

பிரியசகி
ஆட்டிசம் குறைபாடு இருந்தும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை பற்றி ஆசிரியர் அன்பு மாணவ மாணவியருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
கீர்த்தி: ஆட்டிசம் இருந்தும் சாதித்த இந்தியர்கள் இருக்காங்களா சார்?
ஆசிரியர்: அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணா நாராயணன் ஒன்றரை வயது வரை பேசவில்லை. மருத்துவர்கள் சில பரிசோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு காது கேட்கவில்லை அதனால் பேச்சும் வராது என்று கூறிவிட்டனர். ஆனால், தொலைபேசி மணிபோன்ற சத்தங்களுக்கு அவர் திரும்புவதைக் கண்ட அவர் தாய் தன் குழந்தையைஇப்படியே விட கூடாது என்று உறுதியெடுத்தார். நான்கு வயதில் அவருக்கு ஆட்டிசம் இருப்பது தெரியவந்தது.
சாந்தி: அப்புறம் அவங்கம்மா என்ன பண்ணாங்க சார்?
ஆசிரியர்: கிருஷ்ணாவின் சென்ஸரி பிரச்சனைகளுக்கு இசை ஒரு நல்ல மருந்தாக இருப்பதும், அவருக்கு புத்தக வாசிப்பில் ஈடுபாடு இருப்பதும் தெரியவர அவருடைய தாய் தொடர்ந்து அவரை அதில் ஈடுபடுத்தினார். புத்தக வாசிப்பால் மொழி வளம் அதிகரித்து கிருஷ்ணா 24-வது வயதில் தன் முதல் புத்தகத்தை வெளியிட்டார்.
ஜீலி: எதைப் பத்தி எழுதினார் சார்?
ஆசிரியர்: தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தாலும், தன்னால் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் ஆட்டிசத்தால் தன்னால் பேச முடியாததாலும், தன் உணர்வைப் புரிய வைக்க முடியாததாலும் தன்னை மற்றவர்கள் பைத்தியக்காரனைப் பார்ப்பது போல குறுகுறுவெனப் பார்ப்பதும், கிண்டல் செய்வதும் தனக்கு எப்படி கஷ்டமாக உள்ளது என்பதைப் பற்றி எழுதினார். இதே போல் இவர் நான்கு புத்தகங்களை எழுதி உள்ளார்.
பிரேம்: சின்ன வயசுல பேச முடியாமஇருந்த டெம்பிள் கிராண்டின் பெருசான பிறகு நல்லா பேசினாங்கன்னு சொன்னீங்க; இப்ப இவரால பேச முடியுமா சார்?
ஆசிரியர்: இல்லை இப்பவும் இவராலபேச முடியாது, கணினியில் டைப் செய்து காண்பித்து தான் சொல்ல வருவதை மனைவிக்கும் மற்றவர்களுக்கும் கிருஷ்ணா புரிய வைக்கிறார்.
மதன்: வீட்ல கம்ப்பியூட்டர் இல்லாத குழந்தைங்க மற்றவர்களைத் தொடர்புகொள்ள ஏதாவது கண்டு பிடிச்சிருக்காங்களா?
ஆசிரியர்: எஸ்.பாலபாரதி என்ற எழுத்தாளரும், அவர் மனைவி லஷ்மியும் தன் ஒரே மகனுக்கு ஆட்டிச பாதிப்பு இருப்பதால இதைப் பற்றி விழிப்புணர்வு பரவச் செய்ய புத்தகங்கள் எழுதிகிட்டிருக்காங்க. அரும்பு மொழி என்ற செயலியை உருவாக்கியிருக்காங்க. இதில் படங்கள் இருக்கும். அதைத் தொட்டால் அதற்கான ஒலி வரும். இதில் சொற்களை ஆடியோவாக பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்கச் செய்யும் போது ஆட்டிச குழந்தையின் மொழித் திறன் வளரும்.
ராஜேஷ்: ஆட்டிசம் இருப்பதை சீக்கிரமே கண்டு பிடிச்சிட்டா சீக்கிரம் சரி பண்ண முடியுமா சார்?
ஆசிரியர்: ஆமப்பா, ஆட்டிசம் குறைபாடு உள்ளவங்களோட பேசமுடியாத நிலை, வித்தியாசமான செயல்பாடுகளை வைத்துதான் அடையாளம் காண முடியும் என்ற நிலை முன்னாடி இருந்துச்சு. ஆனா இப்ப குழந்தையின் கண்மணி அசைவு, இதயத் துடிப்பு போன்றவற்றை வைத்து ஆரம்ப கட்டத்திலேயே ஆட்டிசத்தை கண்டுபிடிக்க முடியும்.
கீர்த்தி: சரிங்க சார், ஆட்டிச பாதிப்புடையவர்க்கு நாங்க எப்படி உதவ முடியும்?
ஆசிரியர்: ஆட்டிசம் குழந்தைகளை பார்க்கும்போது அவர்களை வினோதமா குறு குறுவெனப் பார்க்காமல், கிண்டல் செய்யாமல் இருந்தாலே போதும். அவங்க பெற்றோர் ஏதாவது உதவின்னு கேட்டா நாம தயங்காமல் செய்யலாம். அவங்களை இயல்பாக வாழ விடுவதே அவங்களுக்கு நாம செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி.
கட்டுரையாளர்: எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம்.