அறம் செய்யப் பழகு 12: நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது!

அறம் செய்யப் பழகு 12: நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது!
Updated on
2 min read

பிரியசகி

சமுதாய மேம்பாட்டுக்கு பாலியல் சமத்துவம் எவ்வளவு முக்கியம் என்பது பற்றி தன்ராஜ் குடும்பத்தினர் உரையாடிக் கொண்டிருந்தனர்

கீர்த்தி: தாத்தா, தினமும் பெண்களை கிண்டல் பண்றது, பின்னாடியே வந்து அநாகரிகமா பேசி தொல்லை பண்றது, ஆசிட் வீசுறது, இன்டர்நெட்ல பெண்களோட புகைப்படங்களை பதிவேற்றம் பண்ணி தவறான தகவல்களை பரப்புறது, கடத்திட்டுப் போய் கெடுக்குறது இப்படி நிறைய செய்திகளைப் படிக்குறோம், டிவி.யில பாக்குறோம். ஹைதராபாத்ல டாக்டர் பிரியங்காவை கொன்னவங்களை என்கவுன்ட்டர் பண்ணி சாகடிச்ச மாதிரிதப்பு பண்றவங்களை எல்லாம் என்கவுன்ட்டர்பண்ணி கொன்னுட்டா பயம் வந்து யாரும் தப்பு பண்ணமாட்டாங்க இல்லயா?

தனராஜ்: மேலோட்டமா பார்த்தா இது சரின்ற மாதிரி தோணலாம்மா. ஆனா நம்ம நாடு ஜனநாயக நாடு. தான் நிரபராதின்னு நிரூபிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கு. நூறு குற்றவாளிகள் தப்பிச்சாலும் ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது. அதுக்காக குற்றவாளிகள் தப்பிச்சா பரவாயில்லைன்னு சொல்லைல. ஒரு குற்றவாளியும் தப்பிக்காதபடி சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படணும்.

பத்து வருஷம், இருபது வருஷம்னு வழக்கு இழுத்துட்டுப் போகாம சீக்கிரம் முடிச்சு தண்டனை நிறைவேற்றப்படணும். தப்பு பண்ணவங்க பணக்காரர், ஏழை, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு எந்த பாகுபாடும் இல்லாம சமநிலை தவறாம தண்டிக்கப்பட சட்டங்கள் கடுமையாக்கப்படணும்.

அந்த டாக்டர் பிரியங்கா கேஸ்ல என்கவுன்ட்டர் செய்யப்பட்ட லாரி டிரைவர்ங்கதான் குற்றவாளிகள்னு நிரூபிக்கப்படாத நிலையில அவங்களை சுட்டுக் கொன்னதும் தப்புதானே. ஒரு வேளை அவங்கள்ல யாராவது நிரபராதியா இருந்திருந்தா அவங்க உயிருக்கு என்ன மதிப்பு? காவல் துறை மட்டுமில்லாம யாருமே சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கக் கூடாது.

ராணி: அந்த என்கவுன்ட்டர் நடந்தப்ப நானுமே சந்தோஷப்பட்டேன் மாமா. இதே மாதிரி பெண்கள்கிட்ட தவறா நடந்துக்குற எல்லோரையுமே இப்படி சுட்டுத் தள்ளிடனும்னு நினைச்சேன். ஆனா இப்ப நீங்க சொல்ற கோணத்துல யோசிச்சா, உயர் சாதியினருக்கு எதிரா குற்றங்கள் நடந்தா தாழ்த்தப்பட்ட மக்கள் உடனடியா தண்டிக்கப்படுறதும், தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உயர் சாதியினர், உயர் பதவிகளில் இருப்பவங்க சம்பந்தப்பட்டிருப்பது வெளிப்படையா தெரிஞ்சாலும் அவங்க தண்டிக்கப்படாம சுதந்திரமா திரிவதும் புரியுது.

ராஜா: ராஜஸ்தானில் குழந்தைகள் திருமணத்துக்கு எதிரா துணிச்சலோட போராடிய பன்வாரிதேவிய உயர் சாதி ஆண்கள் பாலியல் பலாத்காரம் பண்ணி, ‘பொம்பள... பொம்பளையா இல்லன்னா, இப்படிதான் நடக்கும்னு’ திமிரா பேசினது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்.

ராணி: சமமான குற்றத்துக்கு சமமான தண்டனைன்னா காஷ்மீர் சிறுமி ஆசிபா, நம்ம ஊர் பெண்கள் ரோஜா, நந்தினி இந்த வழக்குல சம்மந்தப்பட்டவங்களையும் காவல் துறை என்கவுன்ட்டர் செய்திருக்கணும் தானே?

தன்ராஜ்: ஆமா வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. அதே சமயம் காவல் துறையும், நீதித் துறையும் எந்த நிர்பந்தமும் இல்லாம சுதந்திரமா செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரணும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

கீர்த்தி: தாத்தா என் கிளாஸ்ல கவுசல்யானு ஒரு பொண்ணு இருக்கா. என் ஃபிரெண்ட்தான். அவளோட அப்பா ஏதோஒரு கட்சியில இருக்குறதா சொன்னா. இந்தமாதிரி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் போதெல்லாம் அரசியல் கூட்டங்கள்ல எல்லாம் வீராவேசமாக பேசுவாராம். ஆனா வீட்டுக்கு வந்தா, அவளோட அம்மாவை எதுக்கெடுத்தாலும் அடிப்பாராம், திட்டுவாராம். சாப்பாட்டுல உப்பு கொஞ்சம் கம்மியா இருந்தாலும் தட்டத் தூக்கி வீசுவாராம். இதுவும் வன்முறைதானே.

தன்ராஜ்: ஆமாம்மா. ஆண்கள் தன் கோபத்தை, ஆணாதிக்கத்தை வெளிப்படுத்த பெண்ணுடலைத்தான் கருவியா பயன்படுத்துறாங்க. பாலியல் வன்கொடுமை மாதிரியான பெரிய தவறுகளுக்கும் இதுமாதிரியான குடும்ப வன்முறைகளுக்கும் அடிப்படை காரணமே பெண்ணை தன்உரிமைப் பொருளா உடைமையா நினைக்குறமனோபாவம்தான். இது மாறணும். உன் தோழியோட அப்பா முள் கரண்டியில நர மாமிசம் சாப்பிடும் நபருக்கு சமம்.

கீர்த்தி: அதென்ன முள் கரண்டியில நர மாமிசம் சாப்பிடுறது? புரியலையே தாத்தா!

(தொடரும்)
கட்டுரையாளர்: ஆசிரியை, எழுத்தாளர், நிறைவகம், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in