

ஜி.எஸ்.எஸ்.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டின் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவிலும் மூவருக்கு பதக்கம் அளிக்கப்பட்டதா?
இல்லை. 1908 லண்டன் ஒலிம்பிக்ஸில் தான் ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவிலும் மூவருக்குப் பரிசளிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் அளிக்கப்பட்டது அப்போதுதான்.
ஸ்கேட்டிங் விளையாட்டு நவீன ஒலிம்பிக்ஸில் தொடக்கத்திலேயே இருந்ததா?
இல்லை. 1908 ஒலிம்பிக்ஸில்தான் ஸ்கேட்டிங் முதல் முறையாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த உல்ரிச் சல்சோ என்பவர் இதில் முதலாவதாக வந்தார்.
1908 ஒலிம்பிக்ஸை நடத்த லண்டன் முன்வந்தாலும் அது பெரும் சவாலாகவே விளங்கியது ஏன்?
முதலில் ஒத்துக் கொண்ட ரோம் கடைசி நிமிடத்தில் காலை வாரி விட்டதால் 1908 ஒலிம்பிக்குக்கான கட்டமைப்புகளோடு தயாராக லண்டனுக்கு முழுமையாக இருண்டு வருடங்கள் கூட இல்லை. அப்போது பிரிட்டிஷ் ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் லார்டு டெஸ்பரோ (Desborough). இவர் மலையேறுவதில் வல்லவர். ஆக்ஸ்போர்டு படகுப் பந்தயத்தில் பங்கேற்றவர்.
நயாகரா நீர்வீழ்ச்சியின் அடித்தளத்தில் நீச்சலடித்தவர். இப்படி ஒரு சாதனையாளராக இருந்ததால் லண்டன் ஒலிம்பிக்ஸை வெற்றிகரமாக நடத்துவதை ஒரு சவாலாகவே மேற்கொண்டார். இதற்கான முக்கிய மைதானத்துக்கு வெள்ளை நகரம் என்றே பெயரிடப்பட்டது. பத்தே மாதங்களில் இது உருவானது. 66000 பார்வையாளர்கள் இதில் அமர்ந்து பார்க்க முடியும். இரண்டாயிரம் தடகள வீரர்கள் இதில் பங்கேற்றனர். செயிண்ட் லூயி நகரில் பங்கு கொண்டவர்களைவிட இது மூன்று மடங்கு அதிகம். 22 நாடுகள் பங்கேற்றன. அப்போது இதுவே ஒரு சாதனைதான். 37 பெண்களும் கலந்து கொண்டனர் அதுவும் பல தடைகளைத் தாண்டி.
விளையாட்டு வீராங்கனைகளுக்கு உரிய இடம் அங்கே அளிக்கப்படவில்லை என்ப தைத்தானே இது காட்டுகிறது?
வேதனை என்னவென்றால் நவீன ஒலிம்பிக்ஸின் தந்தை என்று கருதப்படும் கூபர்டின் கூட பெண்கள் லண்டன் ஒலிம்பிக்ஸில் பங்கு கொள்வதை அப்போது எதிர்த்தார்.
எந்த நாடு அதிகப் பதக்கத்தை வென்றது?
முதலிடம் பிரிட்டனுக்கு. 56 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 146 பதக்கங்கள். அதில் மூன்றில் ஒரு பங்கு பதக்கங்களையே பெற்றிருந்தாலும் அமெரிக்காவுக்குத்தான் இரண்டாவது இடம். இத்தனைக்கும் பிரிட்டனின் முத்திரை விளையாட்டான கிரிக்கெட், அந்த ஒலிம்பிக்ஸில் இடம் பெறவில்லை
பிரச்சினைகள் இல்லாமல் லண்டன் ஒலிம்பிக்ஸ் முடிவடைந்ததா?
கருத்து வேறுபாடுகளும், ஒலிம்பிக்ஸும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல என்றே சொல்லலாம். தொடக்க நாள் ஊர்வலத்தின்போது ஒவ்வொரு நாடும் தங்கள் கொடியை அரசு இருக்கும் பகுதிக்கு வரும்போது கொஞ்சம் தாழ்த்திப் பிடிக்க வேண்டும். ஆனால், அமெரிக்கா இதைச் செய்ய மறுத்தது.
400 மீட்டர் பந்தயத்தின் இறுதிச் சுற்றில் மூன்று அமெரிக்கர்களும், ஓர் ஆங்கிலேயரும் இடம் பெற்றனர்.
ஆங்கிலேயர் ஓடும்போது வழி மறித்ததாகக் கூறி ஓர் அமெரிக்கரைத் தகுதி நீக்கம் செய்தது ஒலிம்பிக் குழு. இதை அமெரிக்கக் குழு எதிர்க்க, அந்தப் போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் வீரரான ஹால்ஸ்வெல் என்பவர்தான் வெற்றி பெற்றார். அத்தனை போட்டிகளுக்குமான நடுவர்களை பிரிட்டன் அரசே தேர்வு செய்ததை அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது. இனி வருங்காலத்தில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் நடுவர்களாக இருக்க வேண்டுமென்று சர்வதேச ஒலிம்பிக் குழு தீர்மானித்தது.
(தொடரும்)