Published : 03 Feb 2020 11:20 AM
Last Updated : 03 Feb 2020 11:20 AM

நதிகள் பிறந்தது நமக்காக! 13: தமிழர்களோடு ஒன்றிய காவிரி!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவில் பொதுவாக எல்லா நதிகளுமே ‘வணங்குதற்கு உரியதாக' புனிதத்தன்மை உடையதாகவே பார்க்கப்படுகின்றன. அவற்றிலும் இரண்டு நதிகள் மிகப் பிரபலம். ஒன்று கங்கை; மற்றொன்று காவிரி. தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிப் போன நதி காவிரி. காவேரி, தென்னகத்து கங்கை என்று பல பெயர்கள் இருந்தாலும், பழங்காலத் தமிழ் இலக்கியம் குறிப்பிடும் ‘பொன்னி’ என்கிற பெயர் தமிழுக்கே உரியது.

பொன்னி தெரியுமா?

இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களிலும் ‘காவிரி’ என்று மட்டுமே அறியப்படுகிறது. ஆனால், நமக்கே உரித்தான ‘பொன்னி’ என்கிற பெயரைத் தமிழ்நாட்டில் கூட யாரும் பயன்படுத்துவது இல்லை. அதைவிடவும் ‘பொன்னி’ என்கிற பெயரில் உள்ள ஆறு எது என்று கேட்டால் சரியாக பதில் சொல்பவர்கள் கூட அதிகம் இல்லை. அமரர் கல்கி மட்டும் ‘பொன்னியின் செல்வன்' என்கிற அபாரமான வரலாற்றுப் புதினம் படைத்து இருக்காவிட்டால், இந்தப் பெயரே அடியோடு மறக்கப்பட்டு இருக்கும். தமிழ்நாட்டில், தமிழர்களிடையே புழக்கத்திலிருந்த நல்ல தமிழ்ப் பெயர்களை மீட்டு எடுப்பதேகூட மிகப் பெரும் சவாலாக இருக்கும் போல் தோன்றுகிறது.

எங்கெல்லாம் பாய்கிறது?

சரி... ஒரு எளிமையான கேள்வியுடன் காவிரிக்குள் நுழைவோம். தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் காவிரியாறு பாய்கிறது? தென் இந்தியாவில், கிருஷ்ணா, கோதாவரி அடுத்ததாக மூன்றாவது மிக நீளமான நதி காவிரி. இது கர்நாடகாவில் தோன்றி, தமிழகத்தை செழிப்பாக்கி வங்கக் கடலில் சங்கமிக்கிறது. கிளை ஆறுகள்: ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, பவானி, நொய்யல், அமராவதி உள்ளிட்டவையாகும்.

கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி வழியே பாய்கிறது காவிரி. கர்நாட காவில், மேற்குத் தொடர்ச்சி மலை குடகு மண்டலம், தலைக்காவேரி எனும் இடத்தில் உற்பத்தி ஆகிற காவிரி நதி சுமார் 800 கிமீ தூரம் பாய்கிறது. கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்க பட்டினம் மற்றும் சிவசமுத்திரம் என்று இரு ‘தீவுகள்' உருவாகக் காரணம் ஆகிறது காவிரி.

ஆசியாவின் முதல் நீர் மின்சக்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம், சிவசமுத்திர நீர்வீழ்ச்சியில்தான் 117 ஆண்டுகளுக்கு முன்பே 1902-ம் ஆண்டில் ஆசியாவின் முதல் நீர் மின்சக்தி நிலையம் தொடங்கப்பட்டது. பெங்களூரு மாநகரின் மின்சாரத் தேவையை இது பூர்த்தி செய்கிறது.

கிளை ஆறான கபினி, திருமாகூடல் நரசிபுரா என்கிற இடத்தில், காவிரியுடன் கலக்கிறது. ‘ஸ்படிகா’ என்கிற புராணகால நதியும் இங்கே சங்கமிப்பதாக நம்பிக்கை இருக்கிறது. அதனால் இந்த இடம் ‘திரிவேணி சங்கமம்' அதாவது மூன்று நதிகளின் சந்திப்பு ஆகிறது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மூலம் காவிரி ஆறு, தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. இது தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது. இதற்கு அடுத்து வருகிறது நாம் நன்கு அறிந்த மேட்டூர் அணைக்கட்டு. இங்குதான் பாலார், சின்னார் மற்றும் தோப்பார் ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பாய்கிற போது, கிளை ஆறான ‘பவானி’,வந்து சேர்கிறது. இங்கும் ‘ஆகாய கங்கை’ என்னும் புராண நதி காவிரியுடன் இணைவதாக நம்பிக்கை. அதனால் ஈரோடு மாவட்டத்திலும் ஒரு ‘திரிவேணி சங்கமம்’நிகழ்கிறது.

தமிழ்நாட்டின் உயிர்நாடி

மேலும் பயணிக்கும் காவிரியுடன், கூடுதுறையில் மணிமுத்தாறு கூடுகிறது. கரூர் மாவட்டத்தில் நொய்யல் மற்றும் அமராவதி இணைகின்றன. திருச்சியில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிகிறது. இதன் வட பகுதி மட்டும், ‘கொள்ளிடம்’ என்று பெயர் பெறுகிறது. ஸ்ரீரங்கம் அருகே இரு பகுதிகளும் இணைந்து விடுகின்றன.

அங்கிருந்து தஞ்சை மாவட்டம் சென்று, தமிழகத்தின் நெற்களஞ்சியம் வளம் பெற உதவுகிறது. இப்பகுதியில்தான் கரிகாலன் கட்டி வைத்த கல்லணை இருக்கிறது. நிறைவாக, பூம்புகார் (இலக்கியம் கூறும் காவேரிப்பூம்பட்டினம்) அருகே வங்கக் கடலில் சங்கமிக்கிறது. பாயும் பாதை எங்கும் வளங்களை அள்ளித் தரும் தமிழ்நாட்டின் உயிர் நாடி பொன்னி நதி!

நாம் இங்கே காவிரி பற்றிய முழுத் தகவல்களையும் தந்து விடவில்லை. இது குறித்து விளக்கமாக அறிந்து கொள்ள, ஏராளமான புத்தகங்கள் கிடைக்கின்றன. தவறாமல் படித்துத் தெரிந்துகொள்வது நமது சமூகக் கடமை. முதலில் கேட்ட கேள்விக்கு என்ன பதில்? தெரிந்துகொள்ள இரண்டு வழிகள் உள்ளன. தமிழக வரைபடம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அதை விடவும், காவிரி ஆறு பாயும் பகுதிகளை, சுகமாக சாலைப் பயணம் மூலம் நேரில் சென்று அனுபவித்தும் அறிந்து கொள்ளலாம்.

(தொடர்வோம்)
கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x