திசைகாட்டி இளையோர்-12: குடியுரிமைக்காக குரலெழுப்பும் சிறுமி

திசைகாட்டி இளையோர்-12: குடியுரிமைக்காக குரலெழுப்பும் சிறுமி
Updated on
2 min read

இரா.முரளி

போப் ஆண்டவரைக் காண வாஷிங்டன் வீதிகளில் ஆயிரக் கணக்கானோர் குழுமி இருந்தனர். 78 வயதான லத்தின் அமெரிக்கரான போப் பிரான்சிஸ் முதல் முறையாக 2015-ம்ஆண்டில் அமெரிக்காவிற்கு வருகை புரிகிறார். அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. திறந்த வாகனத்தில் அவர் வந்து கொண்டிருந்தார். கூட்டத்தில் முன்னால் நின்று கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி சோஃபி பதற்றத்துடன் இருந்தாள். அவள் கைகளில் ஒரு கடித உறையை வைத்திருந்தாள்.

போப் பிரான்சிஸின் வாகனம் நெருங்கிவிட்டது. சோஃபி, தடை வேலியைத் தாண்டி குதித்தாள். போப்பின் வாகனத்தை நோக்கி ஓடினாள். காவலர்கள் அவளைத் தடுக்க முயன்றார்கள். இதைப் பார்த்த போப் அவளை அருகில் அழைத்து வர சைகை காட்டினார். அருகில் சென்ற சிறுமியைத் தூக்கி உச்சி முகர்ந்த வேளையில் கையில் வைத்திருந்த உறையை போப்பிடம் சிறுமி ஒப்படைத்தாள். "அப்பா...எங்களைக் காப்பாற்றுங்கள்!” என்று கூவினாள். இச்சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்தது.

அவள் போபிடம் ஒப்படைத்த உரைக்குள்ஓரு கடிதம் இருந்தது. அவள் அதில் சோஃபி எழுதியிருந்தாள்: "நான் மிகவும் சோகமாக இருக்கிறேன். எப்போது வேண்டுமானலும் என் பெற்றோர் என்னிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்படலாம். என்பெற்றோர் அண்டை நாடு மெக்சிகோவிலிருந்து ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் புலம் பெயர்ந்தவர்கள். ஆனால்,நானும் என் தங்கையும் இங்கேயே பிறந்ததால் அமெரிக்க குடிமகள்களாகிவிட்டோம். என் தந்தை உலோகத் தொழிற்சாலை ஒன்றில் கடுமையாக உழைக்கிறார்.

எல்லாபுலம் பெயர்ந்தவர்களும் இங்கே கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் மாண்புடன் வாழத் தகுதியானவர்கள்தானே! அவர்கள் உழைப்பினால் நாடு பலன் பெறுகிறது. வகுப்பில் என் நண்பர்கள்நிற பேதமற்று அன்போடு பழகிவருகிறார்கள். எப்படி பிரிவது? எனக்கும் என்இளைய சகோதரிக்கும் எங்கள் பெற்றோருடன் வாழும் உரிமை உண்டல்லவா?நீங்கள்தான் உதவவேண்டும்!"

புலம் பெயர்ந்தோரின் குடியுரிமை

அமெரிக்காவில் தக்க ஆவணங்கள் இல்லாமல் புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் சட்டம் கடுமையாக்கப்பட்ட நிலை அப்போது. அமெரிக்காவிலேயே பிறந்திருத்தால் குழந்தைகள் அந்நாட்டுக் குடியுரிமை பெறுவார்கள். இந்நிலையில் பெற்றோர்கள் குடியுரிமை இல்லாததால் பிரிக்கப்பட்டு குழந்தைகள் ஆதரவற்றவர்களாக ஆகும் நிலை ஏற்பட்டது. அதைத் தடுக்க குடியுரிமைப் பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மட்டும் நாட்டில் தங்குவதற்கு உரிமை வழங்கும் DAPA எனும் தனி சட்டத்தை அன்றைய அமெரிக்க அதிபர்ஒபாமா கொண்டுவந்தார். இந்த சட்டம்ஒபாமாவின் தனிப்பட்ட அதிகாரத்தினால் கொண்டுவரப்பட்டது. அதனால் அதற்குஎதிர்ப்பும் பலமாக இருந்தது. எதிர்தரப்பினால் வழக்குகள் தொடரப்பட்டன. எனவே இச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

சோஃபியின் பெற்றோர் 2010ல் மெக்சிகோவிலிருந்து, பிழைப்பு தேடி அமெரிக்காவிற்கு ஆவணங்கள் ஏதுமின்றி புலம்பெயர்ந்து வந்தவர்கள். பின்னர்தான் சோஃபியும் அவள் சகோதரியும் பிறந்தார்கள். இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாதவளாக இருந்த சிறுமியிடம், ஒருநாள் அவளுடைய பெற்றோர் நிலைமையை விளக்கினார்கள். அவள் அதிர்ந்து போனாள். பெற்றோரை இழந்து, அரசு ஆதரவு இல்லத்தில் வாழவேண்டிய நெருக்கடியை அவளால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை.

பிறகுதான் தெரிந்து தன்னை போன்றேஆயிரக்கணக்கான சிறுமிகள் இப்படிஆதரவற்றவர்களாக ஆக்கப்படபோகிறார்கள் என்பது. இந்நிலையில்தான் போப்ஆண்டவரின் அமெரிக்க வருகை நிகழ்ந்தது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காட்டிய வழிகாட்டுதலில், எப்படியாவது போப்பை சந்தித்து, முறையீடு செய்தால் பலனளிக்கும் என சோஃபி குடும்பத்தினர் நம்பினார்கள்.

நம்பிக்கை வீண் போகவில்லை

மறுநாள் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தினர் பங்குபெற்ற கூட்டத்தில் போப் பிரான்சிஸ் இது பற்றி பேசினார். "புலம்பெயர்ந்து வந்துள்ள பல நாட்டினரை அமெரிக்கா ஏற்று கொண்டுள்ளது. நானும் ஒரு அகதியின் மகன்தான். இன்று உங்கள் விருந்தினராக வந்துள்ளேன். இந்த அன்பும், கருணையும் இங்கே வாழும் புலம்பெயர்ந்தோர் மீது தொடர்ந்து காட்டப்பட வேண்டும்" என்று பேசிய அவர், புலம் பெயர்ந்தோரை வெளியேற்றுவது பற்றி மறுபரீசிலனைச் செய்யவேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார்.

ஒபாமா செயல்பட்டார். அதன் விளைவாகக் குடிமக்களாக உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதில் இருந்து தவிர்க்கப்பட்டார்கள். அதிபர் ஓபாமா, ஒரு நிகழ்வுக்குசோஃப்பியை விருந்தினராக வரவழைத்தார்.ஆனால், இந்த மகிழ்ச்சி சோஃபியின் பெற்றோருக்கு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. காரணம், அமெரிக்க அதிபராக பின்னர் பொறுப்போற்ற டோனால் டிரம்ப்,ஒபாமா போட்ட சட்டத்தை நீக்கினார்.

ஆவணங்கள் இல்லாமல் புலம்பெயர்ந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார். சோஃபியும் விடவில்லை. பல இடங்களுக்குச் சென்று அமெரிக்க குழந்தையாக தன் பெற்றோருடன், தானும் தன்னைப் போன்ற குழந்தைகளும் வாழும் உரிமைக்காகப் பிரசாரம் செய்து வருகிறாள்.

கட்டுரையாளர்: பேராசிரியர், சமூகச் செயற்பாட்டாளர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in