

இரா.முரளி
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. பல லட்சம் உயிர் பலி கொண்ட அச்சம்பவம் இன்றும் மறக்க இயலாத நிகழ்வு ஆகும். அணுகுண்டு என்பது எவ்வளவு அதிபயங்கர அழிவிற்கான ஆயுதம் என்பது அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது. அதன்பின் போர் அற்ற உலகை உருவாக்க வேண்டும் என்ற முழக்கங்கள் உலகெங்கிலும் முன்வைக்கப்பட்டன.
அன்று வெடிகுண்டு வெடித்தவுடன், ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டுவயது சிறுமி சடகோ சசாகி தூக்கி வெளியேஎறியப்பட்டாள். உயிர் பிழைத்திருந்த அவளின் பெற்றோர்கள், சடகோ சசாகி இறந்துவிட்டாள் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், அவள் உயிரோடு இருந்தாள்.
போர் நிறுத்தம் ஏற்பட்ட பின் அவள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினாள். சடோகோ சசாகி மிகவும் துடிப்பானவள். ஓட்டப்பந்தயம் என்றால் அவளுக்கு கூடுதல் பிரியம்.
தொடர்ந்த துயரம்
ஒரு நாள் பள்ளியில் நடைபெற்ற தொடர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு சடகோ சசாகி ஓடியபோது, தடுமாறினாள். அவள் கால்கள் வீங்கத் தொடங்கின. வலியால் துடித்தாள். அப்படியும் விடாமல் ஓடியவள், ஓடு களத்திலேயே மயக்கமுற்று விழுந்தாள்.
1955 பிப்ரவரி 20-ஆம் தேதி அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவளுக்கு ரத்த புற்றுநோய் தாக்கிஇருப்பதாக தெரிவித்தனர். ரத்தப் புற்றுநோய்என்பது அளவுக்கு அதிகமான வெள்ளைஅணுக்கள் ரத்தத்தில் பெருகுவதால் உண்டாகும் நோயாகும். அணுகுண்டு வெடித்ததின்விளைவாகத்தான் இந்த நோய் அவளுக்கு உண்டாகியிருக்கிறது என்பதை மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அவள் இன்னும் ஓராண்டு மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற சோகச் செய்தியையும் கூறினார்கள்.
அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி அவளின் உற்ற தோழி சிசுகோமருத்துவமனை வந்தாள். அப்போது தங்கநிறத் தாளினால் செய்யப்பட்ட ஒரு கொக்குபொம்மையை சடோகோவிற்குப் பரிசளித்தாள். காகிதத் தாளில் ஆயிரம் கொக்குகளைச் செய்து வேண்டிக்கொண்டால், நாம் நினைப்பது நிறைவேறும் என்ற ஜப்பானியர்களின் புராதன நம்பிக்கை பற்றி சடோகோவிடம் அவள் கூறினாள்.
இம்மாதிரி காகிதத்தினால் பொம்மைகளை செய்யும் முறைக்கு ஓரிகாமிக் கலை என்று பெயர். இது பற்றி தந்தை ஏற்கெனவே சொல்ல சடோகோ கேட்டிருக்கிறாள். இது அவளை மிகவும் ஈர்த்தது. அவளுடைய பள்ளி நண்பர்கள் பலரும் காகித கொக்குளுடன் மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்கள். இதன் விளைவாக தான் ஆயிரம் கொக்குகளை செய்தால், உயிர் பிழைக்க வேண்டும் என்ற தன் விருப்பம் நிறைவேறும் என அவள் நம்ப ஆரம்பித்தாள்.
அமைதிக்கான கொக்குகள்
வீசப்பட்ட அணுகுண்டின் அணுக்கதிர்கள் அவளைப்போன்றே பல குழந்தைகளைத் தாக்கியிருந்தது. சில குழந்தைகள் அம்மாவின் கருவில் இருந்தபோதே பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். தன்னுடன் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளும் நலம் பெற வேண்டும் என்று அவள் பிரார்த்தனை செய்தவாறு தினமும் கொக்குகளை வெள்ளைகாகிதத்தால் செய்யத் தொடங்கினாள். ஆனால், அவளுக்கு அவ்வளவு காகிதங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. சில நாட்கள் மருத்துவமனையில் கொடுக்கப்படும் கழிவறை காகிதங்களை கொண்டு கொக்குசெய்தாள். பள்ளி நண்பர்களை காகிதங்களைக் கொண்டு வரச்சொன்னாள்.
அவள் நம்பிக்கையுடன் கொக்குகளை செய்தாலும், அவள் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வந்தது. ஆனால், அவள் செய்த ஓரிகாமி கொக்குகள் அவள் உள்ளத்தில் உறுதியை கொடுத்தன. ஆனால், நாட்கள் ஓட ஓட அவள் மரணத்தை நெருங்கினாள்.
அந்த இரவில் அம்மாவிற்கு வணக்கம் சொல்லிவிட்டு தூங்க போனவள், மறுநாள் கண் விழிக்கவே இல்லை. ஆயிரம் கொக்குகளை அவளால் தன் இறப்பிற்கு முன்னால்செய்ய முடியவில்லை. 644 கொக்குகளைத்தான் அவள் செய்து இருந்தாள்.
அமைதி தூதுவர்
அணுகுண்டு வீச்சு ஏற்படுத்திய நோயினால் மரித்துப்போன சடோகோ உலக அமைதிக்கானத் தூதுவராக ஜப்பானில் எல்லோராலும் காணப்படுகிறாள். அவள் செய்து முடிக்காமல் விடப்பட்ட மீதமுள்ள 356 கொக்குகளை, அவளுடையப் பள்ளித் தோழர்கள் செய்து முடித்து, அதைக் காணிக்கையாக அவள் சமாதியில் வைத்தார்கள். அவளுடைய மரணம், போர் செய்வோரின் மனசாட்சியை உலுக்குவதாக இருக்கிறது.
அவள் ஒரு கொக்கின் சிறகில் இவ்வாறாக எழுதியிருந்தாள்: "உன்னுடைய சிறகுகளில் அமைதி என்று எழுதுகிறேன். நீ உலகெங்கிலும் அதைக் கொண்டு செல்!" இந்த வரிகள்தான் சடகோசசாகியின் சமாதியில்பொறிக்கப்பட்டுள்ளன. சடோகோவின் பள்ளித் தோழர்கள் அவள் பெயரில் நிதி வசூல் செய்து ஒரு நினைவிடத்தை எழுப்பி இருக்கிறார்கள். அவளுக்கு ஒரு சிலை ஜப்பானில் நிறுவப்பட்டது. அச்சிலையின் கைகளில் தங்கத்திலான கொக்கு பொம்மை கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று அமெரிக்காவின் சியாட்டல் நகரில் அமைதிப் பூங்கா உருவாக்கப்பட்டு, அங்கு அவளின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அவள் சிலையைச் சுற்றிலும் கொக்கு பொம்மைகள் காணிக்கையாக சமர்ப்பிக்கப்படுகின்றன. சடோகோவின் கதை நாவலாக பல மொழிகளில் எழுதப்பட்டு உள்ளது. சில குறும்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. உலக அமைதிக்காகப் பிரார்த்தனை செய்து வாழ்க்கையைத் தியாகம் செய்த இச்சிறுமி என்றும் நினைவில் நிற்பார்.
கட்டுரையாளர்: பேராசிரியர், சமுகச் செயற்பாட்டாளர்.