உடலினை உறுதி செய் 4- மனதை ஒருநிலைப்படுத்தும் தாடாசனம்

உடலினை உறுதி செய் 4- மனதை ஒருநிலைப்படுத்தும் தாடாசனம்
Updated on
1 min read

ஆர். ரம்யா முரளி

காற்றோட்டமான, இயற்கை வெளிச்சம் படும் இடத்தில் இயல்பாக உட்கார்ந்த நிலையில், நிதானமாக ஒன்பதில் இருந்து பதினைந்து முறை நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். முதுகுத் தண்டை நேராக்கி சாதாரணமாக சம்மணமிட்டு, கைகளை தியான முத்திரையில் வைத்து அமர வேண்டும் (ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு, மற்ற விரல்கள் நன்றாக நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்). இந்த நிலையில் கண்களை மூடிக்கொண்டு பொறுமையாக மூச்சை இழுத்து விட வேண்டும். இப்போது உடலும் மனமும் யோகப் பயிற்சிக்கு தயார்.

வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது கவனிக்கும் திறன். ஏனென்றால் இந்த பருவம், உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான பருவம். அதனால் இவை இரண்டையும் தரக் கூடிய தாடாசனத்தைத் தெரிந்துகொள்வோம்.

தாடாசனம் செய்வது எப்படி ?

முதலில் கால்களை நேராக சேர்த்து வைத்து நிற்க வேண்டும், கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு, தாடையை சற்று கீழ் நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். முதுகை நிமிர்த்தி நிற்க வேண்டும். பின்னர் மூச்சை உள்ளிழுத்து கைகளை மேலே கொண்டு சென்று, உள்ளங்கைகளை சேர்த்து வைக்க வேண்டும். மெதுவாக மூச்சை விட்டுக் கொண்டே கைகளை கீழே இறக்க வேண்டும்.

சில குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் மூச்சு பயிற்சி கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் கைகளைக் கீழே இறக்கும்போது ‘ஓம்’ போன்று ஏதாவது ஒரு ஒலியை எழுப்பியவாறு கைகளைக் கீழே இறக்கலாம். வாயைத் திறந்து இப்படி ஏதாவது ஒலியை எழுப்பும் போது நம்மை அறியாமல் மூச்சை வெளியிட உதவும். ஆரம்பத்தில் இதை மூன்று முறை செய்ய வேண்டும்.
அடுத்து மூச்சை இழுத்து கைகளை உயர்த்தும்போது, குதிகாலோடு முடிந்த வரையில் உடலையும் மேலே உயர்த்தி 5 நிமிடம் இருந்துவிட்டு, பின் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுபோன்று மூன்று முறை செய்ய வேண்டும்.

தொடர்ந்து இந்த ஆசனத்தைச் செய்து வந்தால் கால்கள் வலுப்பெறும், மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். மன தடுமாற்றம் விலகும், கவன குவிப்புத் திறன் வளரும் என்பதால் மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது. குழந்தைகள் சிறு வயதில் இருந்தே இந்த ஆசனத்தைச் செய்து வந்தால், உயரமாக வளரலாம்.

- (யோகம் தொடரும்)

கட்டுரையாளர்: யோகா நிபுணர்.

எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in