

முனைவர் என்.மாதவன்
குறிப்பிட்ட ஊருக்குச் செல்ல ஒரு பேருந்தில் ஏறுகிறார் ஒருவர். வழக்கம் போல சிந்தனையில் ஆழ்ந்துவிடுகிறார். பேரூந்தின் நடத்துனர் வரும்போதுதான் தாம் பயணச்சீட்டு எடுத்தோமா இல்லையா என்று சந்தேகம் வலுக்கிறது.
ஆனால், ஒருபக்கம் பயணச்சீட்டு எடுத்துவிட்டதுபோலத்தான் தோன்றுகிறது. தேடிப்பார்க்கிறார் தென்படவில்லை. நடத்துனரும் தமது அடுத்த வேலையைப் பார்க்க நகர்கிறார். மீண்டும் சிந்தனையில் ஆழும் அவர்சிறிது நேரம் கழித்து தனது இடத்திலிருந்து எழுந்து மும்முரமாக தேடுகிறார். அவரது இடத்திற்கு விரையும் நடத்துனர், “கவலைவேண்டாம் ஐயா நீங்கள் பயணச்சீட்டு எடுத்துவிட்டீர்கள். நான் பயணிகளின் எண்ணிக்கையை வைத்து சரிபார்த்துவிட்டேன்” என்று ஆசுவாசப்படுத்துகிறார்.
இவரா இப்படி?
“அட இருங்கப்பா, பயணச்சீட்டை பார்த்துத்தான் நான் எங்கே இறங்கவேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொன்னாரே பார்க்கலாம்.பேருந்தே குலுங்கிச் சிரித்தது.
இப்படிப்பட்ட மறதி மாமன்னர் வேறு யாருமல்ல. உலகம் போற்றும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன். ஜெர்மனியில் பிறந்து ஹிட்லரின் போக்கு பிடிக்காமல், அமெரிக்காவில் குடியேறியவர். சார்பியல் தத்துவத்தைத் தந்தவர். அணுகுண்டு தயாரிப்பிற்கான அடிப்படை அம்சங்கள் இவரது ஆராய்ச்சியில் இருந்தேஉருவானது. ஆனாலும் உலக சமாதானத்திற்காக தாம் வாழ்ந்த காலம் வரை தெருவில் இறங்கிப் போராடியவர்.
அபாரமான நகைச்சுவை உணர்வு
இவரது வாழ்நாள் முழுவதுமே நகைச்சுவை உணர்வுக்குப் பேர் போனவர். மகிழுந்தில் ஒரு முறை ஏறித் தம் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். சட்டென்று அவரது வீட்டின் முகவரி மறந்துவிட்டது. வேறு என்ன செய்வது? மகிழுந்தின் ஓட்டுநரிடம் உங்களுக்கு ஐன்ஸ்டீனின் வீடு தெரியுமா என்று கேட்டாராம்.
அந்த ஓட்டுநரோ அவர் எவ்வளவு பிரபலமான விஞ்ஞானி அவரைப் போய் தெரியாமல் இருக்குமா என்றாராம். ஒ அப்படியா நான் தான் ஐன்ஸ்டீன். எனக்கு என்னுடைய வீட்டின் முகவரி மறந்துவிட்டது என்னை எனது வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம்.
ஒரு முறை தனது வீட்டிலிருந்து கிளம்பும்போது வீட்டைப் பூட்ட மறந்துவிட்டாராம். ஒரு சிறுமி அவரைப் பார்த்து, “மாமா வீட்டைப் பூட்டவில்லையே” என்று கேட்க, அதற்கு எப்படி ஐன்ஸ்டீன் சமாளித்தார் என்பதுதான் நகைச்சுவை. இந்த வீட்டிலேயே மிகவும் மதிப்புவாய்ந்தவன் நான்தான். நானே கிளம்பிவிட்ட பிறகு பூட்டவேண்டிய தேவை என்ன இருக்கிறது என்றாராம். இப்படி வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை உணர்வோடு வாழவேதான் அவரால் பல்வேறு சாதனைகளைச் சாதிக்க முடிந்தது.
நான்காம் உலகப் போரின் ஆயுதம்
ஒரு முறை இவரது சாதனைக்காக அமெரிக்காவும் ஜெர்மனியும் சொந்தம் கொண்டாடின. இது குறித்துவிவாதம் நடந்தது. அதற்கு அவர் அளித்த பதில் மிகவும் சுவாரஸ்யமானது. நான் சாதித்துவிடவே இவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஒருவேளை நான் ஏதாவது தவறாகச் செய்துவிட்டால் இவர்கள்எப்படி சொல்வார்கள் தெரியுமா? அமெரிக்காவில் வாழ்ந்தால் என்ன எப்படியும் அவர் ஜெர்மனியில் பிறந்தவர்தானே என்று அமெரிக்கா சொல்லும். அதே நேரம் ஜெர்மனி, ஜெர்மனியில் பிறந்தால் மட்டும்போதுமா அவர் வாழ்வது அமெரிக்காவில் அல்லவா அதனால்தான் இப்படி செய்திருக்கிறார் என்று சொல்லும் என்று ஒரு போடு போட்டாராம்.
இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசிய சேதம் ஐன்ஸ்டீனை மிகவும் உலுக்கியது. மனம் உடைந்துபோனார். அந்த நேரம் சில நண்பர்கள் அணுகி அடுத்த உலகப்போரில் எதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் ஏதாவது கூற இயலுமா என்று கேட்டார்கள். அதற்கு ஐன்ஸ்டீன், “நான்காம் உலகப்போரின் ஆயுதம் கல்லாகத்தான் இருக்கும்” என்றார். அதாவது உலகம் முழுவதும் அழிந்து கல், மண்ணை தவிர வேறெதுவும் மிஞ்சாது என்பதைதான் சொல்லாமல் சொன்னார்.
நாமும் வாழ்வில் பல சவால்களைச் சந்திக்கிறோம். அந்த சவாலுக்கான தீர்வு குறித்தே எந்நேரமும் யோசித்துக் கொண்டிருப்பதால் எந்த விளைவும் ஏற்படாது. மாறாக நமதுமூளையினை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொண்டு தேவை ஏற்படும்போது மட்டுமே யோசிக்கலாம்.
மற்ற நேரங்களில் அதற்குத் தேவையான தயாரிப்பில் ஈடுபடலாம். இவ்வாறான செயல்பாடுகள் மட்டுமே வாழ்வைஎளிதாக்கும். பாடிக்கொண்டே வண்ணம் தீட்டுவோர், டிரம்ஸ் வாசிப்பது போல கொத்து பரோட்டா செய்யும் பரோட்டா மாஸ்டர் ஆகியோரைப் பாருங்கள் அவர்களது பணி நேர்த்திமிக்கதாகவே இருக்கும்.
(தொடரும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.