Published : 08 Nov 2019 09:54 AM
Last Updated : 08 Nov 2019 09:54 AM

தித்திக்கும் தமிழ் 4- திசைச்சொற்களை தேடிச் செல்வோம்!

கவிதா நல்லதம்பி

நண்பர்களோடு உணவுண்ண அமர்ந்தார்கள் நற்பின்னையும் வெண்பாவும். கிச்சடியுடன் சேமியா கேசரியும் செய்திருந்தார் அம்மா.
வெண்பா: சுவையா இருக்கும்மாநற்பின்னை: திசைச்சொற்கள் நாம இப்பச் சாப்பிட்ட உணவு வகையிலேயே இருக்கு பார்த்தாயா வெண்பா?

வெண்பா: அக்கா, நீ எங்கும் எதிலும் மொழியை பற்றிப் பேசியே ஆகணும்னு உறுதி எடுத்திருக்கியா என்ன?

நற்பின்னை: அப்படியில்ல வெண்பா. கல்வின்னா வகுப்பறைல மட்டும் கத்துக்கறதில்லையே. எல்லாச் சூழல்கள்ல இருந்தும் கத்துக்கறதுக்கு முயற்சிசெய்ய வைக்கிறது தான் உண்மையான கல்வின்னு எங்க ஆசிரியர் சொல்வாங்க.

வெண்பா: சரி,சரி... நீ இங்கயே வகுப்பெடுக்க தொடங்கிடாத. சாப்பிட்டு முடிச்சிட்டுப் பேசிக்கலாம்.

அனைவரும் வந்து முற்றத்தில் அமர்ந்தார்கள். அக்காவைக் கிண்டல் செய்தாலும் வெண்பாவும் அக்காவிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவள்தான். அவளே ஆரம்பித்தாள்.

வெண்பா: அக்கா, இப்பச் சொல்லு. சாப்பாட்டுலயே திசைச்சொற்கள்னு தொடங்கினாயே.

நற்பின்னை: நீ சமத்து வெண்பா. ஆர்வம் நிறைய இருக்கு உன்கிட்ட. நீ திசைச்சொல் பற்றிக் கேட்ட இல்லையா?

வெண்பா: ஆமாக்கா. நாம சாப்பிட்டோமே கிச்சடி, சேமியா கேசரி இதெல்லாம்தான் திசைச்சொற்கள்னு சொல்லப்போறியா?

நற்பின்னை: மிகச் சரி வெண்பா. இரண்டுமே திசைச் சொற்களுக்கான எடுத்துக்காட்டுகள்தான்.

வெண்பா: அப்படியா, எனக்கும் உன்கிட்ட இருந்து கொஞ்சம் அறிவு வந்திருச்சுன்னு நினைக்கிறேன். நீ சொல்லுக்கா, திசைச்சொற்கள்னா என்ன?

நற்பின்னை: தமிழ்நாட்டுக்கு வெளியில உள்ள பிற பகுதிகள்ல பேசப்படுகிற மொழிகளிலிருந்து வந்து நம்மதமிழ்மொழியில் கலந்து வரும்சொற்களைத்தான் திசைச்சொற்கள்னு சொல்வாங்க.

மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, இந்தி, மராத்தி போன்ற இந்திய பிராந்திய மொழிகளில் உள்ள சொற்களும், பாரசீகம், உருது, டச்சு, போர்ச்சுக்கீசியம், ஆங்கிலம் போன்ற பிற நாட்டு மொழிச் சொற்களும், நம்முடைய மொழியில் இருக்கு.

என்ன வெண்பா, திகைப்பா இருக்கா?

எடுத்துக்காட்டுகளாக சில சொற்களைப் பார்க்கலாமா?

வெண்பா: ஆமா அக்கா...கண்டிப்பா சொல்லு.

நற்பின்னை: வாடகை, பண்டிகை, கொலுசு, கம்மல், ஜாஸ்தி, சாம்பார் - தெலுங்குச் சொற்கள்
அட்டிகை, கெடுபிடி, சமாளித்தல், குலுக்குதல் - கன்னடச் சொற்கள்
சவால், கைதி, அசல், கெடுபிடி - உருதுச் சொற்கள்
காகிதம், கில்லாடி, கசாயம், பட்டாணி, சந்து, சலவை - மராத்திச் சொற்கள்
ஜமீன், பஜார் - பாரசீகச் சொற்கள்
அலமாரி, சன்னல், வராந்தா, சுமார், சாவி - போர்த்துக்கீசிய சொற்கள்

வெண்பா: அக்கா, என்ன இது? இந்தச் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லையா? அப்ப கிச்சடியும் சேமியாவும் ?

நற்பின்னை: மராத்தி மொழிச் சொற்கள் வெண்பா. தமிழ்நாட்டோட நான்கு திசைகள்ல உள்ள பகுதி

களிலிருந்து மட்டுமில்லை, செந்தமிழ் நிலத்தோடு சேர்ந்த பன்னிரண்டு நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து கலந்து வழக்கத்தில இருக்கிற சொற்களையும் திசைச்சொற்கள்னு சொல்றாங்க.

வெண்பா: செந்தமிழ் நாட்டோட சேர்ந்த பன்னிரெண்டு நாடுகளா?

நற்பின்னை: ஆமாம். இப்ப இருப்பது போல மாநிலங்கள், மாவட்டங்கள்னு பிரிவுகள் முன்னாடி இல்ல வெண்பா. சிறுசிறு நிலப்பகுதியாகப் பிரிந்திருந்த பகுதிகளை நாடுன்னுதான் சொல்வாங்க. எடுத்துக்காட்டா, பாண்டி நாடு, வேணாடு, குட நாடு, பூழி நாடு, குட்ட நாடுன்னு இருந்துச்சு. அங்க பேசுற வழக்குச் சொற்களும் திசைச் சொற்கள்ல அடங்கும்.

வெண்பா: அக்கா, திசைச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளே இவ்வளவா? அப்ப வடசொற்களையும் சேர்த்தா..

நற்பின்னை: இன்னைக்கு இதே போதும். நாளைக்கு வடசொற்கள் பற்றிப் பேசுவோமா?

(மேலும் தித்திக்கும்)

கட்டுரையாளர்,

தமிழ்த் துறை பேராசிரியை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x