

அந்தப் பள்ளிக்கூட மாணவர்கள் வரலாற்றுப் பாடவேளைக்காக காத்திருந்தார்கள். ஆசிரியர், “இன்னைக்கு ஒரு வித்தியாசமான முறையில் நான் உங்களுக்குப் பாடம் நடத்த போறேன்னு” சொல்லி இருந்தார்.
அவர்கள் எல்லாரும் எதிர் பார்த்திருந்த ஆசிரியரும் உள்ளே வந்தார். ஆனால் இன்றைக்கு அவர் கோட்டு சூட் போட்டிருந்தார். உள்ேள வந்த பின்னர் முதலில் ஒரு மாணவரைப் பார்த்து, “நான் யார் தெரிகிறதா?” என்று கேட்டார். “நீங்க எங்க வரலாற்று ஆசிரியர்.. “ என்று சொல்ல வகுப்பறையே சிரித்தது...
“இல்ல இல்ல இன்னைக்கு நான் வேறொரு நபரா வந்து இருக்கேன் அது யாருன்னு கண்டுபிடிங்க..
கண்டுபிடிக்க நான் உங்க ஒவ்வொருத்தரையும் பார்த்து ஒவ்வொரு தகவல்களை சொல்லுவேன் அந்த தகவல்களை வச்சு நான்யாருன்னு நீங்க கண்டுபிடிக்கணும்.. சரியா,‘புரோ இந்தியா’ என்ற இதழை நடத்தி உலகமக்கள் மத்தியில் இந்தியாவின் நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டவர்”. ஆசிரியர் இன்னொரு மாணவனைப் பார்த்து.
“ஹிட்லரை எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவைத்த ஒரே நபர் நான்தான்”. ஆசிரியர் இன்னொரு மாணவியை பார்த்து. “எம்டன்” என்கின்ற மிகப்பெரிய போர்க்கப்பலுடைய உதவிபொறியாளராக பணியாற்றியவன் நான்தான்.
என் சாம்பலை சுதந்திர இந்தியாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கரமனை ஆற்றிலும்.. மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களிலும் தூவ வேண்டும் என்று உயிர் பிரியும் முன்னே விருப்பத்தை கூறினேன்.”
நான் கூறியபடியே முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1966-ல் கரமனை ஆற்றிலும் நாஞ்சில் வயல்களிலும் தூவப்பட்டது. மாணவி, “ஜெய்ஹிந்த் செண்பகராமன்”. ஆசிரியர், “மிகச்சரியான பதில் நான் ஜெய்ஹிந்த் செண்பகராமன் இந்த தமிழனை பற்றி இன்னும் விரிவாக தெரிந்து கொள்வோமா பக்கம் 156 திறங்கள்..”
“சரி இன்று நான் ஒரு கதாபாத்திரத்தில் வந்ததுபோல நாளை முதல் வரிசையில் இருக்கும் 10 மாணவர்கள் நம் வரலாற்று புத்தகத்தில் இருந்து ஒரு கதாபாத்திரத்தில் வரலாம். நாம் அவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்போம்”
கட்டுரையாளர்: நாடகக் கலை மூலம் கல்வி பயிற்றுவிப்பவர்
நடிப்பு மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை எளிதாகவும் சுவாரசியமாகவும் சொல்லித்தரும் பகுதிதான் ‘நடிப்பல்ல படிப்பு’