

கவிதா நல்லதம்பி
மலர்: என்னக்கா இன்னைக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு?
மதி: இன்னைக்கு எங்க கல்லூரியில தமிழ் அகராதியியல் நாள் கொண்டாடினாங்க மலர். அதான் வழக்கத்தைவிட நேரமாயிடுச்சு.
மலர்: அகராதிக்குன்னு ஒரு நாளா? என்னக்கா, புதுசா இருக்கே.
மதி: 2019-ம் ஆண்டிலிருந்துதான் தமிழ் அகராதியியல் நாள் கொண்டாடத் தமிழக அரசு முடிவுசெய்தது. தமிழ்ச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்கம் இந்த விழாவை நடத்தினாங்க.
மலர்: இந்த நாள்ல கொண்டாடணும்னா, ஏதாவது சிறப்புக் காரணம் இருக்கும் இல்லையா ?
மதி: ஆமாம் மலர். அகராதியியலுக்கு (Lexicography) முன்னோடியான வீரமாமுனிவர் பிறந்த நாளைத்தான் தமிழ் அகராதியியல் நாளாக் கொண்டாடுறாங்க.
மலர்: வீரமாமுனிவர் யாருக்கா? அவர்தான் முதல்ல அகராதியைக் கண்டுபிடிச்சாரா?
மதி: நாம இப்பப் பயன்படுத்துற அகரவரிசைப்படியான அகராதியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினவர் அவர்தான்.
மலர்: அதுக்கு முன்னால நமக்கு அகராதிகளே இல்லையாக்கா.
மதி: இல்லன்னு சொல்ல முடியாது. ஆனா இப்ப நாம பயன்படுத்துற அகரவரிசைப்படுத்தப்பட்ட அகராதி முறை நம்மகிட்ட இல்ல. நிகண்டுகள் இருந்துச்சு.
மலர்: நிகண்டுகளா, இந்தச் சொல்லே ஒரு அகராதி இருந்தாதான் எனக்குப் புரியும்போலக்கா.
மதி: நிகண்டுன்னா நாம இப்பப் பயன் படுத்திக்கிட்டிருக்கிற Thesaurus மாதிரிதான். ஆனா உரைநடையா இருக்காது. செய்யுள் வடிவத்துல இருக்கும். பல்வேறு தலைப்புகளுக்குக் கீழ ஒரு சொல்லுக்கு உரிய பல பொருட்களையும் ஒரு பொருளுக்குரிய பல சொற்களையும் தருவதாக இருக்கும்.
மலர்: அப்ப எல்லாருக்கும் புரியற மாதிரி இருக்காதா. நமக்குப் புரியாத சொல்லுக்குத்தான அகராதியையே பார்க்கிறோம்.
மதி: கிட்டத்தட்ட அப்படித்தான். படித்தவர்களால மட்டும்தான் பொருள் புரிஞ்சுக்க முடியும். இருக்கிற மாதிரி நேரடியா ஒரு சொல்லுக்கான பொருள அப்படியே பார்க்கிறமுறை இல்ல. வீரமாமுனிவர்தான் இந்த அகரவரிசை முறைப்படி பொருள் பார்க்கிற அகராதியை நமக்கு அறிமுகப்படுத்தினாரு. ஆனா, அவரோட தாய்மொழி தமிழ் இல்ல. அவர் நம்ம நாட்டுக்காரரும் இல்ல.
மலர்: என்னக்கா சொல்ற..
மதி: ஆமாம் மலர். அவர் இத்தாலி நாட்டுக்காரர். கிறிஸ்தவ பாதிரியார். கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கிங்கிறதுதான் அவரோட இயற்பெயர். கிறித்துவ மறையை இங்கு பரப்புவதற்காக வந்தவரு. தன்னை இந்தத் தமிழ் மக்களோட ஒன்றுபடுத்திக்க நினைச்சாரு. எந்த மக்களோட அவர் இருக்கணும்னு நினைச்சாரோ அந்த மக்களோடதாய்மொழியைப் படிச்சாதான் அவங்களோட பண்பாட்டையும் இலக்கியத்தையும் தெரிஞ்சுக்க முடியும். அதுமட்டுமில்லாம அவங்க மொழியில சொன்னத்தான் சமயத்தைப்பற்றியும் பேச முடியும்னு நினைச்சுத் தமிழை முழுமையாப் படிக்கத் தொடங்கினாரு.
மலர்: ஓ.. முறையாத் தமிழ் கத்துக்கிட்டாரா. செய்யிற பணிய எவ்வளவு ஈடுபாட்டோடையும் அக்கறையோடும் செய்திருக்காரு..
மதி: ஆமாம். முறைப்படி சுப்ரதீபக் கவிராயர்ன்னு மிகப் பெரிய தமிழாசிரியர்கிட்டத் தமிழைக் கத்துக்கிட்டாரு.
மலர்: எப்படி பெஸ்கி வீரமாமுனிவர்னு ஆனாரு?
மதி: காவி உடை அணிஞ்சு, இறைச்சி சாப்பிடாம, தமிழ்நாட்டுத் துறவிகளைப் போலவே இருந்த பெஸ்கி பாதிரியார், தன்னோட இயற்பெயரோட பொருந்திப் போற மாதிரி ஒரு பெயரை வைக்கணும்னு நினைச்சு தைரியநாத சாமின்னு வைச்சிக்கிட்டாராம். பிறகு நல்ல தமிழ்ப் பெயரா இருக்கணும்னு வீரமாமுனிவர்னு பெயரை மாத்திக்கிட்டாராம்.
மலர்: தமிழ் மேல எவ்வளவு பற்று!
மதி: நிகண்டு முறைக்கு மாற்றா சதுரகரா தியைப் படைச்சிருக்காரு. தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில விளக்கம் தரக்கூடிய தமிழ் இலத்தீன் அகராதியையும் உருவாக்கினாராம். இந்த அகராதிதான் முதல் தமிழ் அகரமுதலியாம். தமிழ் போர்த்துக்கீசிய அகராதியையும் உருவாக்கியிருக்காரு. சரி மலர், அவரோட பிற தமிழ்ப் பணிகளைப் பற்றி இன்னொரு நாள் பேசவோம்.
(மேலும் தித்திக்கும்)
கட்டுரையாளர்: தமிழ்த்துறை பேராசிரியை.