

மருத்துவம் என்பது தொழில் என்பதை விட, ஒரு மகத்தான சேவை என்றே சொல்லலாம். மற்ற துறைகளைப் போல அல்லாமல், மருத்துவம் என்பது மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் அதிக சவால்கள் நிறைந்த துறையாகவும் இது காணப்படுகிறது.
அதனால்தான், சமயங்களில் மருத்துவர்களை கடவுளுக்கு சமமாகப் போற்றுவதையும் நாம் காண்கிறோம். மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவப் பணிக்கு வருவதும் எப்போதும் அவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. மருத்துவம் பயின்றவர்கள் அனைவரும் வெறும் மருத்துவத்தை மட்டுமே பார்த்துவிட்டுப் போய்விடவும் இல்லை. பல்வேறு இன்னல்களுக்கிடையே மருத்துவம் பயின்ற பலரும், அந்த மருத்துவம் ஏழை மக்களைச் சென்றடையச் செய்துள்ளனர்.
பலர் மருத்துவ ஆராய்ச்சியாளர்களாகவும், பலர் புதிய மருத்துவர்களை உருவாக்கவும்
உதவியுள்ளனர். அப்படி மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் அயராது உழைத்தமருத்துவர்களைப் பற்றியும், அவர்கள் தங்களதுவாழ்வில் சந்தித்த சோதனைகளைப் பற்றியும், அதைத் தாண்டி அவர்கள் புரிந்த சாதனைகளைப் பற்றியும், நம் நாட்டின் மருத்துவ வளர்ச்சியில் அவர்கள் அளித்த பங்கு பற்றியும் ஓரளவாவது அறிந்துகொள்வது எதிர்கால மருத்துவர்களான மாணவர்கள் உங்களுக்கு அவசியம் என்றே தோன்றுகிறது.
அறிவியல் அவ்வளவு வளர்ந்திராத, கல்வியறிவு குறைந்திருந்த காலகட்டத்தில் வாழ்ந்தமருத்துவர்களின் அயராத உழைப்பு அபரிமிதமானது. அதை கவனித்தோமேயானால் இன்றைய சூழலில் நாம் கடினம் என்று நினைக்கும் எதுவுமே கடினமல்ல எளிதில் வெல்லக்கூடியதே என்பது புரியும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வியைப் பயில விரும்பும் மாணவர்களுக்கு நிச்சயம் ஓர் உந்துசக்தியாக அமையும் என்ற நோக்கத்துடன் ’மகத்தான மருத்துவர்கள்’ தொடர் வெளிவருகிறது.
அபூர்வ சகோதரர்கள்!
தமிழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்த முத்துலட்சுமி அம்மையாருக்கே மகப்பேறு மருத்துவம் பார்த்த ஒரு மருத்துவரைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
டாக்டர் ஏ.எல். முதலியார் என்று அழைக்கப்பட்ட லட்சுமணசுவாமி முதலியார்தான் அவர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி குப்புசாமி முதலியார், சீதம்மாள் தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கிறது. இரண்டுமே ஆண் என்பதால் என்றும் பிரியாத இதிகாச சகோதரர்களான இராம-இலட்சுமணர் போல இவர்களும் இருக்கவேண்டும் என்று தங்கள் குழந்தைகளுக்கு இராமசுவாமி, இலட்சுமணசுவாமி என்றே பெயர் சூட்டி வளர்க்கிறார்கள் அந்தப் பெற்றோர்.
பிறந்தது செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் என்றாலும், தங்களது இரண்டாவது வயதிலேயே தாயை இழந்து, தொடர்ந்து பதினைந்தாம் வயதில் தந்தையையும் இழந்த இரட்டைச் சகோதரர்கள் இருவரும், அதன்பிறகு சென்னையில் இருந்த தங்கள் மூத்த சகோதரர் துரைசாமி இல்லத்திற்கு குடியேறி, அங்கிருந்து தங்களது கல்வியைத் தொடர்ந்துள்ளனர்.
பெற்றோரை இழந்த நிலையிலும், பின்னர் வாழ்விலும், இறுதிவரைக்கும் அவர்கள் இராமலட்சுமணர் போலவே இணைபிரியாமல் வாழ்ந்தனர்.
சென்னை எம்.சி.சி. கல்லூரியில் இரட்டையர்கள் இருவரும் இளநிலை முடித்தவுடன் மூத்தவர் இராமசுவாமி முதலியார் சட்டம் பயிலச் செல்ல, அடுத்தடுத்த பிரசவங்களால் உடல் நலிவுற்று தன் தாய் இறந்ததுபோல இனி எந்தக் குழந்தையின் அன்னையும் இறக்கக்கூடாது என்று எண்ணிய இலட்சுமணசுவாமி முதலியார் மருத்துவம் பயின்று மருத்துவரானார்.
காலம் வென்ற மருத்துவ கையேடு!
சட்டம் பயின்று, சிலகாலம் தொழில்புரிந்த மூத்தவர் நீதிக்கட்சியில் இணைந்து சென்னை மாநகர மேயராகப் பொறுப்பேற்ற அதேசமயத்தில் இளையவர் இலட்சுமணசுவாமி முதலியார், எழும்பூர் அரசு பெண்கள் நல மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவராகப் பணியாற்றத் தொடங்குகிறார்.
வெறுமனே மருத்துவராக மட்டுமன்றி பிரசவம் தொடர்பான பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து, அதற்கான எளிய தீர்வுகளையும் வழிமுறைகளையும் ஏற்படுத்தி, அவற்றை செயல்படுத்தினார் ஏ.எல். முதலியார். அவ்வாறு அவர் பணிபுரிந்தது ஓரிரு வருடங்கள் அல்ல.
கிட்டத்தட்ட 35 வருடங்கள்தனது பணியனுபவத்தில் தான் கற்றதையும் தனது ஆராய்ச்சி முடிவுகளையும் சேர்த்துடாக்டர் ஏ.எல். முதலியார் எழுதி இங்கிலாந்தின் ஆலிவர் அண்டு பாய்ட் நிறுவனம் வெளியிட்ட ’Clinical Obstetrics’ எனும் மகப்பேறு மருத்துவப் புத்தகம்தான் இன்றுவரையிலும் இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு மருத்துவ மாணவராலும் பின்பற்றப்படும் முக்கியப் புத்தகமாக விளங்குகிறது. அப்படியென்றால் அவர் அந்தத்துறையில் எவ்வளவு பெரிய மேதையாக இருந்திருப்பார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
(மகிமை தொடரும்)
கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com