

இந்தியா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக பாரதியார் இயங்கியது நம்மில் பலருக்குத் தெரியும். இதைத் தொடங்கியவர் மண்டையம் நிவாசாச்சாரியார். இவரது மகள் யதுகிரி. இவரை பாரதி தமது மகள்களான சகுந்தலா, தங்கம்மாள் ஆகியோருக்கு இணையாக மூன்றாவது மகளாகவே பாவித்தார்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாரதி யதுகிரியோடு சேர்ந்து பாடல்கள் பாடிக்காட்டுவார், உரையாடுவார், யதுகிரிக்கு கதைகள் சொல்லுவார். விவாதங்கள் செய்வார். ‘பாரதி நினைவலைகள்’ என்று ஒரு புத்தகத்தையே யதுகிரி எழுதியுள்ளார். அப்புத்தகத்தில் இருந்து ஒரு சம்பவம்.
யதுகிரியும் பாரதியும்
ஒரு முறை பாரதியாரும் யதுகிரியும் கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரையில் அலைகளில் சிறிது நேரம்விளையாடிவிட்டு கிளம்பும்போது யதுகிரி சில நாணயங்களைக் கடலில் வீசினாராம். “ஏன் அவ்வாறு விசுகிறாய்” என்று பாரதியார் கேட்டிருக்கிறார். உடனே யதுகிரியும் தமது தாயார் நீர் நிலைகளுக்குச் செல்லும்போது அங்கே சில நாணயங்களை விட்டுவிட்டு வரவேண்டும் என்று கூறியதாகச் சொல்கிறார். அதற்குப் பதிலாக பாரதியார் கூறும்போது, “உன் அம்மா சொன்னது சரிதான். குளம், ஏரி போன்ற நீர்நிலைகளை பராமரிப்பவர்கள் எந்த விதமான பிரதிபலனும் எதிர்பாராமல்தான் அந்தப் பணியை செய்கின்றனர். அவ்வாறு குளம், ஏரி ஆகிவற்றை சுத்தம் செய்ய இறங்கும்போது அவர்களுக்கு உதவுவதற்காகத்தான் உன் அம்மா சொல்லியிருப்பார். இங்கே கடலில் காசை வீசினால் அது யாருக்குக் கிடைக்கப்போகிறது?” என்று கூறிவிட்டு எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்குப் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்றாராம் பாரதி.
மூடநம்பிக்கை ஏன்?
இன்றைக்கும் பல செயல்களை மக்கள் கண்மூடித்தனமாக செய்வதைப் பாரிக்கிறோம். திருஷ்டி கழித்தல் என்ற பெயரில் பூசனிக்காயை போட்டுத் தெருவில் உடைப்பது. அதுவும் பலரும் ஒரே நேரத்தில் போட்டு உடைப்பது எவ்வளவு விபத்துகளுக்கு காரணமாகிவிடுகிறது! நரம்புத் தளர்ச்சியால் அவதியுறுவோரை பேய் பிடித்துவிட்டது என்று சொல்லி மக்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது. அதுவும் பெண்ணென்றால் பேயும் இறங்கும் (இது யார் அடிச்சுவிட்டதெனத் தெரியவில்லை) என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஊரில் பெண்களைத்தான் பேய் பிடித்தாட்டுகிறது. எந்த ஆண்களுக்கும் பேய் பிடிப்பது போல் தெரியவில்லை. ஒருவேளை ஆண்களைப் பேய்களுக்குக்கூட பிடிக்கவில்லையோ!
அதற்காக தனிப்பட்ட மதநம்பிக்கைகளை நாம் குறை சொல்லவில்லை. அவரவர்களுக்கு பிடித்த மதங்களைப் பின்பற்றும் உரிமையை நமக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ளது. இதற்காகக் கூடலாம், வணங்கலாம், வழிபாடு செய்யலாம். அல்லது வழிபடாமல் கூட இருக்கலாம். அதுவும் அவரவர் விருப்பமே. ஆனால், நம்பிக்கை என்ற பெயரில் நடைபெறும் அறிவுக்கொவ்வாத பல விஷயங்களைத்தான் நாம் விமர்சனக் கண்கள் கொண்டு பாரதியார் போல உற்றுநோக்க வேண்டி இருக்கிறது.
மெய்ப்பொருள் காண்பதறிவு
ஒரு முறை பெரியாரிடம், “நீங்கள் காலம் முழுவதும் கடவுள் இல்லை என்று பரப்புரை செய்துவருகிறீர்களே ஒருவேளை கடவுள் உங்கள் முன் தோன்றிவிட்டால் என்ன செய்வீர்கள்” என்று கேட்டார்களாம். இதற்கு சற்றும் கலங்காமல் பெரியார், “அடுத்த நாளில் இருந்து கடவுள் இருக்கிறார் என்று பரப்புரை செய்வேன்” என்றாராம்.
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக்கூலி தரும் என்கிறார் வள்ளுவர்.
நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் ஒருசேர அறிவியல் கண்ணோட்டத்தோடு சேர்த்துக்கொண்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
ஒரு முறை மலையின் உச்சியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் வாய்ப்பாகக் கிடைத்த ஒருவேரினைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்தாராம். மிகவும் பதற்றமாக கடவுளே என்னைக் காப்பாற்று கடவுளே என்னைக் காப்பாற்று என்று கதறினாராம். இவரது பக்தியை மெச்சிய கடவுள், “உனது விதி முடிந்துவிட்டது. என்னால் உன்னைக் காப்பாற்ற இயலாது” என்றாராம். உடனே தொங்கிக் கொண்டிருந்தவர், “சரி கடவுள் வேண்டாம் வேறு யாராவது காப்பாற்றுங்களே” என்று கதறத் தொடங்கினாராம். இது எப்படி இருக்கிறது.?
(தொடரும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். முனைவர் என்.மாதவன்