Published : 26 Feb 2020 10:29 AM
Last Updated : 26 Feb 2020 10:29 AM

ஆசிரியருக்கு அன்புடன்! - 17: சமூக நீதி கோரும் ஆசான்!

i

“தீபக் குமார். உங்க முழுப் பெயரே அதுதானா?’’ ஆமாம் சார் என்று நேர்காணலில் பதில் சொல்கிறார் கோட் அணிந்த அந்த இளைஞர். “உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?’’ அப்பாவை நான் பார்த்ததே இல்லை. அம்மாதான் என்னை வளர்த்தாங்க. அப்படியா, அவங்க என்ன வேலை பார்க்குறாங்க? முன்னாடி வீட்டு வேலை. இப்போ எங்க பகுதியில் உள்ளவங்க துணியை தேய்ச்சுத்தர்றாங்க.

நீங்க பத்தாம் வகுப்பில் 58% மதிப்பெண். 2 வில் 61% “என்று கேள்வி கேட்டவர் சொன்னதும் தீபக் தொடர்கிறார், “பி.எஸ்சி. யில் 76 சதவீதம். கல்லூரியில் முதலிடம், எம்.எஸ்சி.யில் பல்கலைக்கழக அளவில் முதலிடம்”. “அதிக பணம் செலவு செய்து உயர்ந்த இடத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் படிக்கும் கல்லூரி இது. கல்வியை விட தரம், நடத்தை, பண்பு ஆகியவற்றிலேயே அதிக கவனம் வைக்கிறோம். உங்க பின்னணிஅதுவும் உங்க அம்மா பார்க்கும் வேலை...”

“போதும். என்னைப்பற்றி, எனது அறிவைப் பற்றி மட்டும் பேசுங்க. எனக்கு நல்ல நடத்தை இருப்பதால்தான் உங்களை எதுவும் செய்யாமல் போகிறேன். நன்றி. ஒரு கேள்விகூட நீங்கள் என் அறிவு குறித்து கேட்கவில்லை. பின்தங்கிய சூழலில் பிறந்தவர்தான் இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தார்” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு தீபக் குமார் வெளியேறுகிறார்.

‘என்னை மன்னித்துவிடு!’

நேர்காணலில் நடந்தவற்றைத் தனது கல்லூரி முதல்வர் பிரபாகர் ஆனந்திடம் கூறுகிறார் தீபக். ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் அறிவு இருப்பதில்லை என்று சொல்வது நமது நாட்டு மக்களின் பொதுப் புத்தியாகவே இருக்கிறது. அவர்களும் இங்கு என்னிடம் படித்தவர்கள்தானே, நான் சரியாகக் கற்பிக்கவில்லை என்றே நினைக்கிறேன். என்னை மன்னித்துவிடு. நாளை வேறு கல்லூரிக்குச் செல் என்று ஆனந்த் கூறுகிறார்.

போபால் நகரில் புகழ்பெற்ற கல்லூரியாக விளங்கும் கல்லூரி ஒன்றின் முதல்வர் முனைவர் பிரபாகர் ஆனந்த். எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் வாழ்பவர். காலை, மாலை நேரங்களில் தனது வீட்டிலேயே ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கற்பித்தும் வருபவர்.

ஒருசில முயற்சிகளுக்குப் பின் தீபக் கேட்டபடியே தான் முதல்வராக பணிபுரியும் கல்லூரியிலேயே இளநிலை விரிவுரையாளர் பணியைத் தருகிறார் ஆனந்த்.

மதிப்பெண்ணை மட்டும் பார்ப்பதில்லை

பொதுத்தேர்வு முடிந்து கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இந்தக் கல்லூரியில் சேர ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். கல்வி அமைச்சரின் மருமகனுக்கு அங்குதான் படிக்கவேண்டும் என்பது ஆசை. கல்வி அமைச்சர் கல்லூரி முதல்வரைச் சந்திக்கிறார். ஏறத்தாழ 50 சத மதிப்பெண்கள் பெற்ற அவரது மருமகனுக்கு இடம் தர இயலாது என்று ஆனந்த் மறுக்கிறார். கல்லூரியில் நிர்வாகக் குழுக் கூட்டம். “அமைச்சர் மருமகனைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்ற சிலருக்கு இடம் அளித்திருக்கிறீர்கள். அமைச்சருக்கு ஏன் மறுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் ஆனந்திடம் நிர்வாகக் குழு உறுப்பினர் கேட்கிறார்.

நான் மதிப்பெண்ணை மட்டும் பார்த்து இடம் ஒதுக்குவது கிடையாது. எவ்வித வசதியும் இல்லாத ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை தந்திருக்கிறேன். அமைச்சரின் மருமகனுக்கு சிறந்த ஆசிரியர்கள், பள்ளி, தனிப்பயிற்சி, பணம் என்று எல்லாமே இருக்கிறது. வேறு எங்கு வேண்டுமானாலும் பணம் கொடுத்துப் படித்துக்கொள்ள முடியும் என்று ஆனந்த் கூறுகிறார்.

இது தனியார் கல்லூரி. இதை எங்களுடைய பிரிவினரின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று அந்த உறுப்பினர் கூறுகிறார்.

மன்னிக்க வேண்டும். படிக்க வாய்ப்பு இல்லாத பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு சாதி, மதம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் கற்கும் வாய்ப்பை வழங்கவே இந்தக் கல்லூரியை ஏற்படுத்தினார்கள் என்று ஆனந்த் பதில் கூறுகிறார்.

இட ஒதுகீட்டுக்கு எதிர்ப்பும் வரவேற்பும்

மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. நாடெங்கும் வரவேற்பும் எதிர்ப்பும் நிலவும் சூழல். இந்தக் கல்லூரியிலும் அது எதிரொலிக்கிறது. தரத்தையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று பேசுவோரிடம் வரலாறு சார்ந்து தனது வாதங்களை முன்வைக்கிறார் தீபக்.

இதுபோல் தொடர்ந்து வாதம் செய்வது ஆசிரியருக்கு அழகல்ல என்று ஆனந்த் எச்சரிக்கிறார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தீபக் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்.

துணை முதல்வர் அபிஷேக் தனிப் பயிற்சியில் அதிக அக்கறை காட்டுவதை ஆனந்த் எச்சரிக்கிறார். விதிகளை மீறி வெளியே பாடம் நடத்திச் சம்பாதிப்பதற்கு விளக்கம் கேட்டு கடிதமும் அனுப்புகிறார்.

அபிஷேக் பிரச்சினையைப் பெரிதாக்கி ஊடகங்களுக்குச் செய்தி அனுப்புகிறார். ஆனந்தைப் பத்திரிக்கையாளர் ஒருவர் சந்திக்கிறார். உங்கள் கல்லூரி தனியார் கல்லூரி. அங்கும் நீங்கள் உச்ச நீதிமன்றம்சொல்லியபடி ஒதுக்கீட்டை ஏன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்.

ஆசிரியருக்கு முன்னால் இரண்டு வகையான மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் பக்கமே நான் இருக்கிறேன். அரசியல் தலையீடு இன்றி இரு பெரும் பிரிவுகளுக்கு இடையே உள்ள கோட்டை அழிக்க முயல்கிறேன் என்று ஆனந்த் கூறுகிறார்.

கல்லூரி முதல்வரின் பேச்சு செய்தியாக வெளியாகிறது. பல்வேறு வாதங்கள் நிகழ்கின்றன. தனியார் கல்லூரி என்பதால் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று நிர்வாகக் குழுவில் பலரும் பேசுகின்றனர். ஆனந்த் கல்லூரிப் பணியில் இருந்து விலகுகிறார். தனது பால்காரரின் மாட்டுக்கொட்டகையில் எளிய மக்களின் குழந்தைகளுக்கான இலவசப் பயிற்சி நிலையத்தை உருவாக்கி அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வேலை செய்யத் தொடங்குகிறார் ஆனந்த். அங்கு படிக்கும் பலரும் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.

இட ஒதுக்கீடு குறித்து இன்றும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் இந்தியர் அனைவரும் சமம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் அறிவு சார்ந்த உரையாடல்களை இப்படம் முன்னெடுத்துள்ளது. கல்வி ஒன்றே சமூக மாற்றத்திற்கான கருவி. அதற்கு ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x