ஒலிம்பிக்-8: தங்கப்பதக்கம் வென்ற மருத்துவர்கள்

ஒலிம்பிக்-8: தங்கப்பதக்கம் வென்ற மருத்துவர்கள்
Updated on
1 min read

சர்வதேச ஒலிம்பிக் குழு 1912-ல் இயற்றியசட்டம் எது?

சமீப கால ஒலிம்பிக்ஸின் துல்லியமான திட்டமிடலுக்கு அஸ்திவாரம் அமைத்தது ஸ்டாக்ஹோமில் (ஸ்வீடன்) 1912-ல் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுதான்.

ஒலிம்பிக்ஸ்அதிகாரிகளுக்குத் தீவிர பயிற்சி, மின்கருவிகள், தடகள போட்டிகளுக்கு ஃபோட்டோபினிஷ் வசதி ஆகியவை அறிமுகமானது இந்த ஒலிம்பிக்ஸில்தான். விளையாட்டு வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தங்குமிடங்கள் புதிதாகக் கட்டப்பட்டன. 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்காகத் தனித்தனி ‘லேன்கள்' அமைக்கப்பட்டதுகூட இந்த ஒலிம்பிக்ஸில்தான்.

“எங்கள் நாட்டில் நடைபெறப்போகும் ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டை போட்டிக்கு அனுமதி இல்லை’’ என்று ஸ்வீடன் மறுத்துவிட, சர்வதேச ஒலிம்பிக் குழு புதியதொரு சட்டத்தை இயற்றியது. இது குறித்தெல்லாம் ஒலிம்பிக்ஸை நடத்தும் நாட்டிற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பதுதான் அது.

1916-ல் ஒலிம்பிக்ஸ் பந்தயங்கள் ஏன் நடைபெறவில்லை?

பண்டைய சரித்திரத்தில் ஒலிம்பிக்ஸுக்கு கவுரவமான ஒரு இடம் உண்டு. அண்டை நாட்டு மன்னர்கள் என்னதான் சண்டை போட்டுக் கொள்பவர்களாக இருந்தாலும், ‘இறைவன் மீது போடப்படும் அமைதி ஒப்பந்தம்’ என்ற ஒன்றை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அதாவது ஒலிம்பிக்ஸ் நடைபெறும் ஆண்டில் (அதாவது நான்கு ஆண்டுக்கொரு முறை) எல்லா போர்களும் நிறுத்தப்படும். இந்த விதியை எல்லா மன்னர்களும் உறுதியோடு கடைபிடித்தனர். இதனால் தொடர்ந்து 1200 ஆண்டுகள் 300 ஒலிம்பிக் பந்தயங்கள் தடையின்றி நடைபெற்றன.

ஆனால், நவீன ஒலிம்பிக்ஸில் அரசியல் அழுத்தமாகவே காலூன்றியது. முதலாம் உலகப் போரினால் 1916-ம் ஆண்டில் ஒலிம்பிக்ஸை கைவிட வேண்டியதாயிற்று.

ஒலிம்பிக்ஸ் பந்தயங்களில் பதக்கங்களை வெல்பவர்களின் பின்னணி எப்படிப்பட்டதாக இருக்கும்? அதாவது அவர்களின் முக்கியப் பணி என்னவாக இருக்கும்?

“இதென்ன கேள்வி? விடாது விளையாட்டுப் பயிற்சிகளை செய்யவே அவர்களுக்கு 24 மணி நேரம் போதாதே’’ என்பது உங்கள் பதிலானால், கீழே உள்ள விவரங்களைப் படியுங்கள்.

1924-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் படகுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பெஞ்சமின் ஸ்பாக் என்பவர் ஒரு தலைசிறந்த குழந்தை நல மருத்துவர். இவர் எழுதிய ‘பேபி அண்ட் சைல்ட் கேர்’ (Baby and Child Care) என்ற நூல் 38 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இதுவரை முன்னூறு லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றிருக்கிறது.

ஆலன் ரீகன் என்ற டைவிங் வீராங்கனை 1920 ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அதே நேரம் ஒரு நாளிதழில் சிறப்பு நிருபராகவும் பணியாற்றியவர்.

பாரிஸில் 1900ல் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் நீண்ட தூர (மராத்தன்) போட்டியில் முதலிடம் பெற்ற, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் தியடோ என்பவர் பேக்கரி ஒன்றில் வீட்டு டெலிவரி செய்யும் ஊழியராகப் பணிபுரிந்தவர்.

பட் ஹவுஸர் அமெரிக்காவின் ஒரு பிரபல பல் மருத்துவராக விளங்கியவர். 1924 ஒலிம்பிக்ஸில் ஷாட்புட் மற்றும் டிஸ்கஸ் ஆகிய பிரிவுகளில் தங்கப்பதக்கத்தை வென்றது இவர்தான்.(தொடரும்) ஜி.எஸ்.எஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in