

ஆர். ரம்யா முரளி
இன்றைய தலைமுறை குழந்தைகள் பல விஷயங்களில் முன்னோக்கி வளர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரம் கொஞ்சம் கவலைப்படவும் வைக்கிறது.
தங்கள் குழந்தைப் பருவத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல், இன்று அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு வகுப்பு என காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் தங்களது உடல் எடைக்கும் அதிகமாகப் புத்தக மூட்டையை சுமக்க வேண்டிய கட்டாயம். பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டே குனிந்து வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலியும், முதுகு வலியும் கேட்காமலேயே கிடைக்கும் ‘போனஸ்’. இவர்களுக்கு புஜங்காசனம் மிகவும் உதவும். ‘புஜங்க’ என்றால் பாம்பு. பாம்பு படம் எடுப்பது போல் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் புஜங்காசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தின் முடிவில், நல்லபாம்பு தலை தூக்கிப் பார்ப்பது போல் காணப்படும்.
புஜங்காசனம் செய்வது எப்படி?
விரிப்பின் மேல், குப்புறப்படுத்து கைகளை நீட்டி வைக்கவும். பிறகு கைகளை மடக்கி உள்ளங்கைகளை மார்புக்கு நேராக பலமாக ஊன்றி வைக்கவும். மூச்சை உள் இழுத்து, தலையை தரையில் இருந்து மேலே தூக்கி நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியை மெல்ல உயர்த்தவும். தாடை கீழ் நோக்கி இருக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் நிலைத்து இருக்க வேண்டும். முழங்கைகள் உடலோடு ஒட்டியபடி இருக்க வேண்டும்.
பிறகு நிதானமாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டு தலையை கீழே இறக்கி அதில் இருந்து முதல் நிலைக்கு வரவும். ஆரம்ப காலத்தில் கால்களை சில அடிகள் தள்ளி வைத்துச் செய்வது நல்லது. நன்றாக பழகிய பின்னர் கால்களை சேர்த்து வைத்துச் செய்யலாம். ஆரம்பத்திலேயே கால்களை சேர்த்து வைத்து செய்யும் போது, முதுகு வலி வர வாய்ப்புள்ளது. ஏற்கெனவே முதுகு வலி உள்ளவர்கள் அதை சரி செய்து கொண்ட பின்னர், இந்த ஆசனத்தை குருவின் துணைகொண்டு பழகுவது நல்லது.
பலன்கள்
புஜங்காசனம் செய்யும் போது முதுகு நன்றாக வளைவதால், அந்தப் பகுதி நல்ல பலம் பெறும். மூச்சு திறன் அதிகரிக்கும். தோள்பட்டைக்கு நல்ல நீட்சி கிடைக்கும். உடலின் மேல் பின்புறம் மற்றும் மத்திம பகுதி தசைகள் வலுப்பெறும். மேல் வயிற்றுத் தசைகள் வலுப்பெறுவதால் செரிமானம் நன்றாக நடைபெறும். இந்த ஆசனம் உடலுக்கு நல்ல ஆற்றலும், புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்