

பிரியசகி
மேடையில் பெண் விடுதலை பற்றி வீராவேசமாகப் பேசிவிட்டு வீட்டில் மனைவியை அடிமையாக நடத்தும் வாய்ச்சொல் வீரர்கள் முள் கரண்டியில் நரமாமிசம் உண்பவர்களுக்குச் சமம் என்று தன்ராஜ் தாத்தா சொல்லிக் கொண்டிருந்தார்.
கீர்த்தி: அதென்ன தாத்தா முள் கரண்டியில் நரமாமிசம் சாப்பிடுறது?
தன்ராஜ்: அது ஒரு கதைம்மா.
சுதாகர்: அந்த கதையை சொல்லுங்க தாத்தா.
தன்ராஜ்: நிறைய பயணிகளை ஏத்திக்கிட்டு இந்திய சுற்றுலாக் கப்பல் ஒண்ணுஅந்தமான்தீவை நோக்கி போய்கிட்டு இருந்தது. திடீர்னு புயல் வந்து கப்பல்உடைஞ்சுபோய் எல்லோரும் கடல்ல தத்தளிச்சாங்க. நீச்சல் தெரிஞ்சவங்க நீந்திக் கரைசேர முயற்சி பண்ணாங்க.
சிலர் கையிலகிடச்ச கட்டைகளைக் கையில் பிடிச்சுக்கிட்டுமிதந்தாங்க. இப்படி நாலஞ்சு பேர் பக்கத்துல இருந்த ஒரு தீவுல கரை ஒதுங்குனாங்க. அப்பாடா ஒருவழியா தப்பிச்சுட்டோம், தீவுக்குள்ளப்போய் சாப்பிட ஏதாவது கிடைக்குதானு பாக்கலாம்னு கொஞ்ச தூரம் நடக்குறதுக்குள்ளயே விஷ அம்புகளோடு சிலர் அவங்கள சூழ்ந்துக்கிட்டாங்க.
ராணி: அந்தமான் தீவுல வாழும் பூர்வக்குடி மக்கள் நரமாமிசம் சாப்பிடுவாங்கன்னும் அதனால அங்கே யாரும் போகக்கூடாதுன்னு இந்திய அரசு தடை விதிச்சிருப்பதாகவும் பத்திரிகைகளில் படிச்சிருக்கேன் .
தன்ராஜ்: ஆமா, தங்களோட இடத்துக்கு அந்நியர்கள் வருவதை அவர்கள் விரும்புவதில்லை. மீறி யாராவது வந்தா அவங்களை கொன்னு சாப்ட்டுடுவாங்க. அப்படிஇவங்களையும் கொல்லப் போகும் நேரத்துலவயசான பெரியவர் ஒருவர் அம்மக்களுடைய மொழியில் நடந்ததை விளக்கினார்.
எங்களால உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது, ரொம்ப பசிக்குது சாப்பிட ஏதாவதுகொடுங்கன்னு கேட்டிருக்காரு. புதுசா வந்தஒருத்தர் தங்களோட மொழியில பேசுரதக்கேட்டதும் அந்த மக்களுக்கு சந்தோஷம்தலைகால் புரியல. அவங்களுக்கு சாப்பாடுகொடுத்து, நல்லாகவனிச்சு ஒரு படகுல ஏத்தி வழியனுப்பினாங்க
சுதாகர்: அடடா! நரமாமிசம் சாப்பிடுறவங்க கூட அவங்க மொழியில பேசுனா மயங்கிடுறாங்க இல்லயா. அது சரி தாத்தா, அந்த தீவுக்குள்ள புதுசா யாருமே போக முடியாதுன்னா அந்த பெரியவருக்கு மட்டும் அந்த மக்களோட மொழி எப்படி தெரிஞ்சுது.
தன்ராஜ்: இதே கேள்வியத்தான் மற்ற எல்லோரும் அவரிடம் கேட்டாங்க .
கீர்த்தி: அதுக்கு அவர் என்ன சொன்னாரு தாத்தா?
தன்ராஜ்: 1947-ல தமிழ்நாட்டுல இருந்த ஒரு வெள்ளைக்காரர் பூர்வக்குடி மக்களை பத்தி ஆராய்ச்சி பண்ண அந்தத் தீவுக்கு தனியா போயிருக்கார். அவரைத் தாக்கவந்த அந்த மக்களை பயமுறுத்த துப்பாக்கியால சுட்டிருக்கார். அது தவறுதலா ஒரு சின்னப் பையன் கால்ல பட்டுடுச்சு . துப்பாக்கி சத்தத்துக்கு பயந்து எல்லோரும் ஓடிட , அந்தப் பையன் மட்டும் வலியில துடிச்சுக்கிட்டு இருந்தான். அவனைத் தன் படகுல தூக்கிப் போட்டுக்கிட்டு போய் தன் வீட்டுல வெச்சு வைத்தியம் பார்த்திருக்கார்.
அவன் கால் குணமாகவும் இந்தியா விடுதலை அடையவும் சரியா இருந்துது. தன் சொந்த நாட்டுக்குப் போகும்போது அவனையும் கூட கூட்டிட்டுப்போய் தன்சொந்த மகனை போலவே படிக்க வைத்தார். லண்டனில் படிச்சு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரா இருக்கும்அந்தப்பையன் வேறு யாருமில்லை, அந்தப் பெரியவர்தான்.
ராணி: ஓ ! சின்ன வயசுலயே லண்டன் போய்ட்டதால நரமாமிசம் சாப்பிடும் பழக்கமெல்லாம் மறந்திருப்பார் இல்ல மாமா?
தன்ராஜ்: அவரோட இருந்தவங்களும் இதப்பத்தி கேட்டப்போ அவர் , இப்பவும் சாப்பிடுவேன்; ஆனா முள் கரண்டியில் சாப்பிடுவேன்னு சொன்னாராம்.
ராஜா: அடக்கடவுளே ! லண்டன் போனாலும் அவர் குணம் மாறலையா?
தன்ராஜ்: ஆமா, அதனாலதான் எவ்வளவுபடிச்சிருந்தும் சாதி, மத பாகுபாடு பாக்குறவங்க, மேடையில பெண் விடுதலை பத்தி மணிக்கணக்குல பேசிட்டு வீட்டுல மனைவிய அடிமையா நடத்துறவங்க முள் கரண்டியில நரமாமிசம் சாப்பிடுபவர்களுக்கு சமம்னு சொன்னேன்.(தொடரும்)
கட்டுரையாளர்: நிறைவகம், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், சென்னை