சரியா, தவறா? - 1: உங்களுக்கென்று ஒரு கருத்து இருக்கிறதா?

சரியா, தவறா? - 1: உங்களுக்கென்று ஒரு கருத்து இருக்கிறதா?
Updated on
2 min read

அன்புள்ள மாணவர்களே! புதிய வகுப்புக்குள் நுழைந்திருக்கிறீர்கள். புதிய பாடங்கள், புதிய ஆசிரியர்கள், புதிய நண்பர்கள் என உங்களின் புதிய கல்வி ஆண்டு தொடங்கி இருக்கிறது. மிக நல்ல விசயம். இத்தருணத்தில் நாம் சில விஷயங்களைப் பற்றி உரையாடலாம் என்று நினைக்கிறேன்.

நம்மைச் சுற்றி ஏராளமான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த நான்கு மாதங்களாக போர் நடந்துகொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த மே மாதம் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில் 19 பள்ளிக் குழந்தைகள் உட்பட 21 பேர் பலி ஆனார்கள்.

சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசு, அரசுக்கு எதிராகப் போராடிய மக்களைத் தண்டிப்பதற்காக அவர்களது வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்தது.

இப்படி நம்முடைய வாழ்க்கை என்பதே நிகழ்வுகளால் ஆனதாக இருக்கிறது. அது உலக அளவில், இந்திய அளவில், தமிழக அளவில், நம் ஊர் அளவில், நம் பள்ளி அளவில், நம் தெருவில், நம் வீட்டில் கூட நடந்த நிகழ்வாக இருக்கலாம்.

இப்படி நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நாம் எப்படி அணுகுகிறோம், அவை குறித்து நாம் என்ன கருதுகிறோம் என்பது நம்முடைய வாழ்க்கையை மட்டுமல்ல நம்முடைய சமூகம் போகும் பாதையையும் தீர்மானிக்க கூடியது.

ஒரு விஷயத்தைப் பற்றிய நமது கருத்து நம்முடைய சிந்தனையின் வழியே உருவாகிறது. நம்முடைய சிந்தனை எவ்வளவு விசாலப்பட்டதாகவும் ஆழமானதாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு நமது கருத்து தெளிவானதாகவும் சரியானதாகவும் இருக்கும்.

இதில் மிக முக்கியமான விஷயம், நம்முடைய எல்லா சிந்தனைகளும் நீதி உணர்வை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. எப்படி ஒரு நிகழ்வு குறித்து சரி, தவறு என்ற நிலைப்பாட்டுக்கு வருவது?

ஏன் இந்த மாறுபாடு?

கொலை செய்வது சரியா, தவறா என்றுகேட்டால் எல்லாரும் தவறு என்று சொல்வோம். ஏனென்றால், நமக்குத் தெரியும் ஒரு மனிதனைக் கொல்வது என்பது பாவச் செயல் என்று.

அதுவே இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். ஒருவன் மிக மோசமான குற்றங்கள் இழைத்தவன். பலரை துன்புறுத்திக் கொலை செய்தவன். பெரும் அழிவுகளை ஏற்படுத்தியவன். அவனை காவல்துறை கைது செய்கிறது.

அவனது குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றம் அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறது. இப்போது நம் முன்னால் இருக்கும் கேள்வி தூக்குத் தண்டனை சரியா, தவறா? சிலர் சரி என்று சொல்லக்கூடும்.

சிலர் தவறு என்று சொல்லக்கூடும். சக மனிதனைக் கொல்வது தவறு என்று சொன்னவர்களில் பலர், பெரும் குற்றங்களை செய்தவனுக்கு தூக்குத் தண்டனை வழங்குவது சரி என்று சொல்லக்கூடும். ஏன் இந்த மாறுபாடு நிகழ்கிறது?

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பலவும் இப்படி சிக்கலானதாகத்தான் இருக்கிறன. எனில், ஒரு நிகழ்வு குறித்து நாம் சரியான முடிவை எடுப்பதற்கு நாம் அந்த நிகழ்வு குறித்து பல கோணங்களில் சிந்திக்க வேண்டியது அவசியம்.

எப்படி சிந்திப்பது, எப்படி ஒரு விஷயத்தை அணுகுவது, எப்படி நம் சிந்தனையை வெளிப்படுத்துவது இவற்றைத்தான் நாம் இந்தத் தொடரில் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொரு வாரமும், நம்மைச் சுற்றி நிகழும் ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதைப் பகுத்து ஆராயப் போகிறோம். அந்த நிகழ்வின் நியாயத் தரப்பு எது என்பதை அறிய முயலப்போகிறோம். இது நமக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எப்படி சிந்திப்பது என்பதைப் பயில்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையும்.

அடுத்த வாரம்வரை இதைப் பற்றிச் சிந்தித்துப்பாருங்கள்.

பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள், அலுவலகங்கள் மீது ரஷ்யா குண்டுவீசியது. இதுவரையில் உக்ரைனில் 240-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 4000-க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இனி, உக்ரைனில் வாழ முடியாது என்று அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் செல்கின்றனர். தவிர, கடந்த நான்கு மாதங்களில் 1.3 கோடி உக்ரைன் மக்கள் சொந்த நாட்டிலேயே நிர்க்கதியாக நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் போர் குறித்து உங்கள் பார்வை என்ன? போர் என்பது சரியா, தவறா? தவறு என்றால் ஏன் தவறானது, சரி என்றால் ஏன் சரியானது? இப்படி பகுத்து சிந்திக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் சிந்தனையை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். அடுத்த வாரம் இந்தப் போர் குறித்து நாம் அலசுவோம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

சமூக நிகழ்வுகள் சார்ந்த உங்களுடைய அனைத்து கருத்துகளையும், சந்தேகங்களையும் ‘சரியா, தவறா?’ பகுதியில் கேட்கலாம்.
Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in