திசைகாட்டி இளையோர் 10: நாட்டை காப்பாற்றிய ஜாம்பியா சிறுமி

திசைகாட்டி இளையோர் 10: நாட்டை காப்பாற்றிய ஜாம்பியா சிறுமி
Updated on
2 min read

ஆப்பிரிக்கா நாடான ஜாம்பியாவில் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு பலர் இறந்து கொண்டிருந்தனர். தண்டிவி சாமா என்ற சிறுமி படித்து வந்த பள்ளியின் ஆசிரியர்கள் பலரும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு மரித்துப் போனார்கள். ஒரு கட்டத்தில் பள்ளியை ஒரேடியாக இழுத்து மூடிவிட்டார்கள். அன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த 8 வயது சிறுமி தண்டிவிபள்ளிக்கூடம் இனிமேல் செயல்படாது என்ற தகவலை அறிந்து அதிர்ச்சியுற்றாள். அவளுடன் 60க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பள்ளி வாசலில் ஏமாந்து நின்றனர்.

பக்கத்து ஊர் பள்ளியை நோக்கி

எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்ற ஆவலோடு இருந்தவள் தண்டிவி. வேறு எந்தப் பள்ளிக்கூடமும் அவருடைய ஊரில் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த போது ஊருக்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறொரு பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் என்று நின்னத்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற பல மாணவர்களிடம் இது பற்றி பேசினாள். அவர்களையும் ஒப்புக்கொள்ள செய்தாள். அவர்களுடன் பக்கத்து ஊர் பள்ளிக்கு ஊர்வலமாக நடந்து சென்றாள். அந்தப் பள்ளியின் பெயர் 'ஜேக் சிகப் பள்ளி'. அங்கு சென்று, தங்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டினாள்.

குழந்தைகளின் கல்வி ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவர்களை உடனடியாக தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டனர். ஜேக் சிகப் பள்ளி அவ்வளவாக வசதிகள் இல்லாத பள்ளி. பல வகுப்புகளுக்குக் கூரைகள் கிடையாது. கதவுகள்,ஜன்னல்கள் கிடையாது. தான் மேற்கொண்ட முயற்சியால் பள்ளியில் அனைவருக்கும் இடம் கிடைத்ததை மாபெரும் வெற்றியாக தண்டிவி கருதினாள். இந்தவெற்றி அவரின் துணிச்சலை அதிகரித்துத் தொடர்ந்து செயல்பட தூண்டியது.

விழிப்புணர்வு புத்தகம்

தங்கள் ஊரில் எச்.ஐ.வி.யால் பல பெற்றோர்கள் இறந்து போவதால் குழந்தைகள் ஆதரவின்றி கல்வியும் இன்றி தவிக்கும் நிலையை மாற்ற உறுதி பூண்டாள்.

அதற்காக தேவாலயம் உட்பட ஊரின் பல இடங்களில் எச்.ஐ.வி. தடுப்பு குறித்தவிழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டார். அவளின் பேச்சு மக்களின் காதுகளில் விழுந்தது. விளைவாக நிறைய பேர் அவளுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்கள். எச்.ஐ.வி. தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ‘எய்ட்ஸ் நோயுடன் ஒரு கோழி’ என்ற நூலை எழுதினார். பரபரப்பாக விற்பனையான இந்த நூல் ஆப்பிரிக்க நாட்டுப் பள்ளி பாடப்புத்தகமாக இன்று வைக்கப்பட்டுள்ளது.

உலக அமைதிக்கான விருது

"கல்வி எனது பிறப்புரிமை. அதேபோல என் உடல் ஆரோக்கியமும் மிக முக்கியமானது. இவை இருந்தால்தான் ஒரு நாடுதொடர்ந்து முன்னேற முடியும்" என்று பேசினார். அவளுடைய தொடர் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் நாட்டில் மாற்றமும், முன்னேற்றமும் உண்டானது.

2007-ம் ஆண்டுக்கான 'உலக அமைதிக்கான சிறுவர்கள் விருது' தண்டிவைத் தேடி வந்தது. 'குழந்தைகள் உரிமைகள் மற்றும் கல்வி நிதி' எனும் உலகளாவிய நிறுவனத்தினால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதின் மூலம் இந்திய மதிப்பின்படி 70 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அவருக்கு கிட்டியது. அத்தனைப் பணத்தையும் தங்கள் பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக அவர் அர்ப்பணித்தார்.

அந்த நிதியைக் கொண்டு பள்ளி சீரமைக்கப்பட்டது போக சகல வசதிகளையும் கொண்ட சிறுவர்களுக்கான ஒரு பெரிய நூலகமும் தண்டிவின் பெயராலேயே நிறுவப்பட்டது.

குழந்தைகளின் கல்வி உரிமையைப் பற்றியும், எச்.ஐ.வி. தடுப்புப் பற்றியும் தொடர்ந்து பேசி வரும் தண்டிவியை ஜாம்பியா அரசு உயர் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. உலகின் ஐ.நா. உட்பட பலர் தண்டிவியை பேசுவதற்காக அழைக்கின்றனர்.

"சிறுவர்கள் கல்வி கற்க வேண்டும், மாற்றுத் திட்டங்கள் குறித்து தெளிவாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும், பெரியவர்களின் காதுகளில் அவை கேட்கும் வண்ணம் விடாமல் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்!" என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கும் தண்டிவி நமக்கெல்லாம் ஒரு திசைகாட்டி தானே!கட்டுரையாளர்: பேராசிரியர், சமூகச் செயற்பாட்டாளர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in