

இது ஒரு செம வயது. அருமையான பருவம். வளர்ந்தவர்கள் யாரைக்கேட்டாலும் தன்னுடைய பால்ய பருவத்தையும் வளரிளம் பருவத்தையும் மறக்க முடியாத காலம் என்றே சொல்வார்கள்.
உங்களைச் சுற்றி இருக்கும் உறவினர்களை, நண்பர்களை, பெற்றோர்களை, ஆசிரியர்கள் என யாரை வேண்டுமனாலும் கேட்டுப் பாருங்கள். எல்லோருடைய பதில் இதுவாகத்தான் இருக்கும். இதுக்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக வளரிள நினைவுகள் அலாதியானது.
வளரிளம் பருவத்தினரை இளையோர் எனவும் குறிப்பிடுவார்கள். இவர்கள் குழந்தை பருவத்துக்கும் பெரியவர்களின் வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஆங்கிலத்தில் டீன் ஏஜ் என்றும் சொல்வார்கள். ‘தர்டீன்’ (13), போர்டீன் (14) என்பதில் வரும் டீன்தான் ‘டீன்ஏஜ்’.
நட்பு இனிக்கும்... அறிவுரை கசக்குமே!
இந்த பருவத்தில் உடலில் மாற்றங்கள் ஏற்படும். பெண்கள் பருவமடைவார்கள். ஆண்களிடமும் மாற்றங்கள் ஏற்படும். தான் குழந்தையா, வயது முதிர்ந்தவரா என்ற குழப்பம் ஏற்படும். நண்பர்கள் மிக நெருக்கமாவார்கள். அறிவுரைகள் கசக்கும் ஆனால் அறிவுரைகளால் வாழ்வு நிரம்பி இருக்கும்.
கண் முன்னர் இருப்பதெல்லாம் பத்தாம் வகுப்பு தேர்வும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வும்தான். பள்ளியும் சரி வீடும் சரி வேறு எதைப் பற்றியும் பேசுவதில்லை. ஆனால், இந்த வயதில் தான் நிறைய கேள்விகள் எழும். சந்தேகங்கள் முளைக்கும். ஆராயும் தன்மையும் பரிசோதித்து பார்க்கும் ஆர்வமும் அதிகம் இருக்கும். அடிப்படைகளை கற்பதில் இருந்து கொஞ்சம் ஆழமாக எல்லாவற்றையும் கற்கத் தொடங்கி இருப்பீர்கள்.
எதிர்கால கனவுகளை காணவேண்டும் என்ற நிர்பந்தத்திலும் இருப்பீர்கள். யாரைப் பார்த்தாலும் என்னவாகப் போகின்றாய் என்ற கேள்வி துரத்தும். ஆனால், என்ன கனவு காணவேண்டும் என்ற சுதந்திரமும் பலருக்கு இருக்காது. இத்தனை இருந்தும், ஒவ்வொரு நாளும் அவ்வளவு உற்சாகமாக இருக்கும். மனதுக்குள் ஒரு குட்டி சந்தோஷம்துரத்திக்கொண்டே இருக்கும். மனம் மழையில் நனைகிற மாதிரியே இருக்கும்.
வாழ்வில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த வயதில்தான் வாழ்வை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். பெரிதாகஒரு மாற்றமும் இல்லை. சின்னஞ்சிறிய சிந்தனை மாற்றம். சின்ன சின்ன மாற்றங்கள்தான். அது சமூகத்தை பற்றிய புரிதல் மாற்றம், குடும்பத்தை பற்றிய புரிதல் மாற்றம்.
படிக்கும் பாடத்தை அணுகும் விதத்தில் வேண்டிய மாற்றம், ஆசிரியர்களை அணுகல், நட்பு பற்றிய புரிதல், நேர ஆளுமை, மொழி ஆளுமை, உடல் ஆரோக்கியம், மன வலிமை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நாளையோ மறுநாளோ வாழ்க்கை மாறிவிடாது.
ஆனால், அதற்கான அடிப்படை விதைகளை இந்த வயதில் தூவுவது மிகவும் அவசியம். வழக்கமாக பள்ளிக்கு போகும் பாதையினை மாற்றி அமைக்க வேண்டாம். ஆனால், ஏன் இந்த பாதை என்ற கேள்வி எழுந்தால் போதும். அந்த கேள்வி பல ரூபங்களை எடுக்கும். ஏன் எனக்கு மட்டும் இந்த பாதை என்று கேள்வியே மாறும்.
அவசரமாக செல்லும் நம் வாழ்வில் ரசிக்கத்தவறியவைகளையும், கவனிக்காமல் கடந்து போனவிஷயங்கள் என்னஎன்பதனையும், எவற்றை எல்லாம் இன்னும் வேறு மாதிரியாக பார்க்கலாம் என்பவற்றையும் கொஞ்சம் பார்ப்போம். சின்னச் சின்ன மாற்றங்கள், ஆனால் தொடர்ச்சியான செயல்பாடுகள் மட்டுமே வெற்றிக்கான அடித்தளம். பயணிப்போம்.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர். ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்
தொடர்புக்கு: umanaths@gmail.com