

இந்தியாவின் 52-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு பயில்வதற்கான ‘எல்சாட் இந்தியா’ எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு (LSAT India - Law School Admission Test for India) தற்போது விண்ணப்பிக்கலாம்.
ஐந்தாண்டு பி.ஏ. எல்.எல்.பி., பி.பி.ஏ. எல்.எல்.பி., பி.காம். எல்.எல்.பி., பி.எஸ்சி. எல்.எல்.பி., படிப்புகளில் சேர ’எல்சாட் இந்தியா’ நுழைவுத் தேர்வு உதவும். இது தவிர்த்து ஏனைய சில சட்டக் கல்லூரிகளும் இந்த நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களை சேர்க்கைக்கான தகுதியாக நிர்ணயித்துள்ளன. எல்சாட் இந்தியா நுழைவுத் தேர்வு, ’பியர்சன் வ்யூ’ என்ற அமெரிக்க சட்டக் கவுன்சிலின் மேற்பார்வையில் நடைபெறுகிறது.
விண்ணப்பிக்க தகுதி
பிளஸ் 2 தேர்ச்சியுடன் குறைந்தது 45 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுகிறார்கள். வயதில் வரம்பில்லை.
விண்ணப்ப நடைமுறைகள்
விண்ணப்ப நடைமுறைகள் ஆன்லைனில் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான இணையதளத்தில் தங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை பூர்த்தி செய்து பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் மின்னஞ்சலில் கிடைக்கும் இணைய இணைப்பின் வாயிலாக, விண்ணப்ப படிவம் அடங்கிய இணையப் பக்கத்தை அணுகி முறையான தகவல்களை பூர்த்தி செய்யலாம். அங்கு கோரப்படும் சான்றிதழ் நகல்களை இணைப்பதுடன், ஆன்லைன் மூலமே கட்டணத்தையும் செலுத்தலாம்.
தேர்வு நடைமுறைகள்
இதர நுழைவுத் தேர்வுகள் போல கணிதம் மற்றும் பொது அறிவு அடிப்படையிலான வினாக்கள் எல்சாட் இந்தியா நுழைவுத் தேர்வில் இடம்பெறாது. Analytical reasoning, logical reasoning, reading comprehension உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் அமைந்தநுழைவுத் தேர்வுக்கான முழுமையான பாடத்திட்டத்தை இணையதளத்தில்அறிந்து கொள்ளலாம்.
தேர்வு மற்றும் கவுன்சிலிங் நடைமுறைகள் ஆஃப்லைனில் நடைபெறும். தேர்வு நேரம் 2 மணி 55 நிமிடங்கள். சரியான விடையை தேர்வு செய்வதான 115 வினாக்களுக்கு மாணவர்கள் பதிலளித்தாக வேண்டும். தவறான விடைக்கு மதிப்பெண்களை கழிக்கும் நடைமுறை கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய அளவிலான இந்த நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். தமிழகத்தின் சென்னை உட்பட தேசத்தின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் செயல்படும்.
முக்கிய தினங்கள்
டிசம்பர் 6 அன்று தொடங்கி இதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் செயல்பாட்டில் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 1. மே 17 அன்று எல்சாட்இந்தியா நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு முடிவுகளை மே 19 அன்று ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.
விண்ணப்ப பதிவுக்கு அணுக வேண்டிய இணையதளம் discoverlaw.in/register-for-the-test