

ஜி.எஸ்.எஸ்.
1928-ல் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் தனிப்பட்ட எந்த இந்தியராவது பதக்கம் பெற்றாரா?
இல்லை. ஜப்பானைச் சேர்ந்த மிகியோ ஓடா என்பவர் ட்ரிப்பிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கத்தைப் பெற்றார். ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஒலிம்பிக்ஸில் தங்கம் பெற்றது இதுவே முதல் முறை.
மகளிருக்கான போட்டிகள் அந்த ஒலிம்பிக்ஸில் எந்த அளவுக்கு இருந்தன?
முதல் முறையாக தடகளப் போட்டிகளும், குழு ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியும்பெண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கே பலத்த எதிர்ப்பு. அதிலும் 5 தடகளப் பிரிவுகளில் மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டதால் பிரிட்டிஷ் தடகளவீராங்கனைகள் இந்த ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ள மறுத்தனர். வேறொரு விந்தையும் நடைபெற்றது. சிற்பம், இலக்கியம், கவிதை,ஓவியம், கட்டிடக்கலை ஆகியவற்றுக்கும் கூடப் போட்டிகள் நடைபெற்றன. ஆனால்,சர்வதேச ஒலிம்பிக் குழு அந்தப் பிரிவுகளுக்கான பதக்கங்களை பின்னர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
தடகளப் பிரிவில் ஒன்றுக்கு மேற்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் பெண்கள் பதக்கம் பெற்றதுண்டா?
1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் டிட்ரிக்ஸன் என்ற பெண்மணி உயரம் தாண்டுதல், தடை ஓட்டம், ஈட்டியெறிதல் ஆகிய மூன்று பிரிவுகளிலும் பதக்கங்களை வென்றார்.
1928 ஒலிம்பிக்ஸில் முதலிடம் பெற்றது எந்த அணி?
அமெரிக்கா. இரண்டாம் இடம் ஜெர்மனிக்கும், மூன்றாம் இடம் பின்லாந்துக்கும் கிடைத்தது.
1932 ஒலிம்பிக்ஸ் மிக மோசமாக நடக்கும் என்று கருதப்பட்டதாமே?
ஒருவிதத்தில் அப்படித்தான். உலகம் முழுவதும் அப்போது பொருளாதார வீழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. என்றாலும் கூட 37 நாடுகள், 1300 விளையாட்டு வீரர்களைப் பங்கேற்க அனுப்பின. அமெரிக்காதான் மிக அதிகமான தங்கப்பதக்கங்களை அள்ளிச் சென்றது. இந்த ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்.
இந்த ஒலிம்பிக்ஸின் தனித்தன்மை என்ன?
ஒலிம்பிக் கிராமம் என்ற ஒன்று முதன்முறையாக உருவாக்கப்பட்டது. கிராமம் என்றால் ஏதோ வசதிகளில் பின்தங்கிய இடம் என்று நினைத்துவிடக் கூடாது. அது முழுக்க முழுக்க ஒலிம்பிக் வீரர்களும், பயிற்சியாளர்களும் மட்டுமே தங்கும் பகுதி.
வீராங்கனைகள் ஒரு தனி விடுதியில் தங்க வைக்கப்பட்டார்கள். தொடர்ந்து ஒலிம்பிக்ஸ்களில் ஒலிம்பிக் கிராமம் என்பது தவறாமல் இடம் பெறத் தொடங்கியது.
இப்போதெல்லாம் பதக்கங்களை அணிவிக்கும்போது முதல் பரிசு பெறுபவருக்கு சற்றுஉயரமான இடம், இரண்டாவது, மூன்றாவதுஇடம் பெற்றவர்களுக்குச் சற்றே குறைந்தஉயரத்தில் என்று அந்த மேடை காணப்படுகிறது அல்லவா. அது 1932 ஒலிம்பிக்ஸ்ல்தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஒலிம்பிக்ஸிலும் ஹாக்கியில் இந்தியாவுக்கு முதலிடம் இல்லையா?
உண்மைதான். ஆனால், மூன்று நாடுகள்தான் இந்தப் பிரிவில் பங்கு கொண்டன. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா. பிற இரு நாடுகளிடம் தோற்றாலும் அமெரிக்காவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்து விட்டது!
(தொடரும்)