாக வர வாழ்த்துக்கள்.

(தொடர்ந்து பேசுவோம்)

கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு: write2vinod11@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in