

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பெண்களுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வரும் 21-ம் தேதிதொடங்குகிறது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் தற்போது பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று பிரிஸ்பன் நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகா பாண்டே 24 ரன்களையும், தீப்தி சர்மா 21 ரன்களையும் சேர்த்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியில் சிறப்பாக பந்துவீசிய அனிஷா மொகமத், ஷாமிலியா கோனெல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியாவுடன் மோதல்
இதைத்தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற 108 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கு எளிதாக கருதப்பட்டாலும், இந்திய அணியின் பந்துவீச்சு அதனை கடினமானதாக மாற்றியது. குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான பூனம் யாதவ், தன் அபாரமான பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் வரிசையை சிதைத்தார். அவர் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்த, மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் வரிசை சிதறியது.
மேற்கிந்திய தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் லீ ஆன் கிர்பி அதிகபட்சமாக 42 ரன்களைக் குவித்தார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வரும் 21-ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்தியா ஆடவுள்ளது.