வாழ்ந்து பார் - 1: துணிச்சலைத் தந்தது எது?

வாழ்ந்து பார் - 1: துணிச்சலைத் தந்தது எது?
Updated on
2 min read

பள்ளியின் இரண்டாவது மணி அடித்தது. ஒன்பதாம் வகுப்பை தனது கண்களால் அளவெடுத்த ஆசிரியர் எழில், ‘பாடத்தைத் தொடங்கலாமா?’ எனக் குறும்புச் சிரிப்போடு கேட்டார். உடனே, “ஐயோ, வேண்டா...” என்றார் கண்மணி.

வகுப்பறையில் சிரிப்பொலி பெருகி ஓடியது. “ஒரு கத வேணுமினா சொல்லுங்க...” என்றார் நன்மொழி, ஆசிரியருக்கு ஆறுதல் கூறுவதைப்போல. வாய்விட்டு சிரித்த ஆசிரியர் எழில், “சரி. முதலில் ஒரு கதை….” என்று கதைகூறத் தொடங்கினார்.

முதலில் ஒரு கதை...

“நன்மாறனும் மதிவாணனும் ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை ஒன்றாகவே படித்தனர். மருத்துவராக வேண்டும் என்பதே அவர்களது இலக்கு. எனவே, எல்லாப் பாடங்களையும் கவனமாகப் படித்தனர்; புரிந்து படித்தனர். 11, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் 90 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றனர்.

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றனர். தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற முதல் பத்துப் பெயர்களில் இவர்களின் பெயர்களும் இருந்தன. அதனால் புதுடெல்லியில் இருக்கும் புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இருவருக்கும் இடங்கள் கிடைத்தன.

அந்த மகிழ்ச்சியை அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்; வாழ்த்துப் பெற்றனர். வாழ்த்தியவர்களில் சிலர், “அறியாத மொழி புழங்கும், தெரியாத இடத்தில்உங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா?” என வினவினர். இந்த வினாவால் அவர்களின் மனங்களை அச்சம் கவ்வியது. எனினும் இருவரும் டெல்லிக்குச் சென்றனர்.

அந்த நகரத்தோடு ஒன்றிவிட இருவரும் போராடினர். ஆனால், மதிவாணன் தன்னால் அங்கு தாக்குப்பிடிக்க முடியாது எனக் கருதி ஊருக்குத் திரும்பிவிட்டார். நன்மாறனோ அங்கேயே தொடர்ந்து இருந்தார். நாட்கள் நகர்ந்தன. மொழியும் இடமும் பிடிபட்டன, நட்புவட்டம் உருவானது. நன்மாறன் அந்நகரோடு ஒன்றிவிட்டார்” என்று கூறி கதையை நிறுத்திய ஆசிரியர் எழில், “இப்பொழுது ஒரு வினா” என்றார்.

ஏன் தாக்குப்பிடிக்க முடியவில்லை?

“என்ன.. என்ன..” என்றனர் கதையின்அடுத்த கட்டத்தை அறியத் துடித்தமாணவர்கள். “அறிவிலும் திறனிலும்நன்மாறனும் மதிவாணனும் நிகரானவர்கள்.ஆனால், நன்மாறனால் தாக்குப் பிடிக்க முடிந்த புதிய இடத்தில் மதிவாணனால் ஏன் தாக்குப்பிடிக்க முடியவில்லை?” என்று வினவினர் எழில்.

மாணவர்கள் அமைதி ஆனார்கள்.ஒருவரையொருவர் பார்த்து“மாட்டிக்கிட்டோமோ..” என்று வினவுவதைப்போல புன்முறுவல் பூத்தனர்.அவர்களின் தயக்கத்தை அறிந்தஆசிரியர் எழில், “உங்களது கருத்தை நீங்கள் கூறலாம்.அதில் இது சரி; இது தவறு என்று எதுவும்இல்லை.

எனவே, தயங்காமல் கூறுங்கள்”என்று தொடர்ந்து தூண்டிய பின்னர்அங்கொருவர், இங்கொருவர் என்று சிலர்பேசத் தொடங்கினர். மாணவர் ஒருவர்கருத்துக்கூறியதும் அவரைக் கிண்டல் செய்தமாணவரை, ‘அப்படிச் செய்யக்கூடாது’ என்றுமென்மையாகக் கண்டித்தார்.

பேசத் தயங்கியவர்களை அடையாளங்கண்டு பேசும்படி கூறினார். தங்களது கருத்தைக் கூறினால் ஆசிரியர் திட்டமாட்டார், மற்றவர்களைக் கேலிசெய்ய விடமாட்டார் என்ற நம்பிக்கை வந்ததும் வகுப்பிலிருந்த அனைவரும் தங்களது கருத்துகளைக் கூறினர்.

அவற்றை எல்லாம் தொகுத்த ஆசிரியர் எழில், “மதிவாணன் அறியாத மொழியைக் கற்கவும் தெரியாத இடத்தைப் புரிந்துகொள்ளவும் புதிய மனிதர்களோடு பழகவும் அஞ்சினார். அதனால், அவரால் அந்த ஊரோடு ஒன்ற முடியவில்லை. ஆனால், நன்மாறனோ அறியாத மொழி, தெரியாத இடம், புதிய மனிதர்கள் என்றிருந்த புதிய சூழலைத் தன்னம்பிக்கையோடு அணுகினார்.

அச்சூழலில் இருந்த சவால்களையும் (Challenges) சிக்கல்களையும் (Problems) கண்டு மருளவில்லை;அவற்றைத் துணிச்சலோடு எதிர்கொண்டார். அந்தச் சூழலில் தன்னைப் பொருத்திக் கொள்வதற்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொண்டார்; மனப்பாங்குகளை வளர்த்துக் கொண்டார்.

தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தை ஏற்று, அதனோடு இயைந்து வாழப் பழகிக் கொண்டார். இதனால் அவரால் அப்புதிய ஊரில் ஒன்றிவிட முடிந்தது” என்று விளக்கினார். மாணவர்கள் அனைவரும் கவனமாகக் கேட்டனர்.

ஆசிரியர் விளக்கி முடித்த பின்னும் வகுப்பு அமைதியாக இருந்தது.

“யாருக்காவது இதில் கருத்தோ, ஐயமோ இருக்கிறதா? என்று வினவினார் எழில்.

சில நிமிட அமைதிக்குப் பின், “மதிவாணனுக்கு இல்லாத துணிச்சல், நன்மாறனுக்கு மட்டும் எப்படி வந்தது?” என்று வினவினார் கண்மணி.

“அவரிடமிருந்த ‘வாழ்க்கைத்திறன்கள்’ அளித்த துணிச்சல் அது”

“வாழ்க்கைத்திறன்கள் என்றால் என்ன?”

“அதுபற்றி அடுத்த வகுப்பில் பேசலாம்” என்று கூறி அன்றைய வகுப்பை நிறைவுசெய்தார் ஆசிரியர் எழில்.

கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்

மதிவாணன் அறியாத மொழியைக் கற்கவும் தெரியாத இடத்தைப் புரிந்துகொள்ளவும் புதிய மனிதர்களோடு பழகவும் அஞ்சினார். அதனால், அவரால் அந்த ஊரோடு ஒன்ற முடியவில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in