

களத்தூர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அன்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக மாணவ மாணவியரின் சலசலப்பு கூடியிருந்தது. சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்களுக்கு எல்லாம் இதுதான் மேல்நிலைப்பள்ளி.
மாவட்ட அளவில் நல்ல ரிசல்ட் தரும் பள்ளி என்பதால் அருகிலுள்ள நகரத்தில் இருந்தும் மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அன்று மாலை விருந்தினர் ஒருவர் பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களிடையே முக்கிய தலைப்பில் பேசப் போவதாகவும் தகவல் சொல்லப்பட்டிருந்தது.
கூட்ட அரங்கில் நுழைந்த மாணவர்கள் கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த ‘பிளஸ் 2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எங்கேபடிக்கலாம்?’ என்ற தலைப்பை சத்தமாகவாசித்தபடி தங்களுக்கான இடம்தேடி அமர்ந்தனர்.
வழக்கமாக பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே இம்மாதிரி தலைப்புகளில் அவ்வப்போது வழிகாட்டுதல் கூட்டங்கள் நடைபெறும். இம்முறை கீழ்வகுப்பு மாணவர்களையும் அழைத்திருப்பது குறித்து ஆசிரியர்கள் மத்தியிலும் பேச்சு தென்பட்டது.
“சிறப்புப் பேச்சாளர்கள் இருவரும் கணவன்- மனைவி; ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர்கள். பணி ஓய்வுக் காலத்தை பூர்வீககிராமத்தில் கழிக்கத் தொடங்கியுள்ளனர்” என்று ஆரம்பித்து விருந்தினர் குறித்த கூடுதல் தகவல்களைத் தலைமையாசிரியர் வழங்கினார்.
தலைமையாசிரியர் அறிமுக உரையை அடுத்து முதல் சிறப்புப்பேச்சாளரான விஜயராகவன் பேச ஆரம்பித்தார். “பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நமக்கெல்லாம் என்ன வேலை என்று மற்ற வகுப்பு மாணவர்கள் நினைத்திருக்கலாம்.” என்றபடிகுறும்பாகப் புன்னகைத்தார்.
தங்கள் மனதில் உள்ளதை அப்படியே படித்துவிட்டாரே என்று கீழ் வகுப்பு மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர். புன்னகை கலையாது அவர் தொடர்ந்தார்.
இப்போதே தொடங்குங்கள்
“உண்மையில் இந்த கூட்டம் பிளஸ் 2மாணவர்களைவிட மற்ற மாணவர்களுக்குத்தான் முக்கியமானது. பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்பதை பெரும்பாலும் பிளஸ் 2 வந்த பிறகே யோசிக்கிறார்கள். இன்னும் சிலர் பிளஸ் 2 தேர்வு வெளியான பின்னரே குழம்பித் தவிக்கிறார்கள்.
இவற்றை தவிர்க்க 8, 9 என்று கீழ்வகுப்புகளில் படிக்கும்போதே உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும், அதன் வகைகள் பற்றியும், எதைப் படித்தால் எம்மாதிரியான வேலைவாய்ப்பு கிடைக்கும், அந்த படிப்புகளில் தனக்குப் பிடித்தது எது என்றெல்லாம் படிப்படியாக அறிந்துகொள்வது நல்லது.
இந்த தெளிவுதற்போதைய வகுப்பு பாடங்களில் ஆர்வத்தைஅதிகரிக்கவும், கற்றலை உற்சாகமாக மேற்கொள்ளவும் உதவும். சரியான இலக்குடன் கிளம்பும் கப்பல்தானே முறையாகக் கரைசேர முடியும்?” என்று விஜயராகவன் கேட்டபோது மாணவர்கள் நிமிர்ந்து அமர்ந்தனர்.
உயர் மதிப்பெண் கட்டாயமில்லை
விஜயராகவன் விட்ட இடத்திலிருந்து அவரது மனைவி பேராசிரியை பூரணிதொடர்ந்தார். “பெரும்பாலான மாணவர்களுக்கு எதற்காகப் படிக்கிறோம், பள்ளிமுடித்ததும் உயர்கல்வியாக எதை தேர்வுசெய்யப்போகிறோம், அப்படிப்பை முடித்துவிட்டு என்னவாக போகிறோம் என்கிற தெளிவு இருப்பதில்லை.
ஒருசில மாணவர்கள் பெற்றோர் வற்புறுத்தலால் உயர்கல்வி பிரிவு ஒன்றில் சேர்ந்துவிட்டு பின்னர் அதில் ஈடுபாடின்றி வருந்துவார்கள். இன்னும் சிலர் டாக்டர் ஆவேன், எஞ்சினியர் ஆவேன்என்பதோடு தங்களது மேற்படிப்பு கனவுகளைசுருக்கிக்கொள்கிறார்கள்.
ஆனால் கடல்போல உயர்கல்வி வாய்ப்புகள் பரந்து கிடக்கின்றன. அவற்றை அறிந்துகொள்வதும், அவற்றின் மத்தியில் தங்களுக்கான கனவுகளை அடையாளம் காண்பதுமே புத்திசாலித்தனமானது.
இன்னும் சில மாணவர்கள் குடும்பச் சூழல் காரணமாக உடனடியாக ஒருடிப்ளமா போன்ற படிப்பை முடித்து வேலைக்குப் போக வேண்டிய அழுத்தத்தில்இருப்பார்கள். அப்படியானவர்களுக்குஉகந்தபடிப்புகள் குறித்தும், பணிபுரிந்தபடியேவிரும்பிய உயர்கல்வியை தொடர்வதற்கானவாய்ப்புகள் குறித்தும்கூட அறிந்துகொள்ளலாம்.
அதேபோல உயர்கல்வி வாய்ப்புகள் என்பவை அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான் என்று எவரும்தயங்கி நிற்கத் தேவையில்லை. சூழ்நிலை காரணமாக எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காது போனாலும், தாங்கள் விரும்பிய துறையை ஒட்டியே வேறுபடிப்புகளில் சேரலாம்.
உதாரணத்துக்கு மருத்துவ சேவையில் நாட்டமுள்ள மாணவர்கள் அனைவருமே மருத்துவராவது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், பாராமெடிக்கல் எனப்படும் துணைமருத்துவ படிப்புகளில் உரியதைதேர்வு செய்வதன் மூலம் மருத்துவ சேவையிலும், ஊதியத்திலும் மருத்துவருக்கு இணையாக வளர முடியும். இன்னும் சில மாணவர்களுக்கு விரும்பியது ஒன்றாகவும், கிடைத்ததுவேறொன்றாகவும் இருக்கும்.
உதாரணத்துக்கு, மருத்துவம் படிக்க விரும்பிய ஒரு மாணவருக்கு, பொறியியல் கவுன்சிலிங்கில் தலைசிறந்த கல்லூரியில் இடம் கிடைத்தது. அசராத அந்த மாணவர் அங்கு ‘மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ்’ பிரிவில் சேர்ந்ததன் மூலம் தனது மருத்துவ படிப்பு கனவில் ஒருவாறாகத் திருப்தியடைந்தார்.
இப்படி மருத்துவம், பொறியியல் மட்டுமல்ல.அதற்கு அப்பால் கலை, அறிவியல், சட்டம்,கேட்டரிங் என ஒவ்வொன்றிலும் ஏராளமானபிரிவுகளில் படிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றை எல்லாம் சுவாரசியமாக சுருக்கமாக வழங்க இருக்கிறோம். அடுத்த வாரத்துக்கு யாரெல்லாம் தயாராக இருக்கீங்க?” என்று பூரணி கேட்டதும் மாணவர் கூட்டம் முழுக்க உற்சாகமாக கைகளை உயர்த்தியது.
(தொடரும்)