

இரா.செங்கோதை
விடுமுறை என்பதால் குழந்தைகள் கண்ணம்மாள் வீட்டிற்குக் கதை கேட்க சென்றனர். கண்ணம்மாள் முக மலர்ச்சியுடன் குழந்தைகளை வரவேற்றாள். அவர்களுக்கு தின்பண்டங்களை கொடுத்து அமரச் செய்தாள். "குழந்தைகளே! இன்று நாம் கணிதமேதை ஒருவர் கொடுத்த புதிரைப் பற்றி தெரிந்து கொள்வோமா?” என்றாள் கண்ணம்மாள். குழந்தைகள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
“உங்கள் அனைவருக்கும் டி-மார்கன் என்பவரை பற்றி தெரியுமா?” என்று கேட்டாள். சிலர் எங்களுக்கு தெரியும். பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தில் கணங்கள் அத்தியாயத்தில் டி-மார்கன் விதிகள் எனும் இரு விதிகளை படிக்கிறோம் என்றனர். “ஆம், அவரே தான். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர், தமிழகத்தில் மதுரையில்தான் பிறந்தார். அந்நேரம் இவரது தந்தை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணிபுரிய வந்திருந்தார். அப்போது டி-மார்கன் பிறந்தார். இவர் பிற்காலத்தில் இங்கிலாந்தில் மிகப்பெரிய கணித மேதையாக உருவெடுத்தார். மிகப்பெரிய அறிஞராக விளங்கியதால் இவரை பார்க்க பல நபர்கள் அனுதினமும் வருவார்கள். அப்படி ஒரு நாள் பார்க்க வந்தவர்களில் ஒருவர் டி-மார்கனிடம் உங்கள் வயது என்ன?”என்று கேட்டார்.
புதிரில் வயது ஒளிந்திருக்கு
கணிதப்புலமை பெற்றிருந்த டி-மார்கன், “நான் உங்களுக்கு ஓர் புதிர் கொடுக்கிறேன். அதன் விடை மூலம் எனது வயதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். x2 என்ற வருடத்தில் வயது x ஆக இருக்கும் வரத்தைப் பெற்ற மிக சிலரில் ஒருவனாக இருக்கிறேன்" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
இதைக்கேட்ட நபர் ஒன்றும் புரியாமல் முழிக்க டி-மார்கன் பதிலுக்கான வழிமுறையை கூறி தனது வயதை கண்டறிய அவருக்கு உதவினார். “குழந்தைகளே! இக்கதையில் உள்ள குறிப்பு வாயிலாக நீங்கள் டி-மார்கனின் வயதைக் கண்டறிய முடியுமா என முயற்சி செய்து பாருங்களேன்! ”என்றாள் கண்ணம்மாள்.
முயற்சி செய்த மாணவர்கள் தங்களுக்கு உதவி புரிய கண்ணம்மாளைக் கேட்டு கொண்டனர். டி-மார்கன் 1806-ம் ஆண்டில் பிறந்தார் என்ற முக்கிய குறிப்பை தெரிவித்தாள். இதை கேட்ட தருணத்தில் குழந்தைகள், 1806-ம் ஆண்டிற்கு மேல் மிக அருகில் அமைந்த வர்க்க எண் 1849 = 432 என்பதால் இதை கூறும்பொழுது அவரது வயது 43 ஆக இருக்க வேண்டுமென கூறி 1806 43 = 1849 என எழுதிக் காண்பித்தனர்.
பலத்த கரகோஷம் புரிந்த அனைவரும் இப்புதிர் மூலம் மேற்கண்ட கூற்றில் இருந்து கணித மேதையின் வயதை கண்டறிந்த மகிழ்வில் தங்கள் வீட்டிற்கு புறப்பட்டனர்.
கட்டுரையாளர்: கணித ஆசிரியை, பை கணித மன்றம்.