Published : 20 Feb 2020 10:43 AM
Last Updated : 20 Feb 2020 10:43 AM

அட்டகாசமான அறிவியல்-15: சுடும் வீரர்களுக்கு சுடச்சுட உணவு

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

வீடுகளில், பள்ளி உணவகங்களில் நமக்கு சுடச்சுட உணவு கிடைக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலங்களோடு பனிமலையில் ராணுவப்பணிகளுக்கு செல்லும் வீரர்கள் கடுங்குளிரில் ஆறிப்போன ஆகாரத்தை சாப்பிட நேரிடும். பனிமலையில் சமையலறைக்கும், அடுப்புக்கும் எங்கே போவது?

அடுப்பின்றி, மின்சாரமின்றி, நேர விரையமின்றி எப்படி பதப்படுத்தப்பட்ட உணவை சூடாக்குவது? இச்சவாலை சமாளிக்க உதவுவது அறிவியல். அறிவியல் பாடத்தில் 'வெப்ப உமிழ் வினை' (Exothermic Reaction) பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.

வெப்ப உமிழ் வினை

இரண்டு வேதிப்பொருட்கள் இணையும் போது வெப்பம் வெளிப்படுவதே இந்த வேதிவினை. உதாரணமாக, சலவைத்தூளை தண்ணீரில் கலக்கும் போது வெதுவெதுப்பை உணர்ந்திப்பீர்கள். இது 'வெப்ப உமிழ் வினை' தான். இதற்கு நேர்மாறாக இரண்டு வேதிபொருட்கள் இணையும் போது வெப்ப நிலை குறைவது உண்டு. இதற்கு வெப்பம் கவர் வினை (Endothermic Reaction) என்று பெயர். இந்த வெப்ப உமிழ் வினையைப் பயன்படுத்தி, ராணுவ வீரர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாற ‘சுய வெப்பமூட்டி பொட்டலம்’ (Self Heating Pocket) உருவாக்கப்பட்டிருக்கிறது. எப்படி இந்தப் பொட்டலம் உணவை சூடாக்குகிறது?

தானாக உணவை சூடாக்கும் பொட்டலம்

சுய வெப்பமூட்டி பொட்டலத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக இரண்டு மூடப்பட்ட உறைகள் இருக்கும். உள் உறையில் பதப்படுத்தப்பட்ட உணவு இருக்கும். வெளி உறையில் ஒரு வெப்ப உமிழ் வேதிப்பொருள் இருக்கும். உணவை சாப்பிடும் முன்பு, வெளி உறையை திறந்து, தண்ணீரூற்ற வேண்டும்.

நீர் வேதிப்பொருளுடன் கலக்கும் போது உடனடியாக வெப்பம் உருவாகும். இவ்வெப்பதினால் உள் உறையில் இருக்கும் உணவுப்பொருள் சூடாக்கப்படும். இப்போது உள் உறையை திறந்தால் கடுங்குளிரிலும் சுடச்சுட உணவு கிடைக்கும். அறிவியல், மதிப்பெண்களையும் தேர்வுகளையும் தாண்டி நடைமுறை வாழ்வுக்கு பயன்படுவது சிறப்பு. அதிலும் நாடுகாக்கும் வீர்ர்களின் வாழ்வை இலகுவாக்குவது மிகச்சிறப்பு.

மூக்கடைப்பும் விமானமும்

மூக்கடைப்பு நாட்களில் மூச்சு விட நாம் சிரமப்படுவதுண்டு. ஏன்? மூக்கின் சுவாச துவாரங்கள் அடைபடுவதால் காற்றை உள்ளிழுக்கவும் வெளிவிடவும் சிரமப்படுகிறோம். விமானத்திற்கும் மூக்கடைப்பு ஏற்படுவதுண்டு. அப்படியா? விமானத்தின் ஜெட் இன்ஜினில் காற்று உள்ளிழுக்கப்பட்டு எரிபொருளோடு சேர்ந்து எரிக்கப்படுவதால் ஏற்படும் வெப்பத்தில்(வெப்ப உமிழ் வினை) உந்துவிசை ஏற்படுகிறது.வானில் விமானம் பறக்கும் உயரத்தில் வெப்பநிலை உறைநிலைக்கும் குறைவாக இருக்கும்.

இதனால் விமான இன்ஜினின் நுழைவாயிலிலும் இறக்கைகளின் முன் விளிம்புகளிலும் பனிப்படிவுகள் ஏற்படும். பனிப்படிவுகளின் அடர்த்தி அதிகமானால், இன்ஜினுக்கு உள்ளே செல்லும் காற்றின் அளவு குறையும். இதனால் இன்ஜின் உற்பத்தி செய்யும் உந்து சக்தியும் குறைந்து விமானத்தின் இயக்கமும் பாதிக்கப்படும். எப்படி இதை சரி செய்வது?

(தொடரும்)

கட்டுரையாளர், ‘அடுத்த கலாம்: விஞ்ஞானி ஆகும் வழிகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x