

இரண்டே வருட இடைவெளியில் 1904, 1906, 1908 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் நடத்தப்பட்டது ஏன்?
"என்ன இது ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளுக்கான ஆதரவு இப்படிக் குறைந்து கொண்டு வருகிறதே'' என்று மிகவும் வருத்தப்பட்டார் நவீன ஒலிம்பிக்ஸின் தந்தை கூபெர்டின். உடனடியாக இதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்று தீர்மானித்தார்.
1904-ல்தான் ஒலிம்பிக்ஸ் நடந்து முடிந்திருந்தன. என்றாலும் இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். 1906-ல் ஒலிம்பிக்ஸ் நடக்க ஏதென்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நவீன ஒலிம்பிக்ஸ் ஏதென்சில்தானே தொடங்கியது. மீண்டும் 1906-ல் அதே நகரம் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது?
''எந்த ஒரு நகரிலும் ஒருமுறை ஒலிம்பிக்ஸ் நடைபெற்றால் போதும். உலகின் (முக்கியமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின்) முக்கிய நகரங்களில் எல்லாம் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் ஒரு சுற்று ஆடி முடிக்கப்பட்ட பிறகே ஏற்கெனவே ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற நகருக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்" என்ற கருத்து நிலவியது உண்மைதான். ஆனால், நடைமுறை சவுகரியங்களுக்காக ஏற்கெனவே ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற நகரிலேயே மீண்டும் நடைபெறலாம் என்பதை வழக்கமாக்கியது இந்த ஒலிம்பிக் போட்டிதான்.
இரண்டே ஆண்டுகளில் மீண்டும் நடைபெற்ற 1906 ஒலிம்பிக்ஸ் உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா?
"எதற்காக ஒலிம்பிக்ஸ் முடிந்த இரண்டே வருடங்களில் அடுத்த ஒலிம்பிக்ஸ்?'' என்ற தீவிர முணுமுணுப்பு எழவே செய்தது. "அதனாலென்ன நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கி பத்து வருடங்கள் ஆகின்றன. அதன் எதிரொலியாக இந்தக் கொண்டாட்டம்" என்று கூறி அவர்களை வாய் மூடச் செய்தார் கூபெர்டின். அதுமட்டுமின்றி இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறலாம் என்ற யோசனையையும் 1906-ல் கூபர்டின் தெரிவித்தார்.
கூட்டம் எக்கசகமாகக் கூடியது. கிரேக்க மக்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள். பல நாடுகளில் இருந்து அதிகாரப்பூர்வமான குழுக்கள் முதல் முறையாக அனுப்பப்பட்டன. என்றாலும் போட்டி முடிந்த பிறகு பல நாடுகள் - முக்கியமாக தோற்ற நாடுகள் - இந்த இடைப்பட்ட ஒலிம்பிக்ஸ் முடிவுகளை சர்வதேச ஒலிம்பிக்ஸ் குழு கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்றுகடுமையாக வாதிட்டன.
பல நாட்டுப் பிரதிநிதிகளின் எதிர்ப்புக்குப் பிறகு 1906 ஒலிம்பிக் பந்தய முடிவுகள் அதிகாரப்பூர்வமற்றவை என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஒலிம்பிக் சரித்திரத்தில் இருந்தே அந்த முடிவுகளை நீக்கி விடவும் தீர்மானித்தது சர்வதேச ஒலிம்பிக் குழு.
1908 ஒலிம்பிக்ஸை நடத்தும் பொறுப்பு ரோம் நகருக்கு கிடைத்தும் அதை ஏன் கோட்டை விட்டது?
பொருளாதார காரணங்களைச் சுட்டிக்காட்டி அந்த ஒலிம்பிக்ஸை நடத்த முடியாது என்று கைவிரித்தது ரோம். லண்டன் முன் வரவே அங்கு 1908 ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது. தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதற்காக ரோம் பின்னாளில் வருத்தப்பட்டது. மீண்டும் ஓர் ஒலிம்பிக்ஸ் நடத்தும் வாய்ப்பு அதற்கு 52 வருடங்களுக்கு பிறகுதான் கிடைத்தது.(தொடரும்) ஜி.எஸ்.எஸ்.