

‘நீ எதிர்காலத்தில் யாராக விரும்புகிறாய்?’ என வகுப்பில் ஒவ்வொருவரிடமும் கேட்டார் எனது ஒன்பதாம் வகுப்பு ஆசிரியை. டாக்டர், எஞ்சினியர், வக்கீல் என அந்த காலகட்டத்தின் பிரபலமான பணிகளை பலரும் பதிலாக சொன்னார்கள். ஒரு சிலர் டீச்சராக வேண்டும் என்றனர்.
கலைத்த கனவு
மாணவப் பருவத்தில் கவிதை, ஓவியம், மரச்சாமான்கள் என புதுப்புது உருவாக்கங்களில் எனது ஓய்வு நேரங்களில் மூழ்கியிருப்பேன். ஏதாவது புதிதாக ஒன்றை உருவாக்கும் பணியே எதிர்காலத்தில் எனக்கு ஏற்றது என்று உள்மனதில் அவ்வப்போது தோன்றும்.
ஆனால், விஞ்ஞானி ஆவது எப்படி, என்ன படிக்க வேண்டும், தமிழ் மீடியத்தில் படித்தால் விஞ்ஞானியாக முடியுமா,விஞ்ஞானி படிப்பு படிக்க எவ்வளவுசெலவாகும், அப்பாவால் கட்டணத்தை கட்டமுடியுமா, என்பது போன்ற பதில் தெரியாத பல கேள்விகள் என்னைபயமுறுத்தின. எனவே எனது விஞ்ஞானி ஆகும் கனவை கலைத்துவிட்டேன்.
டாக்டர், எஞ்சினியர், வக்கீல் போன்றோரை நேரில் எங்கள் பகுதியில் பார்த்திருக்கிறேன். ஆனால், எந்த விஞ்ஞானியையும் நேரில் பார்த்ததில்லை. பாடபுத்தகத்தில் சி.வி.ராமனைப் பார்த்ததோடு வேறு எந்த இந்திய விஞ்ஞானியையும் நான் அறிந்திருக்கவில்லை.
அப்துல் கலாம் உள்ளிட்ட இந்திய விஞ்ஞானிகள் பின்னாளில் பொதுவெளியில் பிரபலமானார்கள். எனவே, விஞ்ஞானியாவது சிரமம்,நடைமுறைக்குச் சாத்தியப்படாது என்றஎண்ணம் எனக்கு தோன்றியது. டாக்டர்,எஞ்சினியர், வக்கீல் போன்ற பணிகள்நடைமுறையில் சாத்தியம் என எண்ணி,அவைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலையில் இருந்தேன். என் முறை வந்த போது, ‘டாக்டராக வேண்டும் டீச்சர்’ என்று ஆசிரியையின் கேள்விக்குப் பதிலளித்தேன்.
கலாம் காட்டிய வழி
மனம் விரும்பிய கனவுப்பணியை ஒதுக்கி வைத்து, பொதுவெளியில் பிரபலமான பணிகளில் ஒன்றை வேறுவழியின்றி வகுப்பறையில் பதிலாகக் கூறினாலும், பின்னாளில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். கல்லூரி மாணவனாக அப்துல் கலாம் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ நூலை படித்த பிறகு உத்வேகம் பெற்று அவரைப் போலவே ராணுவ விஞ்ஞானியாக, அவர் பணிபுரிந்த நிறுவனத்திலேயே சேர்ந்தேன்.
உனக்கும் எதிர்காலக் கனவுகள் பல இருக்கின்றன. அவற்றிலும் ஒரு குறிப்பிட்ட கனவு ஓயாமல் உனது உறக்கம் கலைக்கிறது. ஆனால், அந்த கனவை எப்படி அடைவது என்ற வழியும் வழிகாட்டுதலும் இல்லை.
கனவுகளும் உள்ளுணர்வுகளும் பிரத்தியேகமானவை. மனதின் மெல்லிய குரல் நமக்கு மட்டுமே கேட்கும். அந்த குரலின் விரலைப் பிடித்து நடப்பது நமது கனவை நனவாக்கும். அரைத்தமாவையே அரைக்காமல், புதிய ஒரு துறையில் பாதம் பதித்து சாதிக்க நீ ஆசைப்படலாம். எப்படி கனவை மெய்ப்படுத்துவது?
ஒவ்வொரு வாரமும் ஒரு கனவை அலசி, அதை அடையும் வழிகளை தெளிவாக்கும் முயற்சியே ‘கையருகே கிரீடம்’. பொதுவெளியில் அவ்வளவாக அறியப்படாத பணிகள், அவற்றுக்கான படிப்புகள், அவைகளை கற்பிக்கும் நிறுவனங்கள், தொடர்புடைய வேலைவாய்ப்புகள் எனப் பல தகவல்களை தொடர்ந்து பேசுவோம்.
(கனவுகள் தொடரும்…)
கட்டுரையாளர், ‘அடுத்த கலாம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: dilli.drdo@gmail.com
உங்களின் கனவை ‘கையருகே கிரீடம்’ பகுதியில் தெரிவியுங்கள். வரும் வாரங்களில் அவற்றுக்கான வழிகாட்டப்படும்.