உயர்கல்விக்கு திறவுகோல்-13: சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொறியியல் படிப்பு
எஸ்.எஸ்.லெனின்
சர்வதேச அளவிலான பொறியியல் கல்வியை இந்தியாவில் வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்று ‘பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்’.
இதன் வளாக கல்வி நிலையங்கள் மற்றும் இதன் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை அங்கீகரிக்கும் இதர பொறியியல் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் பட்டம் படிக்கலாம். அதற்குரிய நுழைவுத் தேர்வுக்கு (BITSAT - Birla Institute of Technology and Science Admission Test) தற்போது விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப நடைமுறைகள்
பதிவு செய்வது, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது, சான்றிதழ் நகல் பதிவேற்றம், கட்டணம் செலுத்தல் என இது தொடர்பான விண்ணப்ப நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே செய்ய வேண்டும். பிட்ஸ் இணையதளத்தில் மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்ஃபோன் எண் கொண்டு பதிவு செய்த பின்னர் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும். கேட்கப்பட்ட விவரங்களை முறையாக பூர்த்தி செய்ததும், புகைப்படம், கையெழுத்து மற்றும் சான்றிதழ் நகல்களை பதிவேற்றலாம்.
தொடர்ந்து உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் செயல்படும். விண்ணப்பிக்கும்போதே இந்த மையங்களில் ஏதேனும் மூன்றுக்கு முன்னுரிமை அளித்து பூர்த்தி செய்யும் வசதியுண்டு.
விண்ணப்பிக்கத் தகுதி
இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை பாடங்களாகக் கொண்டு பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் தற்போது தேர்வெழுத உள்ள மாணவர்கள் ஆகியோர் நுழைவுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பாடங்களில் குறைந்தது 75% மதிப்பெண்களும், இதர பாடங்களில் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றிருப்பது அவசியம். ஆங்கில மொழி அறிவு கூடுதல் தகுதியாகும். விண்ணப்பிக்க வயது வரம்பில்லை. இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் கூடுதல் விபரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
தேர்வு நடைமுறைகள்
தேர்வு நேரம் 3 மணி நேரம். வினாக்கள் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். சரியான விடையை தேர்ந்தெடுக்கும்படியான 150 வினாக்கள், 4 பிரிவுகளில் அடங்கி இருக்கும். மிகச்சிறந்த மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெறும் வகையில், 150 வினாக்களுக்கும் விடையளித்த மாணவர்கள் மட்டும் கூடுதலாக 12 வினாக்களுக்கு விடையளிக்கலாம். தேர்வுக்கு சில தினங்களுக்கு முன்பாக இணையதளம் வாயிலான, ஆன்லைன் மாதிரித் தேர்வு எழுதவும் வசதி உண்டு. சரியான விடைக்கு தலா 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு தலா 1 மதிப்பெண் கழிக்கப்படும்.
சேர்க்கை நடைமுறைகள்
தேர்வின் முடிவுகளை இரு விதமாக அறியலாம். முதல் வகை, தேர்வெழுதி முடித்த பின்னர் தங்களது அடைவினை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வசதி. மற்றொன்று திட்டவட்டமான தேர்வு முடிவாக, அதிகாரபூர்வமான அறிவிப்பினை ஜூன் 20 அன்று பெறலாம். பிட்சாட் 2020 நுழைவுத்தேர்வில் வெற்றிபெறுவோர் இந்தியாவில் பிலானி, கோவா, ஹைதராபாத் ஆகிய வளாக நிறுவனங்களில் சேர்ந்து பயில தகுதி பெறுவார்கள். கட்-ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையிலான, ஆன்லைன் கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கும்.
முக்கிய தினங்கள்
விண்ணப்ப நடைமுறைகள் ஜனவரி 11 அன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான அனுமதி காலம் ஏப்ரல் 1 முதல் 6. ஹால் டிக்கெட் தரவிறக்கத்துக்கான அனுமதி தொடங்கும் நாள் ஏப்ரல் 20. தேர்வு முடிவுகளை ஆன்லைனில் அறிவதற்கான நாள் ஜூன் 20.
