

சுரேஷ் ஆர். ரம்யா முரளி
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இன்று கவலைப்படுவது உடல் பருமன் மற்றும் தொப்பை குறித்துத்தான். இந்த பதிவில், தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவும் பஸ்சிமோத்தாசனம் பற்றி தெரிந்துகொள்வோம்.
தண்டாசனத்தில் அமர்ந்தவாறு கால்கள் இரண்டையும் நன்றாக நீட்டிக் கொள்ளுங்கள். கைகளை தரையில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். தாடையை கீழ் நோக்கி வைத்துக்கொள்ளுங்கள். இது ஆரம்ப நிலை.
பஸ்சிமோத்தாசனம் செய்வது எப்படி?
இப்போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்தபடி, கைகளை நேராக உயர்த்துங்கள். அடுத்து மூச்சை மெதுவாக விட்டவாறு, தாடையை கீழ் நோக்கிய நிலையில் வைத்து, அடி வயிறு தசைகளை நன்றாக உள்ளிழுத்தபடி குனிய வேண்டும். குனியும் போது இடுப்பு மூட்டுக்கள் முதற்கொண்டு நன்றாக இயங்க வேண்டியது அவசியம். குனிந்து, கை விரல்களால் கால் கட்டை விரல்களை மோதிரம் போல் பிடித்துக் கொள்ளவும்.
இந்த நிலைதான் பஸ்சிமோத்தாசனம். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்து விட்டு, மெதுவாக மூச்சை இழுத்தவாறு எழ வேண்டும். பயிற்சி முழுவதும் தாடையைக் கீழ் நோக்கியே வைத்திருக்க வேண்டும். பின் மெதுவாக மூச்சை விட்டவாறு கைகளை கீழே வைக்கவும். இந்த ஆசனப் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்து பழகலாம். அல்லது ஜானுசிரசாசனாவைப் போல் சில மூச்சுகள் தங்கியும் செய்யலாம்.
பலன்கள்
முக்கியமான சில ஆசன வகைகளில் பஸ்சிமோத்தாசனமும் ஒன்று. உடல் முழுவதற்கும் நல்ல ஸ்டிரெச்(stretch) தரக் கூடியது. வயிறு பகுதி நன்றாகச் சுருங்கி விரிவதால், வயிறு சம்பந்தமான எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு கிடைக்கும்.
சில ஆசனங்களில் குறிப்பிட்ட நேரம் தங்கி செய்யும் போது எந்த ஒரு வியாதியும் நம்மை நெருங்காது என்கிறது யோக சாஸ்திரம். அப்படி குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான ஆசனங்களில் பஸ்சிமோத்தாசனமும் ஒன்று.
சிறு வயதிலிருந்தே இந்த ஆசனத்தை பழகி வந்தால், தொப்பை விழுவதைத் தவிர்க்கலாம். செரிமானம் நன்றாக இருக்கும். மேலும் அடிவயிற்றுப் பகுதிகளில் இருக்கக்கூடிய உறுப்புகள் நன்றாகத் தூண்டப்படுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் எடை குறையும். தாடை கீழ் நோக்கி வைத்து இந்த ஆசனத்தைச் செய்வதால், தைராயிடு சுரப்பிகள் தூண்டப்படுகிறது. இது ஜானுசிரசாசனம் போன்று முன்னோக்கி செய்யப்படும் ஆசனம் என்பதால், உடல் முழுவதற்கும் பலன் கிடைக்கும்.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி