

பிப்ரவரி 27: சர்வதேச துருவக் கரடி நாள்
துருவக் கரடிகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேசத் தன்னார்வ அமைப்பு பிப்ரவரி 27ஐ சர்வதேச துருவக் கரடிகள் நாளாகக் கடைபிடித்துவருகிறது. புவிவெப்பமய மாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்பவை துருவக் கரடிகள். உறைபனி சூழ்ந்த பகுதியில் வாழ்வதாலேயே அவற்றைப் பனிக் கரடிகள் என்றும் அழைப்பதுண்டு.
புவி வெப்பமயமாதலால் உலகில் உள்ள கடல் பனி பேரளவு உருகிவருகிறது. இதனால் துருவக் கரடிகள் அழிந்துவருகின்றன. இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் புவி வெப்ப மயமாதலைக் கட்டுப்படுத்தி துருவக் கரடிகளைப் பாதுகாப்பதற்கும் இந்த நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
பிப்ரவரி 25: சர் டான் பிராட்மேன் நினைவு நாள்
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தலை சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதப்படும் சர்டான் பிராட்மேன் 1908 ஆகஸ்ட் 27 அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பிறந்தார். 22 வயது நிறைவடைவதற்குள் இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினார். மொத்தம் 52 சர்வதேசடெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிராட்மேன் 29 சதங்கள், 13 அரை சதங்களுடன் மொத்தம் 6,996 ரன்களைக் குவித்தார்.
அதிகபட்சமாக ஒரு போட்டியில் 334 ரன்களைக் குவித்தார். இவரது அபாரமான பேட்டிங்கை சமாளிப்பதற்காகவே இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் உடலை நோக்கி வீசுதல் (Bodyline) என்ற பந்துவீச்சு முறையைக் கடைபிடித்தனர். பிராட்மேனின் பேட்டிங் சராசரி 99.94.
1948 ஆகஸ்ட் 18 அன்று இங்கிலாந்துக்கு எதிராக அவர் விளையாடிய போட்டியில் நான்கு ரன்கள் அடித்திருந்தால் அவரது பேட்டிங் சராசரி 100ஐத் தொட்டிருக்கும். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தப் போட்டியில் டக்-அவுட் ஆகிவிட்டார். அந்தப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் 99.94 என்ற அவரது பேட்டிங் சராசரி சாத
னை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. 25-02-2001-ல் ஆஸ்திரேலியாவில் உள்ள கென்சிங்டன் பார்க்கில் மரணமடைந்தார்.
பிப்ரவரி 26: விக்டர் ஹ்யூகோ பிறந்த நாள்
பிரெஞ்சு இலக்கியத்தின் மாபெரும் ஆளுமையான விக்தோர் ஹ்யூகோ 1802 பிப்ரவரி 26 அன்று பிரான்ஸில் உள்ள பெசன்கான் பகுதியில் பிறந்தார். ஆயிரக் கணக்கான கவிதைகளையும் பல நாவல்களையும் நாடகங்களையும் படைத்துள்ளார். நான்காயிரம் ஓவியங்களை வரைந்துள்ளார். வறுமை எதிர்ப்பு, மரண தண்டனை எதிர்ப்பு, சமத்துவம், பெண்ணுரிமை, கலைஞர்களின் படைப்புரிமை ஆகிய முற்போக்குக் கருத்துகளை அவருடைய படைப்புகள் வலியுறுத்தின. 1862-ல் வெளியான‘லெ மிஸரபிள்ஸ் என்ற அவருடைய புகழ் பெற்ற நாவல் பல்வேறு மொழிகளில் திரைப் படங்களாகவும் இசை நாடகங்களாகவும்தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டது.
1950-ல் வெளியான ‘ஏழை படும்பாடு’ என்ற தமிழ்த் திரைப்படமும் அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டது தான். ‘The Last Day of a Condemned Man’ என்ற அவரது நாவல் ‘மரண தண்டனைக்கைதியின் இறுதி நாள்’ என்ற பெயரில் தமிழில் வெளி வந்துள்ளது. மரண தண்டனைக்கு எதிரான இந்த நாவல் வெளியாகி 150 ஆண்டுகள் கழித்து 1981-ல் பிரான்ஸில் மரண தண்டனை தடை செய்யப்பட்டது. அப்போது பிரான்ஸ் நாடாளு மன்றத்தில் ஹ்யூ கோவுக்கு நன்றியுடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பிப்ரவரி 28: தேசிய அறிவியல் தினம்
இந்தியாவின் தலைசிறந்த முன்னோடி விஞ்ஞானிகளில் ஒருவரான சர் சி.வி.ராமன், 1928-ல் ராமன் விளைவைக் கண்டுபிடித்தார். ஒளி புகக்கூடிய ஒரு ஊடகத்தின் வழியாகப் பாயும் ஒளியின் அலைவரிசை ஏன் மாறுகிறது என்பதை விளக்கியதுதான் அவரது கண்டுபிடிப்பு. அது அவரது பெயரிலேயே ராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டு பிடிப்புக்காகவே அவருக்கு 1930-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதன் மூலம் அறிவியல் பிரிவில் நோபல் பரிசைப் பெற்ற முதல் ஆசியக் கண்டத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட நாளான பிப்ரவரி 28 தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் நாள் கருப்பொருள் ‘அறிவியலில் பெண்கள்’.
- தொகுப்பு: கோபால்