Published : 18 Nov 2019 12:23 PM
Last Updated : 18 Nov 2019 12:23 PM

குட்டீஸ் இலக்கியம்-5: மின்ஜினி மாயாவி ஆனது எப்படி?

கிங் விஸ்வா

ஆப்பிரிக்காவின் லுவாங்குவா சமவெளியில்தான் மின்ஜினி என்ற காட்டுப்பன்றி வசித்து வந்தது. ஆனால், வழக்கமான காட்டுப்பன்றிகள் போல இல்லாமல், மின்ஜினி உடலில் முடிகள் எதுவுமில்லாமல் இருந்தது.

மின்ஜினியின் கண்கள், அதன் முக அமைப்பு, அதன் கோரைப்பற்கள், அதன் வாழ்க்கை முறை என்று அனைத்து விஷயங்களையுமே அந்தச் சமவெளியில் இருந்த மற்ற விலங்குகள் கிண்டல் செய்து வந்தன.காட்டுப்பன்றிகள் தங்களுக்கு என்று ஒரு நிரந்தரமான உறைவிடத்தை ஏற்படுத்தாது.

அதனாலேயே மற்ற விலங்குகள் மின்ஜினியை சோம்பேறி என்றும் சொல்லி வந்தன. நண்பர்கள், உறவினர்கள் யாரும் இல்லாமல், ஒவ்வொரு நாளும் மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்த மின்ஜினியை ஒரு பச்சோந்தி ஏளனம் செய்ய, மின்ஜினி மனம் வெறுத்து அந்த சமவெளியை விட்டே சென்றுவிட வேண்டும் என்று முடிவு எடுத்தது.
தன்னைத் தெரிந்தவர்களை விட்டு வெகுதொலைவு பயணம் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே முடிவெடுத்து இருந்ததால், பல ஏரிகளையும் எண்ணற்ற உப்பங்கழிகளையும் கடந்து நாள் முழுக்க ஓடியது மின்ஜினி.

நண்பனாக ஆசைப்பட்ட மீன்

மாலையில் சூரியன் மறையும் வேளையில், வாகா உப்பங்கழிக்கு வந்து சேர்ந்திருந்த மின்ஜினி, உணவுக்காக ஏதேனும் கிழங்குகள் கிடைக்குமா என்று மண்ணைத் தோண்ட ஆரம்பித்தது. அப்போது, “அண்ணே, என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் தூங்க விடுங்கள்” என்று குரல் கேட்க, உற்றுப் பார்த்தது மின்ஜினி. அங்கே, தோண்டிய பள்ளத்தில் கிழங்குக்குப் பதிலாக ஒரு மீன் இருந்தது. தண்ணீர் இல்லாமல் மீன் எப்படி உயிர் வாழும் என்று மின்ஜினி யோசிக்க, அந்த மீன் பேச ஆரம்பித்தது.

“அண்ணே, நான் பார்பெல் வகை மீன். எங்களால் தண்ணீர் இல்லாமல் கூட சிறிது காலம் உயிர் வாழ முடியும். என்னோட பேர் பிவைனோ. எனக்கு உங்களைப் பிடிச்சு இருக்கு. நான் உங்களோட நண்பனாக ஆசைப்படுகிறேன்” என்று அந்த மீன் பேசியது. வாழ்நாளில் இதுவரையில் யாருமே தன்னிடம் நட்பு பாராட்ட வராத நிலையில் இந்த மீன் நண்பனாகக் கேட்டது மின்ஜினிக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. அதைப்பார்த்து பிவைனோ என்னவென்று விசாரிக்க, மின்ஜினி தனது சோகக் கதையைக் கூறியது.

ஒரு ரகசியம்

மின்ஜினியின் இந்த நிலையைக் கண்டு வருந்திய பிவைனோ, “அண்ணே, நீங்கள் இந்தப் பகுதிக்குப் புதியவர் என்பதால், யாருக்கும் உங்களைப் பற்றித் தெரியாது. அதனால், நீங்கள் மழை பெய்யும்போது வானத்தில் இருந்து மீன்களை வரவழைக்கும் சக்தி இருக்கிறது என்று சொல்லி, உங்களை இப்பகுதியின் தலைவனாக்கிக் கொள்ளுங்கள்” என்று யோசனை சொன்னது. இந்த பார்பெல் வகை மீன்களின் ரகசியம் யாருக்குமே தெரியாததால், இத்திட்டத்தை செயல்படுத்த மின்ஜினி தயாரானது.

தான் ஒரு மாயாவி என்றும் மழையை வரவழைத்து, அதில் இருந்து மீன்களை உருவாக்கும் சக்தி பெற்றவன் என்றும் மின்ஜினி சொன்னது. இச்செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. சமவெளியிலிருந்த அனைத்து விலங்குகளும் மின்ஜினி இருந்த இடத்தில் கூடி வேடிக்கை பார்க்க, மழையும் பெய்ய ஆரம்பித்தது.

நட்பா, பதவியா?

மற்ற விலங்குகள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பார்பெல் மீன்கள் மண்ணிலிருந்து துள்ளிக்குதித்தபடி வெளியே வர ஆரம்பித்தது. அப்பகுதியில் இருந்த அனைவரும் மின்ஜினியை பயபக்தியுடன் பார்க்க ஆரம்பித்தார்கள். அனைத்து விலங்குகளும் மின்ஜினியை தலைவனாக ஏற்றுக்கொண்டன. ஆனால், இப்போது ஒரு புதிய சிக்கல் உருவானது.

மீன்களைக் கொத்த பறவைகளும் முதலைகளும் வந்துவிட்டன. தன்னுடைய நண்பனான பிவைனோவைக் காப்பாற்றுவது முக்கியமா அல்லது தனது தலைவர் பதவி முக்கியமா? மின்ஜினி என்ன செய்தது? இது போன்ற அருமையான ஐந்து ஆப்பிரிக்க கானகக் கதைகளை நமக்கு தொகுத்து அளித்திருக்கிறார் எழுத்தாளர் ரீட்டா தத்தா குப்தா. புகழ்பெற்ற வங்காள ஓவியர் தபஸ் குஹாவின் கோட்டோவியங்களில் இந்த மிருகங்கள் அனைத்துமே நம்மைக் கவர்கின்றன.

மின்ஜினி மாயாவி ஆனது எப்படி?
(How Mnjini Became a Magician?)
கதாசிரியர் :
ரீட்டா தத்தா குப்தா
ஓவியர் : தபஸ் குஹா
தமிழாக்கம் : லட்சுமி குருமூர்த்தி
பதிப்பாளர் : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
விலை : ரூ. 20

கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x