

கரோனா பெருந்தொற்று காலத்தில்பலர் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டதால், தனியார் பள்ளியில் படித்துவந்த தங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்தமுடியாமல் போனது; அதனால்தான் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
அது மட்டும்தான் காரணமா? சில நூறு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆண்டுதோறும் கரோனா காலகட்டத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறதே! அது எப்படி? என் அனுபவத்திலிருந்து அந்த ரகசியத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்.
பள்ளிக்கூடம் - பெற்றோர் – மாணவர்கள் இந்த முக்கோணப் பிணைப்பின் பலத்தை அதிகரிக்க முடிந்தால் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் கூடும் என்பது தான் முதல்ரகசியம். பள்ளியில் சேர்த்துவிடும் பெற்றோரின் கண்களில் உள்ள ஏக்கத்தையும், தாகத்தையும் முதலில் உணர்ந்த நாங்கள், அதை நிவர்த்தி செய்து அவர்கள் முகங்களில் மகிழ்வைப் பரவச் செய்தோம்.
அதாவது, குழந்தைகளின் படிப்பை விட அவர்களின் பழக்க வழக்கங்கள், பேசும் வார்த்தைகள், வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் நடை உடை பாவனைகள் நன்கு இருக்க வேண்டுமே என்ற ஏக்கம்!
“எம் புள்ளையை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன். படிப்பை விடஅவனுக்கு நல்ல பழக்கவழக்கம், கெட்ட வார்த்தை பேசாத ஒழுக்கமுள்ள பயலா ஆளாக்கிடுங்க அய்யா” என்ற பெற்றோரின் ஏக்கம்நிறைந்த குரல் காதுகளில் ரீங்காரமிட, ரீங்காரமிட உடல் வலிக்கும் அடிகளும் உள்ளம் வருத்தும்வார்த்தைகளும் இல்லாத வகுப்பறை சூழலை உருவாக்கினோம்.
ஒரு கை ஓசை எழுப்பாது என்று உணர்ந்ததால், ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் சாத்தியப்படுத்தி மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டோம். வகுப்பறை பாட வேளைகளில் கட்டாயம் 10 முதல் 15 நிமிடங்கள் ஆசிரிய பெருமக்கள் கதைசொல்லிகளாக மாறி, நாளும் நன்னெறியை விதைத்தனர்.
மன இறுக்கம், மன அழுத்தம் போக்க உடற்பயிற்சியும், யோகாவும், தியானமும் இலவசமாகவே சொல்லித்தரப்பட்டன. கசப்பான உணர்வுடன் எந்த மாணவச் செல்வங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக மதிய சத்துணவில் இனிப்புகளும், மோரும், மசாலாக்களும் சுவைபட சேர்க்கப்பட்டன.
மேலும் சுத்தமான குடிநீரும், சுகாதார கழிப்பறைகளும் அவர்களை மகிழ்வித்தன. பள்ளி முடிந்த பின் கட்டாயம் ஒரு மணி நேரம் பிடித்த விளையாட்டுகளைக் கூடி விளையாடி மகிழ்ந்தனர்.
மாணவிகள் அதிகரிப்பு
படைப்பாற்றல் திறன் வளர்த்தல், வரைந்த ஓவியங்களைப் பள்ளி சுவரில் பொருத்தி அழகுற மிளிரச் செய்தல், வாரம் ஒரு முறை பெற்றோருடன் கைப்பேசியில் கலந்துரையாடல், மாதம் ஒரு முறை பெற்றோர் ஆசிரியரின் சந்திப்புக் கூட்டம், ஊக்குவிப்பு, ஆண்டுக்கு ஒரு முறை பெற்றோர்க்கான ’பாதபூஜை’ என பல்வேறு விதங்களில் மூவருக்கும் இடையேயான பிணைப்பு வலிமை பெற்றது. ’கரோனா காலகட்டத்தில் 500 நாட்கள் தொடர்ந்து நாளொரு சிந்தனை’ என்ற தலைப்பில் பல்வேறு கதைகள், கருத்துகள் கைப்பேசியில் அனுப்பப்பட்டன.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் தனிக்கவனம், அவர்களுக்குமருத்துவ ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் ஏற்படுத்தித் தந்ததன்விளைவு, “நம்ம வீட்டு பொம்பள புள்ளைகளுக்கு பாதுகாப்பான பள்ளி அங்க கொண்டு போய் சேரு” என்று அடுத்தவர்களிடம் சொல்லி பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கை உயர வழி வகுத்தது.
பள்ளி வளாகம் மட்டுமல்லாது, பஸ் நிறுத்தங்களிலும் ஆசிரியர்கள் சென்று கடைசி ஒரு மாணவன், மாணவியைக்கூடப் பாதுகாப்பாக ஏற்றிவிட்டுச் செல்லும் நிகழ்வு வேறு எங்கும் இல்லை என்றுமார்தட்டிச் சொல்லிய பொதுமக்களால் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
பசுஞ்சோலைக்குள் பள்ளி
மதிப்புக்கல்வியும், வாழ்க்கைக்கல்வியும் பெயரளவில் இல்லாது 10,000 நூல்கள் கொண்ட நூலகத்தின் பல புத்தகங்களைப் படிக்கத் தந்து அவர்கள் சிந்தனையை உயர்த்தி வருகிறோம்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீடுதேடி சென்று நலம் விசாரித்தல்,’என் வீடு என் மரம்’,’பசுமைக்கிராமம்’ போன்ற திட்டங்களின் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கு 30,000-க்கும் அதிகமான விதைப்பந்துகள், 1000-க்கும் மேலான மரக்கன்றுகள் கொடுத்து பள்ளி மீது பெற்றோருக்கான நல்ல நம்பிக்கையை விதைத்துள்ளோம்.
’பசுஞ்சோலைக்குள் பள்ளி வளாகம்’என்ற குறிக்கோளுடன் 5000 மரங்கள் நிறைந்த பள்ளியாகத் திகழ்கிறது. ’மரத்தடி நிழல் போதும் மன அமைதி கிட்டிடும்’ புத்தனும், நியூட்டனும் கண்ட புத்தறிவை, எங்கள் பிள்ளைகள் புத்தக அறிவோடு பெற்றிட வளாகம் முழுவதும் அவர்களே பராமரிக்கும் முறையில் மர வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
’சிப்கோ இயக்க’ வரலாறு ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியுமளவுக்கு விளக்கி மரத்தைக் கட்டியணைத்துக் காப்பாற்றி வருகின்றனர்.
பசுமரத்தாணி போல் பிஞ்சுகளின் உள்ளங்களில் பல நல்லெண்ண விதைகள் நாள் தோறும்தூவப்பட்டுப் பிணைப்பும், இணைப்பும் பாலமாக, பலமாகப் பள்ளியில் விளங்குவதால் Terminal class தவிர ஏனைய வகுப்புகளிலிருந்து எவரும் இடையில் மாற்றுச் சான்றிதழ் பெற்று வெளியில் செல்வதோ இடைநிற்றலோ இல்லை எனப் பெருமிதத்தோடு சொல்லலாம்.
சிறந்த சுற்றுச்சூழல் பராமரிப்பிற்கான தமிழக அரசின் ‘பசுமைமுதன்மையாளர் விருது’, தமிழக அரசின் ‘டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது’, ’இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘அன்பாசிரியர் விருது’, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ‘உன்னத சேவை விருது’, பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் ‘கல்வி மாமாணி விருது’, மாவட்ட ஆட்சியரின் ‘சுதந்திர தின விழா விருது’ என பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் பெற்ற பள்ளியாக அரசு மற்றும் நிர்வாகத்தின் பெரும்ஒத்துழைப்புடன் சிறப்பாக இயங்கிவருகிறது ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி.
கட்டுரையாளர்: தலைமையாசிரியர்,
ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, புலியூர், கரூர் மாவட்டம்.
| அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை ஆகச்சிறந்தவையாக மாற்றிக்காட்டிய ஆசிரியர்களின் அனுபவ பகிர்வுதான்‘அன்பாசிரியர் சொல்கிறேன்’ பகுதி. |